Wednesday, 22 August 2012

மணிரத்னம்- உயிரே

பிறப்பு: முகநூல்

"நான் மணிரத்னம் ஸ்கூலில் இருந்து பயின்று வந்தவன் என்பது தான் என் மரியாதை" -நடிகர் சூர்யா,கோடீஸ்வரன்,விஜய் டிவி.-9/7/12"

சம காலத்தின் மிகச் சிறந்தக் காண் அனுபவப் படைப்பாளிகளுள் ஒருவன். பயணங்களின் காதலன்.இயற்கையின் காண் ஒளிக் கவிஞன். இயற்கை அழகியலின், இந்திய,தமிழ் சொரூபம்.

இந்திய இயற்கையைத் தாண்டி,அதன் வயல் வரப்பு,காடு,கடல்,மலை,பாலை,அருவி,ஆகியவை தாண்டி காட்சியோ, கேமராவோ,கதையோ வைத்து அறியாதவன்.

சொல்லப் போனால்,வைக்க விரும்பாதவன்.

முதல் பல்லவியில் இருந்து (pallavi anu pallavi-83),கிட்டத் தட்ட முப்பது வருடங்கள்,இடையறாத் தவமென அதைக் காப்பவன்.

முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை ஆகிய இந்திய இயற்கை அன்னையின் மாறுபட்ட புன்னைகைகளை மறுபடி மறுபடி தன் சினிமா கேன்வாசில் வரையும் ஓவியன்.

தமிழனால் அதிகம் நேசிக்கப் படுபவன், கொண்டாடப்படுபவன்,புறக்கணிக்கப் படுபவன். இந்திய,தமிழ் வருங்கால சந்ததிகளால் நேசிக்கப் பட இருக்கிறவன்.

மழை,மலை,பனி,வெயில்,குளிர்,கானகம்,அருவிகள்,ஆறுகள்,இரவு,பகல்,இயற்கை,மானுடம்,

இந்தியா,இந்திய சினிமா,மணிரத்னம்!

"உண்மையில் எனக்கு சினிமா எடுக்கத் தெரிய வில்லை என்று தான் நினைக்கிறேன்.என் முதல் படம் பண்ணும் போது எனக்கு அந்த நினைப்பு இருந்தது.ஏனென்றால் நான் யாரிடமும் உதவியாளர் ஆக வேலை பார்த்ததில்லை.சரி,சினிமா எடுத்துப் பழகிக் கொள்வோம்,கற்றுக் கொள்வோம் என்று ஆரம்பித்து கிட்டத் தட்ட இருபது படங்களுக்கு மேல் பண்ணி விட்டேன்.இப்பவும் எனக்கு சினிமா எடுக்கத் தெரிய வில்லை என்று தான் தோன்றுகிறது.ஒவ்வொரு புது படத்தின் ஆரம்பத்தின் போதும் இந்த நினைப்பு மனதில் வந்து உட்கார்ந்து கொள்கிறது."-மணிரத்னம் (IANS-பேட்டியில்)

மணிரத்னம் என்கிற யதார்த்த மௌனத்தை, மனதைத் தொட்டுச் செல்லாமல்,பயணங்களை இந்திய சினிமாவில் முன்னும் பின்னும் நாம் மேற்கொள்ள இயலாது.

மணிரத்னம் இந்தியாவை அதன் இயற்கையை நேசிக்கும் நம் பயண வழிகாட்டி.


the guide.சம கால இந்திய சினிமாவின் ஜன்னல்.

வெயில் ஆரம்பிக்கும் போது,கேமராவைத் திறந்து, வெயில் போகுமுன் காட்சிகளைச் சுடும் சினிமா மளிகைக் கடையின் கடமை,கண்ணியம்,கட்டுப் பாடுகளை மீறிய கலைஞன்.

இயற்கையின் முன் குழந்தையைப் போல தன் கண்களை அகல விரித்த படைப்பாளி.அதை நமக்கு பதிவு பண்ண மலையேற்ற வீரனைப் போல சாகசங்கள்,நிகழ்த்திய,நிகழ்த்தும் இயற்கையின் காதலன்.

முன் பனியையும்,மூச்சு சூடேற்றும் குளிரையும்,அதிகாலைக் காற்றையும்,ஆவேச அருவியின் காதலையும்,மலைகள் தேக்கி வைத்திருக்கிற மர்மங்களையும்,இலைகள் சொட்டுகிற இடையறா காமத்தையும், பகலையும், இரவையும்,பூப் பூக்கும் தருணங்களையும், அக்கறையற்றகடலையும், ஆளற்ற ரயில் நிலையங்களையும்,ஆட்கள் நெருக்கும் மும்பையின் சேரிகளையும்,வாழ்க்கை துளிர்க்கும் நட்சத்திரப் பொழுதுகளையும்,யமுனை ஆற்றின் ஈரத்தையும்,ஆறுகள் சொல்ல மறந்த, சொல்லத் துடிக்கும் காதல் வரலாறுகளையும் சொன்னவன்.


திருமணம் விரும்பாத இளம் பெண்களின் இளமை மனதை மழையோடு,அவர்கள் ஆடும் மௌன ராகமாகவும்,மனைவி மேல் அக்கறை கொண்ட அவள் விரும்பா க் கணவனின் சொல்ல இயலாக் காதலை, ஒரு புது தில்லி நைட் டிரைவ் உடனும்,பனி பொழியும் அற்புத நான்சென்ஸ் காதல் ஒன்றை உதக மண்டல இதயத்தைத் திருடாதேவிலும், அம்பாசமுத்திர விளையாட்டுத் தமிழ்ப் பெண்ணொருத்தியின், ஆவேசத்தை, நாம் நேசிக்கும் நம் தேசத்தின் அக்கறை அற்ற ராணுவ இதயங்களைத் துளைக்கும் அந்த அற்புத மனைவி பந்தத்தை, காஷ்மீர் பனிக் காடுகளுக்குள் திரிய விட்டும்,மணிரத்னம் ஆரம்பித்த ஆல் இந்தியா டூர் இன்றைக்கு வரைக்கும் போட்டி பேக்கேஜ்கள் இல்லா பயணப் பரவசம்.வாழ்வியல் சுற்றுலா.


மௌன ராகம் -புது தில்லி.

இதயத்தைத் திருடாதே- உதக மண்டலம்.

ரோஜா-அம்பாசமுத்திரம்,காஷ்மீர்.

நாயகன்,பம்பாய்,குரு - மும்பை.

உயிரே-ஹிமாச்சல்,அஸ்ஸாம்,வடகிழக்கு மாநிலங்கள்,டெல்லி,கேரளா,லடாக்,பூட்டான்.

கன்னத்தில் முத்தமிட்டால்-புதுச்சேரி, கேரளா, ,ராமேஸ்வரம்.

ராவணன்-மேற்குத் தொடர்ச்சி மலை(western ghats).

மணிரத்னத்தின் சினிமாப் பயணம் என்பதே பயணங்களால் ஆனது தான் பெரும்பாலும்.

அவருடைய கொண்டாடப் பட்ட பயணங்கள் யாரும் அறிந்தவை.

ஆனால், நம்மால் புறக்கணிக்கப் பட்ட,கண்டு கொள்ளப்படாத,அவரின் அற்புத பயணம் ஒன்று தான் நாம் மறுமுறை காண இருப்பது.

தீவிரவாதம் குறித்த அவரின் ட்ரையாலஜி யின் மூன்றாவது (ரோஜா,பம்பாய்,உயிரே )பயணம்.

பிரச்னையின் தீவிரங்கள் அறியாமல் அதைத் தொட்டு சூடு போட்டுக் கொள்பவர் என்பார்கள் விமர்சகர்கள் மணிரத்னத்தை.

எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது.

இந்தியனுக்கும் அது இருக்கிறது.

ஒன்று பொதுவான இந்திய அபிமானம்.

இன்னொன்று இந்திய நடுவண் அரசு, அதன் தேசியத்தின் பேரால் பிராந்தியங்களில் நிகழ்த்தும் அசாத்திய,தாங்க இயலா புறக்கணிப்பு கண்டு கொதிக்கும் மனோபாவம்.

உள்ளுக்குள் நடக்கும் போர்.

ஆகஸ்ட்15,இந்திய சுதந்திர தினம்.

அந்த தினம் கொஞ்சம் கூடக் கொண்டாடப் படாத, கொண்டாடப் பட விரும்பாத,அழுது வடிகிற, ஆயிரம் போலிஸ் மற்றும்,ராணுவ வீரர்களின் துப்பாக்கிப் பாதுகாப்பில் மூவர்ணக் கொடி ஏற்றப் படுகிற,நிதர்சன அவமானம்,தங்களை இந்தியர்கள் என்று சொல்லத் துளி அளவேனும் விருப்பப் படாத, வரலாறு,பூகோளம் கொண்ட மக்களின் மனம் வட கிழக்கு மாநிலங்கள் உடையது. அஸ்ஸாம், மணிப்பூர்,மேகாலயா,அருணாச்சல் பிரதேசம்.

அது இன்று இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது,உத்தரகண்ட்,ஜார்கண்ட்...என்பதாக.

அவர்கள் வேறு.நாம் வேறு.

நாம் தேசியத்தைக் கேள்வி கேட்கிறோம் உள்ளிருந்தே,இது நம் தேசம் என்பதால்.

அவர்கள் நம் தேசியத்தைக் கேள்வி கேட்கிறார்கள், அது அவர்களின் உணர்வு பூர்வமானது அல்ல என்பதால்.

வரலாறு வேறு,பூகோளம் வேறு,தேச விசுவாசத்திற்கு என்று,நம் மண்டையில் அடித்து சொல்லும் நம் மக்கள் என்று நாம் கருதும்,வேற்று மக்கள் அவர்கள்.

இந்தியா சுமக்கும், அடக்குமுறை, சர்வாதிகார, வல்லரசு பிம்பத்தின் கௌரவப் பலி அவர்கள்.

நம் வெற்று,வெட்டி,தேசப் பற்றுக்குத், தினம் தினம் நாசமாய்ப் போகும்,மலை வாழ் மானுடம் அவர்களுடையது.

இந்த உலகில்,சொந்த மக்களை வேவு பார்க்கும் மிகச் சில அயோக்கிய அரசுகளில் ஒன்று சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா. அதை அந்த மலை மக்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பசுமை ஏய்ப்பு என்கிற இந்திய கார்ப்பொரேட் ஆயுதத்தின் வெறிக் கதையை.

இது வேறு.

சினிமா என்பது இந்திய சினிமாவாக அறியப் படுவது தேசியம் போலியாகவாவது பொங்கும் main land cinema வில் தான்.

யோவ்,படம் ஆறு மாசத்துல முடியுமா, தீபாவளி, பொங்கல்,வருஷப் பிறப்பு,அட ஒரு வெள்ளிக் கிழமையாவது ரிலீஸ் பண்ணிடலாமா என்று இயங்கும் யதார்த்த அயோக்கிய ஆலைச் சூழல், நம் மெயின் ஸ்ட்ரீம் சினிமா.

இரண்டுக்கும் இடையில் இயங்க முயன்றவர்கள், பல நேரங்களில் தன் அடையாளமும் அற்று,தேச அடையாளமும் அற்றுத் தோற்று வீணாய்ப் போயிருக்கிறார்கள்.

ஏனெனில்,சினிமா சாதாரணம் அல்ல.ஊடகத்தின் உச்ச கட்டம்.

இங்கு 'inbetween' என்கிற விசயமே கிடையாது. வெற்றி.தோல்வி.வாழ்வு.சாவு.அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில்,சுய மன சாட்சியுடன்,அதிகப் பிழை இன்றி, இயங்குவது தற்கொலை என்று அழைக்கப் படுகிறது வியாபார மொழியில்.

மணிரத்னத்தின் ஒவ்வொரு சினிமா முயல்வும் தற்கொலையை ஒட்டியது தான் வியாபார சினிமாவில்.ஆனால் முடிவு அவருக்கு சாதகமாகத் தான் இருந்திருக்கிறது அநேக தருணங்களில்.

சில சமயங்களில் அவர் வரலாறு காணாத தோல்விகளுடன் தனித்து விடப் பட்டிருக்கிறார்.

ஏனெனில்,அவரின் மனம்,அல்லது அவரின் சினிமா மனம்,இந்திய தேசியவாதத்த்திற்கும்,அதன் பிராந்திய ஏய்ப்பு உண்டாக்கும் கொதிப்புக்கும் இடையில் ஊடாடும் நமது சராசரி இந்திய மனம்.

அவர் சினிமா கலைஞன் என்கிற அளவில், கன்னட, தமிழ் சினிமா மளிகைக் கடையில் அனுபவம் பெற்று,இந்திய சினிமா சூப்பர் மார்க்கெட்டுக்குள் தன்னை,தன் கனவை அடையாளப் படுத்த நினைத்தார்.

ஸ்கூல்,லோக்கல் க்ளப் கிரிக்கெட்,ரஞ்சி,நேஷனல் டீம் என்றால் குட்டிக் கிரிக்கெட் பசங்களுக்கும் புரியும்.சினிமாவில் இருந்து ஸ்போர்ட்ஸ் வரைக்கும் இந்தியா அப்படித் தான்,அரசியல் உட்பட.

ஆகச் சிரமம், இந்திய சினிமாவிலும்,பிராந்திய சினிமா விலும் ஒருங்கே இயங்குவது.

சத்யஜித்ரே,குருதத், ரித்விக் கட்டக், புட்டண்ணா கனகல், அசுதோஷ் கௌரிக்கர், சேகர் கபூர், ஷ்யாம் பெனகல், பிமல் ராய், முகுல் ஆனந்த், சஞ்சய் லீலா பன்சாலி, மது பண்டார்க்கர், மணி கௌல், அபர்ணா சென், கேத்தன் மேத்தா, தீபா மேத்தா, கோவிந்த் நிகாலினி, கிரிஸ் கர்னார்ட், விக்ரம் பட், அடூர் கோபால கிருஷ்ணன், சந்தோஷ் சிவன், என்று நீளும் இந்தியாவின் ஆகச் சிறந்த கனவு கண்டவர்கள், காண்பவர்கள் இன்னமும் தமிழ் சினிமா மளிகைக் கடைக்குள் அப்பரண்டிஸ் ஆகக் கூட நுழைய முடியவில்லை! அதே மாதிரி இங்கே வெற்றி பெற்ற ஜாம்பவான்கள் இந்திய சினிமா சூப்பர் மார்க்கெட் டில் சாதிக்க முடிய வில்லை.அது நம் குற்றமா? இல்லை அவர்களின் குற்றமா? என்பது இன்னமும் மில்லியன் டாலர் கேள்வி தான்,

ஆகவே, ஆகச் சிரமம்,இந்திய,தமிழ் சினிமா மளிகைக் கடையில் வேலை பார்ப்பது. பிழைப்பது. மன சாட்சியுடன் இருப்பது.

அதை,இந்திய சினிமாவில் முதன் முதலில் வெற்றிகரமாக நிகழ்த்தியவர் மணிரத்னம்.


இன்னொருவர் ராம் கோபால் வர்மா.

சும்மா இல்லை தென் சினிமா,அது இந்தியத் தேன் சினிமா என்று நிரூபித்தவர்கள் இவர்கள்.

ஊரெல்லாம் பேர் எடுத்தவர்கள் சொந்த ஊரில் சும்மா இருப்பார்களாம்.

அப்படி கமர்ஷியல் பாக்ஸ் ஆபீஸில் மணிரத்னம், சும்மா இருந்த,இருக்க நேர்ந்த சினிமா உயிரே.

சொந்த செலவில் சூன்யம்.

சினிமா வியாபாரி என்று மணிரத்னத்தை ஒதுக்குபவர்களுக்கு, மேற் சொன்ன அவரின் அனுபவம் அவரைப் பற்றிய வேறு அபிப்ராயத்தையும் தரக் கூடும்.

அஸ்ஸாம்,அருந்ததிராய்,மாவோயிஸ்ட்,மலையக மக்கள்,அவர்தம் பிரச்னைகள் குறித்தெல்லாம் நாம் அவ்வளவாக அறிந்திருக்காத காலம்.அப்போது இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு வேறு(1998).dilse வெளிவந்தது.தமிழில் உயிரே.

தேசியப் பற்றில் சிக்கிக் காணமல் போயிருந்த பிராந்திய உணர்வுச் சிக்கல்களைப் போல,உயிரே வும் காணமல் போயிற்று. ஆனாலும், விமர்சக அடிப்படையில் தில்சே' சிறந்த படமாகவே கருதப் பட்டது.இரண்டு தேசிய விருதுகள் வாங்கியது.பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் Netpac விருது வாங்கியது.யுகே பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் டாப் டென் னில் வந்த முதல் இந்தியப் படமும் அதுதான்.இங்கே,ஆறு பிலிம் பேர் விருதுகளைக் குவித்தது.ஆனாலும் அது கண்டு கொள்ளப் படாத படம் தான்.

இப்போது பாருங்கள் உயிரேவை மறுபடியும்.

எல்லாவற்றிற்கும் பின் ஒரு மனது இருக்கிறது.அந்த மனது அவரவர் அனுபவம் சார்ந்து உருவானது, அந்த மனம் சொல்லும் அத்தனையையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நமக்கு எனினும்,அந்த மனதை நாம் புறக்கணிக்க இயலாது.

உயிரே புறக்கணிக்கப்பட்டவரின் சினிமா.

மணிரத்னத்தின் ஒரே ஒரு அப்ஸ்ட்ராக்ட் (abstract) சினிமா.பயண சினிமா.
சுஜாதாவும்,மணிரத்னமும்,சந்தோஷ்சிவனும்,ஏஆர்ரஹ்மானும்,ஷாருக்கானும்,மனிஷா கொய்ராலாவும், சினிமாவிற்கென சர்ப்பங்களைப் போல் பின்னிப் பிணைந்த தருணம்.

பிளாப்.

அதனால் என்ன? அது இன்றைக்கும் சிறந்த சினிமா தான்.

சிறந்த சினிமா என்பது பாக்ஸ் ஆபீஸ் பரபரப்புகளுக்கு அப்புறமும் கூட உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு மறு காணலில் மறுபடியும் தன்னை அது நிரூபிக்கும்.

உயிரே' அப்படிப் பட்ட சினிமா.

உயிரே.dilse.-1998.

இரண்டு பயணங்களின் கதை தான் உயிரே.இரண்டு மனங்களின் கதையும்,அமர்காந்த் வர்மா(prtogonist),மேக்னா (antagonist).காதலின் ஏழு நிலைகள் கடக்கும் பயணமும் கூட.
ஈர்ப்பு,காமம்,காதல்,மரியாதை,வழிபாடு,ஆவேசம்,இறப்பு.

அமர்காந்த் வர்மா(ஷாருக்கான்) தில்லி வாழ் ஆல் இந்தியா ரேடியோவின் ப்ரோக்ராம் எக்ஸிக்யூடிவ்.இந்திய சுதந்திரத்தின் பொன் விழா(1998) கொண்டாட்டங்களை ஒட்டி,அவன் இந்தியாவின் வட கிழக்குப் பகுதிக்கு,அங்கு வாழும் மக்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய அனுப்பப் படுகிறான்.

இருள் கவிந்திருக்கிற,பனிக் குளிருடன் ஆளற்று நிசப்தத்தில் உறைந்திருக்கிற அந்த ரயில் நிலையத்தில் இரண்டு மனங்களின் முதல் சந்திப்பு நிகழ்கிறது.அழகான சிறு கதை அது.

அமர் தன் சிகரெட்டுக்கு நெருப்பு தேடுகிறான்.நெருப்பைப் போன்ற மனதுடன் இனி அவனை அலைய வைக்கப் போகிற அந்தப் பெண்ணைச் சந்திக்கிறான். வலிகளால் உறைந்து போன,உணர்ச்சியற்ற முகம் அவளுடையது.அவனிடம் இருந்து நழுவிக் கொண்டே இருக்கப் போகிற முகம்,எனினும் அவனைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கப் போகும் மனம்.மிகுந்த உற்சாகமான மனம் ஒன்றும் மிகுந்த பற்றற்ற மனம் ஒன்றும் சந்தித்துக் கொண்டே இருக்கும் அழுத்தம் தில்சே வின் ஒவ்வொரு நிமிடத்திலும் நிரம்பி நம்மை ஆக்ரமிக்கும்.

உயிரே அல்லது தில்சே,பதினைந்து வருடங்களுக்கு முன்,அதன் வெளியீட்டின் போது சந்தித்த பார்வையாளர் சூழல் என்பது மிக வெளிப் படையானது.ஊடக விமர்சனங்கள் தவிர வேறேதும் படத்திற்கு பார்வையாளனை தயார் படுத்தாத சூழல்.வேறு ஒரு களம்,வேறு ஒரு சினிமா என்பதை முன்கூட்டியே சொல்லித் தயார் படுத்த இன்று தொலைக் காட்சி ஊடகங்கள் இயக்குனர் ஆரம்பித்து மொத்த குழுவையும் உட்கார வைத்து அந்த சினிமா வெளியாவதற்கு முன்னே நமக்கு கோடிட்டுக் காட்டி விடுகின்றன.

எல்லா சினிமாவையும் இந்த வசதி காப்பற்றுகிறது என்று சொல்லிவிட முடியாது எனினும்,வித்தியாசமான கதைக் களன் கொண்ட சினிமாக்களை அவை காப்பற்றி இருக்கின்றன,மைனா,வழக்கு எண் என்று உதாரணங்களைச் சொல்ல முடியும்.உயிரே வுக்கும்,தில்சேவுக்கும் 1998-இல் அது நிகழ வில்லை.இது மணிரத்னம் சினிமா என்கிற ஒரே முன் ஏற்பாடு தான் பார்வையாளனின் மனதிற்கு இருந்தது.

உதாரணத்திற்கு,தில்சேவின் மனிஷா கொய்ராலாவின் கதா பாத்திரம்.மேக்னா.

மேக்னா மாதிரியான ஒரு பெண்ணை நாம் அதற்கு முன் எங்கும் சந்தித்திருக்க வில்லை.அந்த கதா பாத்திரத்தின் உடல்மொழி,செயல்பாடுகள் மிக விசித்திரமாக இருந்தன.நாம் தீவிரவாதி என்கிற அம்சத்தை நம் தேசியத்தை விட்டு வெளியில் உள்ள,நமக்கு எதிரான ஒரு மனச் சூழல் என்பதாக யோசித்து வைத்திருந்தோம்.

ராஜீவ் காந்தியைக் கொன்ற தனுவின்,இயக்கத்தின் பிம்பம்,அல்லது காஷ்மீர் முஸல்மான்களின் பிம்பம் நமக்குள் தீவிரவாதத்தின் சாயல் ஆக நிழல் ஆகப் படிந்திருந்தது.நம்முடன் வாழும் நம் சொந்த மக்கள் என்று நாம் நினைக்கும்,ஆனால் அவர்கள் நினைக்காத மக்களின் மனது அப்போது அதிகம் அறியப் பட்டிருக்க வில்லை.

இக் கட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப் பட்டிருக்கும் அந்த மனம் சார்ந்த நியாயங்கள் அன்று பகிரப் பட்டிருக்க வில்லை.ஆனாலும்,அப்போதும் இதே மனம் தான் அவர்களுக்கு இருந்தது.

அவர்கள் இந்திய தேசியத்தின் இன்னொரு முகத்தை,அதன் வன்முறையை அனுபவித்துக் கொண்டு தான் இருந்தார்கள்,இப்போதும் இருக்கிறார்கள்.அவர்கள் உற்சாகம் என்பது நீர்க் குமிழி மாதிரி.தோன்றி யவுடன் யதார்த்தம் உணர்ந்து உடையும் வலி.அவர்களால் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியவே முடியாது.அந்த மனம் மேக்னா உடையது.

அது அமர் மாதிரியான இந்தியனின் எளிய காதல் மனதை,அதன் உற்சாகத்தை இடைவிடாது சந்திக்க நேருகையில் குழப்பமும்,வலியும் தான் மிஞ்சும்.தில்சே வின் அடிநாதம் இது தான்.இதற்கு அன்றைய பார்வையாளர்கள் தங்கள் முதல் காணலில் நிச்சயமாக தயாராக இருந்திருக்க வில்லை.ஆனால் தில்சே டாக்குமெண்டரியும் அல்ல.

சைய சையா பாடலுடன் அமரின் பயணம் நம் மனதிற்குள் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறது.

மலையக இயற்கை என்பது கொட்டிக் கிடக்கும் உற்சாகம்.ஒரு முறையேனும் அங்கு போய் வந்தவர்களுக்குத் தெரியும்,அந்த உற்சாகம் அதற்கடுத்து உங்களின் ஒவ்வொரு வறண்ட மனப் பொழுதுகளிலும் உங்கள் மனதை நிரப்பும் அமுதசுரபி அனுபவம் என்பது.தில்சே வில் இயற்கையின் வெளிச்சப் பகுதியை,அதன் உயிர்ப் பிக்கிற அனுபவத்தை,உற்சாகத்தை,எல்லை இல்லா ஆனந்தத்தை அமர் மூலமாகத் தான் நாம் தரிசித்துக் கொண்டிருப்போம்.

அவன் நம்முடைய மனத்தைக் கொண்டவன்.அதிகம் உழட்டிக் கொள்ளாத மனம்,அதிக நம்பிக்கை, அவசரம், துணிச்சல், காதல்,ரசனை அத்தனையும் ஒருங்கிணைந்து இயங்கும் சராசரி இந்திய மனம்.ஷாருக் கானின் அதி அற்புத உடல்மொழி,முக மொழி வெளிப் பட்டிருக்கும் படங்களில் நிச்சயமாக தில்சே இன்றும் முதல் இடத்தில் தான் இருக்கிறது,அப்படியே.மறக்க முடியாத இருப்பு ஷாருக்கினுடையது தில்சே வில்.தொண்ணுறுகளின் இந்திய இளைஞனின் மனம்.

மலையக இருள் என்பது அச்சம் தரக் கூடியது.அதி விஸ்வரூபம்.அதன் அமைதி நம் நரம்புகளை நிம்மதி அற்று துடிக்க வைப்பது.அது உள்ளுக்குள் பொதிந்து வைத்திருக்கும் ரகசியங்களின் உயர் மட்ட அழுத்தம் நம்மை மிக படபடப்புக்கு உள்ளாக்குவது.அமைதி என்பதன் வேறு வேறு அர்த்தங்கள் உணர்த்தக் கூடியது.

தில்சே வின் இருள் பகுதிகள் மலையக இருளை ஒத்தது.அதன் மனம் மேக்னா உடையது. தொட்டால் அபாயங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும் அதி சக்தி வாய்ந்த மனது.தில்சே வின் இருள் மேக்னா வின் மனம்.அதன் செயல்பாடுகள்.மலையக மனிதரின் தீர இயலா வலி.ஆவேசம்,இயலாமை.அந்த மனம் அது காதல் என்றாலும்,வேறு எந்த கண்றாவி என்றாலும் தன்னை ஒரே மாதிரி தான் நிகழ்த்தி அமைகிறது.மேக்னா மாதிரி.

இன்றைக்கு நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியும்,அருந்தி ராயில் இருந்து குறிப்பிட சில ஆளுமைகள் அந்த இருளுக்குள் நுழைந்து நம் முன் எடுத்து வைக்கும் நிதர்சனங்களால்.எனினும்,தில்சே அந்த பிரச்னை குறித்து அல்ல,அதன் நியாய,அநியாயங்கள் குறித்து அல்ல,அதன் தீர்வு குறித்து அல்ல,அது அந்த இருள் ஆக்ரமித்த மனம் சார்ந்தது.சராசரி வெளிச்சத்துடன் அது இடும் முடிவற்ற போராட்டம் குறித்து.மானுடம் என்பது அதன் பின்னணி சார்ந்து எப்படி மாறி அமைய முடியும் என்கிற யதார்த்தம் குறித்து.

தில்சே வை இரு மனங்களின் போராட்டமாகத் தான் அணுக முடியும்.அணுக வேண்டும்.பிரச்னை சார்ந்து அல்ல.பிரச்னை என்பது தான் ஆதி.எனினும் தில்சே அதன் மனத் தாக்கங்கள் குறித்த சினிமா.இருளும் ஒளியும் மாறி மாறி நிகழும் மனங்களின் போராட்டம்,அதன் காட்சி உச்சம் தில்சே. உயிரே.

தில்சே வில் இயற்கை என்பது அந்த போராட்டத்தின் மௌன சாட்சி.நம்மை அமைதியாக வைத்திருக்கிற தென்றல் போல.தில்சே வின் பயண அனுபவம் வேறு மாதிரி.எல்லை அற்ற ஆச்சர்யங்களும்,அழுத்தங்களும்,திடீர் அருவியைக் கண்ட உற்சாகம் போல சந்தோஷ தருணங்களும்,மலை ஏறுவதன் வலி போல அநாசய இறுக்கமான தருணங்களும் நிறைந்தது.தில்சே ஒரு த்ரில்லரைப் போன்ற துறுதுறு காண் அனுபவம்.

ஒரே ஒரு காட்சியை தில்சே வின் படைப்பு உச்ச அனுபவத்திற்கு சொல்லி அமையலாம்,ஏனெனில் அதன் காண் அனுபவம் மறு பார்வையில் இன்னும் அற்புதமான பரவசம் உண்டாக்கக் கூடியது,அது கண்டு,மனதில் கொள்வதே அதற்கு நாம் தரும் மரியாதை என்பதால்.லடாக் நோக்கிய ஒரு பயணம்.அமரும்,மேக்னாவும்.அவர்கள் பயணித்த பேருந்து செயல் இழக்கிறது.நடந்து செல்லும் சூழ்நிலை.அவர்கள் பாலைவனம் போன்ற பகுதியில் இரவைக் கழிக்க நேர்கிறது.அந்த இரவு,அமர் மூட்டிய கேம்ப் பயரில் வெளிச்சம் கொள்கிறது.

பின்னணியில் அந்த வெளிச்சம். அமருக்கும், மேக்னாவுக்கும் கிசுகிசுப்பான ஒலியில் வாழ்க்கையின் மிக அற்புதமான மூன்று அம்சங்கள் குறித்த உரையாடல் நிகழ்கிறது.அவர்களின் முகம் நெருங்கி வரும்போது,அந்த பின்னணி ஒளி குறைந்து இருள் படிக்கிறது.அந்த முகங்களில் நிகழும் உணர்வு ஏற்ற இறக்கங்களை நாம் கவனிக்க இயலாதபடிக்கு. எனினும் அந்த தருணம் மிக முக்கியமானது.நாம் காண இயலாதது.அவர்கள் மறுபடி விலகி ஆசுவாசம் கொள்ளும் போது வெளிச்சம் அப்புகிறது.நம்மால் அவர்களைத் துல்லியமாகக் காண இயல்கிறது, ஆனாலும்,அவர்களின் மன ஓட்டங்கள் இருளில் ஒளிந்து கொண்டு விட்டன.

வாழ்க்கை என்பது இருளும் ஒளியும் மாறி மாறி நிறையும் பயணம்.

ஒளியில் மறைந்தும்,இருளில் ஒளிர்ந்தும் வெளிப் படும் நுட்ப மனப் பயணம்.

இருள் என்பது இருளும் அல்ல.ஒளி என்பது வெளிச்சமும் அல்ல.

மகா கவி பாரதி சொல்வான் இருள் என்பது குறைந்த ஒளி.

உயிரே,தில்சே அப்படித் தான்.

மணிரத்னத்தின் இருள் அனுபவம் கூட குறைந்த ஒளி,அவ்வளவு தான்.

தவிர,மணிரத்னம் இருளின் காதலனும் கூட.

அவரின் பயணங்களும்,பயணங்கள் கடக்கும் இயற்கையும்,மனங்களைக் கடக்கும் அவரின் சினிமாவும்,அவரின் அந்த காதலுக்கு மௌன சாட்சி.

ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்திய சினிமாவின் மௌன ராகம் மணிரத்னம்.

அதன்,கேட்கப் படாத கானம் தில்சே.உயிரே.

கேளுங்கள்.

Friday, 10 August 2012

மெரீனா கடற்கரை

பிறப்பு: முகபுத்தகம்


காலையில் கடல் காற்றில் வாக்கிங் போனது...மாலையில் சூடான தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலுடன் கடலின் அழகில் மனதைப் பறிகொடுத்தது.. என சென்னைவாசிகள் அனைவரிடமும் மெரீனா பற்றிய இனிய நினைவுகள் நிறைந்திருக்கும். மெரீனாவில் வாக்கிங் போகும் வயோதிகர்கள் முதல்... காதலியுடன் கரை ஒதுங்கும் வாலிபர்கள் வரை அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய ஒருநபர் இருக்கிறார். அவர்தான் மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (Mountstuart Elphinstone Grant Duff).

காரணம் இவர்தான் மெரீனாவுக்கு பேரும் வைத்து, சோறும் வைத்தவர். ஆமாம், இவர்தான் ஜார்ஜ் கோட்டைக்கும் வங்கக் கடலுக்கும் இடையில் வெறும் மணல்வெளியாக இருந்த பகுதியை அழகிய கடற்கரையாக மாற்றியவர். 1881இல் சென்னை துறைமுகம் கட்டப்படும் வரை, இன்றைக்கு காமராஜர் சாலை இருக்கும் இடம்வரைக்கும் கடல் இருந்தது. கடலை ஒட்டி வெறும் சேறும்சகதியும்தான் நிறைந்து கிடந்தது.

1881இல் இருந்து 1886 வரை சென்னையின் ஆளுநராக இருந்தவர்தான் நம்ம கிராண்ட் டஃப். இவருக்கு வங்கக் கடலையும், அதன் கரையையும் பார்க்கும் போது, மண்டைக்குள் மணியடித்ததன் விளைவு, சென்னைக்கு ஒரு அழகிய கடற்கரை கிடைத்தது. 1884இல் நடைபாதை எல்லாம் அமைத்து மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு ஒழுங்கான கடற்கரையை உருவாக்கிக் கொடுத்தார் கிராண்ட் டஃப். அதற்கு 'மெட்ராஸ் மெரீனா' என்றும் பெயர் வைத்தார்.

இத்தாலியில் இருக்கும் சிசிலித் தீவின் நினைவாக இந்தப் பெயரை வைத்ததாக கிராண்ட் டஃப் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மெரீனா (Marine-கடல்) என்றால் "கடலில் இருந்து" என்று அர்த்தம். டஃப் அமைத்துக் கொடுத்த இந்த கடற்கரை அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது.

கோட்டையின் தெற்குப் பகுதியில் இருந்து சாந்தோம் வரை நீண்டு கிடக்கும் இந்த கடற்கரையில் காலாற நடப்பதே ஒரு இனிய அனுபவமாக இருந்தது. அன்னி பெசண்ட் அம்மையார் கூட, தாம் நடத்தி வந்த 'நியூ இந்தியா' பத்திரிகையில் மெரீனாவின் அழகைப் பற்றி விவரித்திருக்கிறார். 1914இல் வெளியான ஒரு கட்டுரையில், 'மெரீனாவைப் போல நீண்ட, அழகிய கடற்கரை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மெட்ராஸின் தவிர்க்க முடியாத அழகு மெரீனா' என்று எழுதியிருக்கிறார்.

சுமார் 13 கி.மீ தூரம் நீளும் இந்த கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது. கடற்கரையில் சிலை வைக்கும் கலாச்சாரம் முதலில் 1959ஆம் ஆண்டுதான் உதித்தது. அந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மெரீனா கடற்கரையில் புகழ்மிக்க உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர், நேதாஜி, சுப்பிரமணிய பாரதி, ஔவையார், கண்ணகி என நிறைய பேர் வந்துவிட்டார்கள். இதில் கண்ணகி மட்டும் சில நாட்கள் விடுமுறையில் அரசு அருங்காட்சியகம் போய் வந்தார். தலைவர்கள் வரிசையில் ஜி.யூ.போப், கான்ஸ்டான்சோ பெஸ்கி எனப்படும் வீரமா முனிவர் என வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடம்கொடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது மெரீனா.

சுமார் 30 ஆண்டு காலம் மெரீனாவில் குடியிருந்த பிறகு, விடைபெற்றுப் போனது சீரணி அரங்கம். 1970இல் கட்டப்பட்ட திறந்தவெளி அரங்கமான இதில் நின்றபடி எத்தனையோ தலைவர்கள் ஏராளமான அரசியல் மற்றும் சமூக உரைகளை ஆற்றி இருக்கிறார்கள். அனல் பறக்கும் அந்த உரைகளால் மாலை நேரக் குளிர்காற்றில் வெப்பநிலையை அதிகரித்துக் கொண்டிருந்த சீரணி அரங்கம், கடற்கரையை நவீனப்படுத்த வசதியாக 2003இல் இடித்துத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மெரீனாவை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியது.

மெரீனாவிற்கு வரும் அனைவரும் கடலுக்கு அடுத்தபடியாக கால் பதிக்கும் இடம், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவிடங்கள்தான். கடற்கரைக்கு எதிர்புறம் சேப்பாக்கம் மைதானம், சென்னைப் பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், குயின் மேரீஸ் கல்லூரி, ஆல் இந்தியா ரேடியோ என பழமையும், புதுமையும் கைகோத்து நிற்கும் சென்னையின் முக்கியக் கட்டடங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடல், மறுபுறம் கண்ணைப் பறிக்கும் கலைநயமிக்க கட்டடங்கள் என இயற்கையின் பிரம்மாண்டத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் ஒருசேர நினைவூட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது மெரீனா கடற்கரை.

Wednesday, 8 August 2012

தமிழ(ர்) வரலாறு

பிறப்பு : முகபுத்தகம்


இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்