Wednesday, 23 May 2012

கருவறை


பிறப்பு: சாவி இதழ்

நான் வெகு நேரமாய் அந்த பெட்டிக்கடையின்அருகிலேயே நிற்பதை பார்த்த கடைக்காரர் "என்னங்க வேணும்? யாரை பார்க்கணும்?" என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தேன்.

நான் அங்கு வந்து நின்று இருபது நிமிஷமாவது இருக்கும். இங்கிருந்து பார்க்கும்போது வீடு தெரிந்தது. வீட்டிற்கு போக பயமாய் இருந்தது. பயம் என்பதை விட வெட்கம் என்று சொல்லலாம். என் சுயநலத்தை எண்ணி நானே வெட்கிப் போனேன்.

கை, கால்கள் ஜில்லிட்டிருப்பது போல தோன்றியது. அப்படியே திரும்பி வீட்டிற்கு போய்விடலாமா என்று கூட எண்ணினேன். ஆனால் திரும்பி போய் என்ன செய்வது? அந்த சுவர்கள், ஜன்னல்கள்... பார்த்ததையே திரும்ப, திரும்ப பார்க்க மனசில் சோகம் தான் படியும். பைத்தியமே பிடித்துவிடும்.

என்ன ஆனாலும் சரி. அப்பா, அம்மா யார் என்ன சொன்னாலும் சரி போவோம் என்று எண்ணிய படி தயக்கத்தை உதறி நடந்தேன். பழகிய தெரு தான் என்றாலும் நிறைய வித்தியாசப்பட்டு இருப்பது போல தோன்றியது - தன்னை போல.

மூன்றரை வருஷங்கள் இருக்குமா? தெருவே இப்போது ரெம்ப அன்னியப்பட்டு போனது போல தோன்றுகிறது. சின்ன வயசில் கிட்டி விளையாடிய தெரு, சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட தெரு. கொஞ்சம் பெரிசாய் ஆன பின் கிரிக்கெட் விளையாடிய தெரு, மீசை துளிர் விட ஆரம்பித்ததும் - நின்று பெண்களை ஆர்வமுடன் பார்த்த தெரு, பரிட்சை நாட்களில் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து நண்பர்களுடன் படித்த தெரு...

சினேகமாய் இருந்த தெரு -இப்போது யாரோவாக...

வீடு வந்துவிட்டது. வாசலில் கோலம். நடுப்பகல் ஆகியும் கலையாமல். கோபியின் மனைவி ஜெயந்தி போட்டிருக்க வேண்டும். முன்பு ஹேமா கோலம் போடுவாள்.

வீட்டிற்கு முன் நின்றேன். வீடு முன்பு போல தான் இருந்தது. ஆனால் வெள்ளையடித்து இருந்தார்கள். கோபியின் கல்யாணத்திற்கு அடித்திருக்க வேண்டும். கதவை தட்டி "அம்மா.. அம்மா.." என்று அழைத்தேன். அச்சமாய் இருந்தது. அச்சம் என்பதை விடக் கூச்சம் எனலாம்.

வெறுமனே கம்பிக்கதவு இழுத்து விடப்பட்டு இருந்தது. உள்ளே ஒரு குழந்தை என்னை பார்த்து, "அம்மா, யாரோ ஒரு மாமா வந்திருக்காங்க" என்றது. யாரோ ஒரு பெண்மணி - விருந்தினராக இருக்க வேண்டும், "யார் வேண்டும்? யார் நீங்க? யாரை பார்க்கணும்?" என்று கேட்டாள்.

இது என் வீடு. இங்கு இருப்பது என் தாய், தந்தை. ஆனால் இந்த பெண் என்னை யார் என்று கேட்கிறாள். கேட்டதும் நியாயம் தானே. இப்போது யாருமே எனக்கு சொந்தம் இல்லையே.

சப்தம் கேட்டு அம்மா"யார்" என்றவாறு எட்டிப் பார்த்தாள். அம்மாவை நேரிடையாக பார்க்க என்னால் முடியவில்லை. தலைகுனிந்து கொண்டேன்.

அம்மா"வாப்பா சிவா" என்று அழைத்தாள். உரிமை எடுத்து கொள்ள, அது போதாதா எனக்கு? உள்ளுக்குள் நுழைந்து செருப்பை கழட்டி போட்டு விட்டு அம்மாவின் கையை பிடித்து கொண்டு கதறி அழ ஆரம்பித்தேன்.

"சிவா... நீ செஞ்சது உனக்கு சரியா படலாம். ஆனா எங்களுக்கு. நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து என் முன்னே நிக்கறே. நா என்ன பண்ண முடியும். நான் எதுவும் சொல்ற நிலையில் இல்லை. இப்பத்தான் உனக்கு வேலை கிடைச்சு ஆறு மாசம் ஆகுது. நீயும் என் பாரத்தை பகிர்ந்துப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ உன்னை மட்டும் பிரதானமா நினைச்சுக்கிட்ட"

"காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்கறே. உனக்கு பின்னால் தங்கை, தம்பி இருக்கிறதை மறந்துட்டே. சுயநலமா சிந்திக்க ஆரம்பிச்சிட்ட. பரவாயில்லை. சுயநலமா சிந்திக்கிறவனால் தான் முன்னுக்கு வர முடியும். நான் மற்ற தகப்பன்களை போல சாபங் கொடுக்க போறது இல்ல. எங்கேயாவது நல்லா இருந்தா சரி" என்றார் அப்பா. அப்பா இத்தனை பேசியதே பெரிசு. அதிகம் பேச மாட்டார். சந்தோஷமானாலும் சரி, துயரமானாலும் சரி - காட்டி கொள்ள மாட்டார். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அம்மா தான் கத்தினாள். "ஹேமாக்கு எப்படி கல்யாணம் ஆகும். நீ நல்லா இருந்துடுவியா" என்று கேட்டு நிறைய திட்டினாள்.

ஹேமா, கோபி, சுந்தர் மூவரும் வரிசையாய் நின்று என்னை வேடிக்கை பார்த்தனர். அவமானமாய் இருந்தது.

"சும்மா இரு கமலா. அவன் வழியை தேடிக்கிட்டான், அவனுக்கென்ன தலையெழுத்தா - நம்ம கூட இருந்து கஷ்டப்படணும்னு. உனக்கு ஒய்வே இல்லன்னு என் விதி சொல்லும்போது அத மாத்த முடியுமா, சரிப்பா. நீ போ சிவா. நீ நிக்க நிக்க அம்மா ரெம்ப திட்டுவா. குடும்பஸ்தன் ஆயிட்டே. பொண்டாட்டி காத்திருப்பா" என்றார்.

எனக்கு கஷ்டமாய் இருந்தது - அப்பாவை ரெம்ப கஷ்டப்படுத்துகிறோமே என்று. அப்பா ரெம்ப பிரயத்தனப்பட்டார். எனக்கொரு நல்ல வேலை கிடைத்தால் - தன் கஷ்டம் குறையுமே என்று. எனக்கு குடும்பத்தை துறக்க அவசரம் இல்லை. ஷோபனா வீட்டில் வரன் பார்த்து நிச்சயதார்த்தம் வரை சென்று விட - வேறு வழி தெரியவில்லை. மணந்து கொண்டோம்.

ஷோபனா வீட்டில் நடந்ததை கேட்டு சங்கடப்பட்டாள். "மாச மாசம் - வீட்டுக்கு பணம் கொடுத்துடுங்க" என்றாள்.

எனக்கு சரியாகப்பட்டது. ஆனால் வீட்டிற்கு போக சங்கடப்பட்டு, தெருவில் ஒரு நாள் அப்பாவை பார்த்து, வார்த்தைகளை கடித்து துப்பி - எப்படியோ சொல்லி பணத்தை கொடுத்தேன். அப்பா சிரித்தார். "இன்னும் பிச்சை எடுக்கிற அளவுக்கு என் நிலை தாழ்ந்து போகல. உழைச்சு சாப்பிட என் உடம்புல தெம்பு இருக்கு" என்றார்.

நானொரு முட்டாள். வீட்டிற்கு போக சங்கடப்பட்டிருந்தால் - ஓர்க ஷாப்புக்காவது போய் கொடுத்திருக்க வேண்டும். இப்படி நடு ரோட்டில் பேசி. அப்பா வாங்காமல் போய்விட்டார்.

ஆயிற்று. மூன்று வருஷங்கள். இடையில் தங்கை ஹேமா கல்யாணம். செல்லவில்லை. "தங்கை கல்யாணத்துக்கு ஒருவர் சொல்ல வேண்டுமா?" என்று ஷோபனா கடிந்து கொண்டும் போகவில்லை.

அடுத்து தம்பியின் கல்யாணம். அதற்கும் போகவில்லை. அதற்கும் போகவில்லை. ஷோபனா வருத்தப்பட்டாள்.

"இதுக்கு நீங்க பின்னாடி வருத்தப்படுவீங்க. பிரிஞ்சு இருக்கிற குடும்பங்கள் இப்படி ஒரு விசேஷத்துல சேர்ந்தா தான் உண்டு. அதை செய்யாம - பழைய மாதிரி கோபப்படுவாங்கன்னு ஏன் நினைக்கிறிங்க. என் வீடு போல உங்க வீடு வெறுப்பை உமிழலயே. ஒரு பக்கத்து உறவாவது கிடைக்கும்னு நினைச்சேன். அது நடக்காது போலிருக்கே" என்றாள். 

இடையில் எனக்கு வேலை மாற்றல். ஊர் மாற்றம். ஷோபனா கர்ப்பம் ஆனாள். கல்யாணமாகி இரண்டே முக்கால் வருஷம் கழித்து. சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள மூன்றாவதாய் ஒரு நபர் இல்லை. ஷோபனா எனக்கு தெரியாமல் - அவள் தன் தாய் வீட்டிற்கு சென்றாள். விரட்டியடித்தார்களாம்.

அவள் அதை பெரிசுபடுத்தவில்லை. "யார் அடிச்சா. அப்பா தானே" என்றாள். என்னை என் வீட்டிற்கு போக சொன்னாள். தான் கர்ப்பமாய் இருப்பதை சொல்ல சொன்னாள். திரும்பவும் பயம், வெட்கம்... போகவில்லை.

மனிதர்கள் எப்போதும் சந்தோஷத்தில் இருந்து விடுவதில்லை. சோகப்புயல் அவர்கள் வாழ்வில் அடிக்கத் தான் செய்யும். எங்கள் வாழ்க்கையிலும் அடித்தது. ஆனால் அது மீள முடியாத புயல்.

ஷோபனாவுக்கு இருபது நாள் டெலிவரிக்கு இருந்தது. அலுவலக வேலையாக வெளியூர் பயணம். கிளம்பிவிட்டேன். நாங்கள் இருந்தது, திருடர்களும் கூட கொள்ளையடிக்க தயங்கும் ஒரு புறநகர் பகுதி. புறநகர் என்று சொல்வதை விட காடு எனலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாய் வீடு.

பிரசவ வலி வந்திருக்கிறது ஷோபனாவுக்கு. வலியால் துடிக்க, உதவக் கூட ஆளினின்றி... நான் சென்ற போது ஷோபனா கனவு போல் இருந்தது எல்லாம். குழந்தைக்கு கருவரையே கல்லறையாக. அவளது உயிரற்ற உடலை பார்த்தபோது, அப்பா, "என் பாரத்தை பகிர்ந்துப்பேன்னு நினைச்சேன். நீ சுயநலவாதியாயிட்டே" என்று கேட்டது கண்முன் தோன்றியது.

எவ்வளவு அழகாக துவங்கினோம் வாழ்க்கையை. அவர்களை நட்டாற்றில் விட்டு வந்ததற்கு இது தண்டனையா?




இப்படியெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? என்னால் தொடர்ந்து அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. தனிமை பயமாய் இருந்தது. பைத்தியமே பிடித்துவிடும் போல தோன்றியது.

ம்மா,"அழாதேப்பா" என்றாள். அப்பா சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கி வந்தார். என்னை பார்த்து, "தம்பி" என்றார்.

"அம்மா" என்று அழுதேன். "அழக்கூடாது" என்று அம்மா கண்ணை துடைத்துவிட்டாள். ஷோபனா சொன்ன மாதிரி எப்போதோ வந்திருக்க வேண்டியவன். இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறேன். அப்பா அருகில் வந்தார். ஆறுதலாய் தொட்டார். "யாருக்கும் உன் மீது கோபம் இல்லை. சாப்பிட்டியா. ஜெயந்தி... காபி கொண்டு வா" என்றார். அம்மாவையே பார்த்தேன். காபியை வாங்கி அம்மாவே எனக்கு புகட்டினாள். கருவிலேயே இறந்த போன என் குழந்தையின் ஞாபகம் வந்தது

ஒரு காதலின் ஆரம்பம்


பிறப்பு: கல்கி

ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி மேடையில் நடைபெற்று கொண்டிருந்தது. எங்கள் ஸ்டாலிலிருந்து பார்த்தால் மேடை ஓரளவுக்கு தெரியும் தான். ஆனாலும் எங்கள் ஸ்டால் ஓனர், ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியை பார்க்க மேடைக்கு பக்கத்தில் சென்றிருந்தார். ஸ்டாலில் நானும், மஞ்சுவும் மாத்திரம் இருந்தோம்.

நாங்கள் பணிபுரிவது மிக்ஸி கம்பெனி ஸ்டால் ஒன்றில். மஞ்சு மேடைப் பக்கம் பார்வையை திருப்பினாள். திடீர் திடீரென்று கூச்சல், ஆரவாரம். எனக்கு அதை வேடிக்கை பார்க்க ஆர்வமில்லை. வேறு விதமான கவலைகள் இருப்பதால், இதன் மீதெல்லாம் ஆசையில்லை. இன்றோடு முடிகிறது - இந்த வீட்டு உபயோக பொருட் கண்காட்சி. பத்து நாட்கள் நடந்தது. தினசரி இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். மொத்தம் இரண்டாயிரத்தி ஐந்நூறு ரூபாய் வரும்.

நாளை திரும்ப வேறு வேலை தேடி அலைய வேண்டும். தீபாவளி வேறு நெருங்குகிறது. நிறைய செலவு இருக்கிறது. மஞ்சு சொன்னாள். "தீபாவளிக்காக டெம்பரவரியா ஒரு கடை போட்டு இருக்காங்க. ஆட்களை வேலைக்கு சேர்க்கிறாங்க. நான் நாளையிலிருந்து போறேன். பதினெட்டு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். வர்றீங்களா?"

நான் எதுவும் சொல்லவில்லை. பதினெட்டு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய். அந்த ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்தால் அதற்கும் செலவு சரியாக இருக்கும்.

அக்காவுக்கு இது இரண்டாவது தீபாவளி. அக்காவுக்கும், மாமாவுக்கும் புது டிரஸ் எடுக்க வேண்டும். தங்கைக்கு சுடிதார் எடுக்க வேண்டும். அக்கா கல்யாணத்திற்கு போடுவதாக சொன்ன மோதிரம் ஒன்றை இன்னும் போடவில்லை. இந்த தீபாவளிக்காவது போட வேண்டும்.

இப்போறைக்கு ஐந்தாயிரம் அவசிய தேவை தான். இல்லை, கடன் வாங்க வேண்டும். இந்த வேலைக்கு போனால் கிடைக்கும் தான். ஆனால் பி.எஸ்.ஸி., முடித்து விட்டு ஜவுளி ஸ்டாலில் துணி கிழிப்பதா என்று சங்கடமாய் இருந்தது. தெரிந்தவர்கள், கூடப்படித்தவர்கள் எவரேனும் அங்கு வரலாம். "என்னப்பா. காலேஜுக்கு போனே. கடைசில இங்க வந்துட்டே" என்று கேட்கலாம்.

எந்த தொழில் பார்ப்பதிலும் கேவலம் இல்லை. ஆனால் நாம் பார்க்கும் வேலையை பிறர் இளக்காரமாய் பார்க்கையில் தொழில் மீது பிடிப்பு போய் விடுகிறது.


"என்ன கணேஷ். உம்முன்னு இருக்கீங்க. என்ன சிந்தனை? "மஞ்சு கேட்டாள்.

"ஒண்ணும் இல்ல. நாளைய பொழுதை எப்படி துவக்குறதுன்னு தெரியலை. அதான் சிந்தனை. பத்து நாள் பொழுது எப்படியோ போயிடுச்சு"

"விடுங்க. கொஞ்ச நேரம் ப்ரோக்ராமை பாருங்க. ரெம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு" என்றாள்.

கண்காட்சியுடன் தினசரி ஏதாவது ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. தினசரி குலுக்கல் முறையில் பரிசுகள், ஜனங்களை கண்காட்சிக்கு வரவழைக்க இத்தனையும் செய்ய வேண்டி உள்ளது. மேடையில் நடக்கும் நிகழ்ச்சி ஓரளவு தான் தெரிந்து. இருந்தாலும் ஸ்பீக்கர் வழியே நிகழ்ச்சியை தெள்ள தெளிவாக கேட்க முடிந்தது. அசட்டுத்தனமான கேள்விகள். அதை விட அசட்டுத்தனமான பதில்கள். கண்காட்சிக்கு வருபவர்களை எல்லாம் பார்க்கும்போது, மக்கள் இத்தனை பணக்காரர்களாய் இருக்கிறார்களா... பணம் இவ்வளவு கொட்டி கிடக்கிறதா என்று ஆச்சர்யமாய் இருக்கும்.

எனக்கு இங்கே காலையில் ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணி வரை தொடர்ந்து பனிரெண்டரை மணி நேரம் பணி செய்தால் தான் இருநூறு ரூபாய். அந்த இருநூறு ரூபாய்க்காகவே எவ்வளவு போராட வேண்டி உள்ளது. ஆனால் இங்கே ஒரு ஸ்டாலில் வினேதமான விளையாட்டு என்று இருநூறு ரூபாய் வசூலிக்கிறார்கள்.

"எல்லோருக்கும் பிரச்சனைகள், கவலைகள் இருக்கிறது கணேஷ். நாம் ஏன் ஓயாம அதையே நினைக்கணும். கொஞ்ச நேரம் ப்ரோக்ராமை பாருங்க. கவலைகளை மறங்க" என்றாள் மஞ்சு.

ஞ்சுவும் என்னை மாதிரியே கஷ்டஜீவனம் நடத்தி கொண்டிருப்பவள் தான். என்னை மாதிரியே நாளையை பற்றிய கவலைகள் அவளுக்கும் நிறைய உண்டு. ஆனாலும் தன்னை மகிழ்ச்சியுடன் வைத்து கொண்டிருப்பவள்.

"நா இந்த ப்ரோக்ராமை பார்ப்பதால் எனக்கேதும் பலன் கிடைச்சா பார்க்கலாம். எனக்கென்ன கிடைக்க போகுது" என்றேன்.

மஞ்சு சிரித்தாள். "பணம் கொடுத்தா தான் பார்ப்பீங்களா. என்கிட்ட பேசுவதற்கு கூட காசு கேட்பீங்க போலிருக்கு"

"ம். உங்கக்கிட்ட பேச காசு கேட்க மாட்டேன். பிறர் கிட்ட பேச காசு கேட்டாலும் கேட்பேன்" என்றதற்கு,

மஞ்சு சிரித்தாள். மஞ்சுவால் சிரித்து கொண்டே இருக்க முடிகிறது. அவளது வீட்டு துயரங்களோடு ஒப்பிடுகையில், என் வீடு எவ்வளவோ மேல். பெரிய குடும்பம். குறைந்த வருமானம். இவள் வீட்டில் யாருக்கும் பொறுப்பு என்பதே இல்லை. இவள் தப்பி பிறந்துவிட்டாள். பாசம் இவளை அலைக்கழிக்கிறது. குடும்பச் சுமையை தூக்கி தூக்கி கூன் விழுந்து விட்டதோ என்று கூட தோன்றும். லேசான கூன் உண்டு அவளுக்கு இயற்கையாகவே.

இந்த பத்து நாளாக தான் மஞ்சுவின் சினேகம். காலேஜுக்கு போய் இருக்கிறாள். இரண்டாம் வருஷத்தோடு நிறுத்திவிட்டார்கள். இவள் கல்லூரி படிப்பை முடித்திருந்தால், இவளது புத்திசாலித்தனத்திற்கு நல்ல வேலை கிடைத்து நன்றாய் இருந்திருப்பாள் என்று தோன்றும்.


னேகமாய் இனி இன்று வியாபாரம் இருக்காது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிறைவு விழா நடக்கும. பரிசளிப்பு விழா நடக்கும். வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டியது தான். இன்று வியாபாரம் கொஞ்சம் மந்தம் தான். நாலைந்து நாட்கள் நல்ல வியாபாரம்.

"என்ன கணேஷ். நாளைக்கு அங்க வேலைக்கு வர்றிங்களா" என்று திரும்ப மஞ்சு கேட்டாள்.

"நைட் தான் முடிவு பண்ணனும்"

"நான் போறேன். பதினெட்டு நாளைக்கு நாலாயிரம் சம்பளம். அது போக தீபாவளிக்கு முந்தின தினம் டிரஸ் கொடுத்தாலும் கொடுப்பாங்க" என்றாள்.

"நீங்க ஏன் ஏதாவது ஒரே இடத்தில் வேலை பார்க்கக்கூடாது. இங்கப்பத்து நாள், அங்கப்பத்து நாள்ன்னு கஷடப்பட்டுட்டு"

"சில இடங்கள்ல ஓரு மாசம் சம்பாதிக்கிறதை இங்க பதினைஞ்சு இருபது நாள்ல வாங்கலாம். அதோட படிக்கிறதால் இப்படி வேலை பார்க்கிறதால் நேரம் கிடைக்குது. அப்புறம் ஒரே இடத்தில் இருந்தா, நம் குடும்ப சூழ்நிலையை புரிஞ்சிட்டு சிலர் தொந்தரவு தர்றாங்க. எனக்கு இந்த மாதிரி வேலை பிடிச்சிருக்கு"

"இப்படியே அலையே வேண்டியது தானா. கல்யாணம் பண்ற ஐடியாவெல்லாம் இல்லையா?"

"அது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. நானா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் உண்டுன்னு நினைக்கிறேன்" என்றாள்.

"உங்க கதை தான் என் கதையும். நீங்க சொன்ன மாதிரிதான் என் நிலையும்" என்றேன்.

மஞ்சுவை என்க்கு பிடிக்கும். எனக்கேற்ற குணம். மணந்து கொண்டால் வாழ்க்கை நிச்சயம் சுகமானதாய் தான் இருக்கும். என்னை அவளுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. நான் சிகரெட் பிடிப்பதை குற்றம் சொன்னாள்.

"உங்க வருமானத்துக்கு நீங்க ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கு சிகரெட் பிடிப்பது - மன்னிக்க முடியாத குற்றம். பணத்தை சாம்பலாக்குறிங்க" என்றாள்.

"ரெம்ப உரிமை எடுத்துட்டேனா" என்று கேட்டாள் இங்கு வந்த நான்காம் நாள். ஏனோ பிறகு சிகரெட் பிடிக்கவில்லை. இந்த ஆறுநாளாய் சிகரெட் பிடிக்கவில்லை. எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை. இனி சிகரெட்டை தொட வாய்ப்பில்லை.

பஸ் ஸடாப்பிற்கு வந்தோம். பத்து நாள் வாழ்க்கை முடிந்து விட்டது. பையில் பத்து நாள் சம்பளம் இருந்தது. தினசரி பஸ் ஸ்டாப் வரை சேர்ந்து தான் வருவோம். பிறகு அவரவருக்கான பஸ்ஸில் ஏறி கொள்வோம்.

"என்ன நாளைக்கு வர்றிங்களா?" என்று கேட்டாள். மறுக்க முடியாமல் போனதற்கு பணம் மட்டுமே காரணமாக தோன்றவில்லை.

மீசைக்கார அப்பா


பிறப்பு:கல்கி இதழ்

ப்பா இறந்த செய்தி செல்விக்கு இரவு பனிரெண்டு மணிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. செல்வியின் வீட்டில் தொலைபேசி இல்லை. செல்வியின் பக்கத்து வீட்டுக்கு, செல்வியின் அண்ணன் தகவல் சொன்னான்.

"ஸாரி மேடம். நேரங் கெட்ட நேரத்துல எழுப்பினதுக்கு. நான் செல்வியின் அண்ணன். அப்பா தவறிட்டாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஹார்ட் ஃபெயிலியர் ஆயிடுச்சு. தயவு பண்ணி சொல்லிடுங்க..." என்று சொல்லிவிட்டு டெலிபோனை வைத்து விட்டான்.

பத்மாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. செல்வியின் அப்பாவை அவளுக்கு நன்றாக தெரியும். செல்விக்கு அப்பா என்றால் உயிர். எப்போதும் "அப்பா... அப்பா" என்று தகப்பனாரை பற்றிய பேச்சு தான்.

"இந்த பெண்ணுக்கு அப்பாவின் மீது இத்தனை ஈர்ப்பா" என்று வியப்பாள். பத்மா தன் அப்பாவோடு அதிகமாக பேசியதில்லை. வயசுக்கு வருவதற்கு முன் பேசியதோடு சரி. சடங்கான பிறகு பத்மா, அப்பாவோடு பேச கூச்சப்படுவாள், பயப்படவும் செய்வாள். அப்பாவும் கெத்தாக இருப்பார். சகஜமாக பேசமாட்டார். அப்பா என்றாலே பத்மாவுக்கு ஒரு விதமான அச்சமே. ஆனால் இந்த செல்வி எதற்கெடுத்தாலும் அப்பா அப்பா என்று மாய்ந்து போகிறாள்" என்று வியப்பாள்.

செல்விக்கு சொந்த ஊர் மதுரை. இங்கே ராஜபாளையத்தில் மணம் முடித்து இருக்கிறார்கள். செல்வியின் அப்பா சப்-இன்ஸ்பெக்டர். செல்வியை பார்க்க வருவார். ஊருக்கு போகும்போது செல்வி அப்பாவை பஸ்ஸ்டாண்ட் வரை சென்று வழி அனுப்பி விட்டு தான் வருவாள். "எங்க அப்பாவை மாதிரி யாரும் இல்லை" என்பாள்.

"பெருமையாக எப்பவும் அப்பா புராணம் பாடுறியே. உன் புருஷனுக்கு கோபம் வராதா?" என்று கேட்பாள் பத்மா.

"வரும்" என்று சிரிப்பாள்.

பத்மாவுக்கு அச்சமாக இருந்தது. "சாவு தகவலை எப்படி சொல்வேன்? செல்வி தாங்குவாளா? அப்பால் என்றால் உயிராயிற்றே". அம்மா எல்லாம் சும்மா. எனக்கு அப்பா தான் எல்லாம்" என்பாளே.


தவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அப்போது தான் ஞாபகம் வந்தது. செல்வியின் கணவர் வேலை நிமித்தமாய் வெளியூர் சென்றிருப்பது. செல்வியின் கணவர் விற்பனைப்பிரதிநிதியாக இருக்கிறார். செல்வியின் வீட்டுக் கதவை தட்டினாள். எழுந்து வந்து கதவை திறக்க கொஞ்சம் நேரம் ஆயிற்று. கதவு அருகே நின்றப்படியே கதவை திறக்காமல் "யாரு... யாரு..." என்று இரண்டு தடவை கேட்டாள் செல்வி.

"நான் தான் பத்மா வந்திருக்கேன்"

"என்னக்கா?" செல்வி கேட்டாள். இரண்டு பேருக்கும் ஒரே வயசு தான். இருந்தாலும் பத்மா இரண்டு குழந்தைகளை பெற்று விட்டதால், பத்மாவை அக்கா என்று தான் அழைப்பாள். "முக்கியமான விஷயம். கதவை திற" என்றாள்.

செல்வி கதவை திறந்தாள். "உள்ளே வா" என்று செல்வியை இழுத்து கொண்டு உள்ளே வந்தாள். "என்னக்கா?"

எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். "என்னக்கா?"

"உங்கப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம். ரெம்ப சீரியஸாம். ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்களாம். உன்னை உடனே வர சொல்லி உங்க அண்ணன் போன் பண்ணினார்"

"அண்ணன் போன் பண்ணுச்சா? அப்பாவுக்கு என்னாச்சு? வேறே என்ன சொல்லுச்சு அண்ணே " பதறினாள் செல்வி.

"ஹார்ட் அட்டாக்காம். உடனே வரச் சொன்னாங்க" என்றாள் பத்மா.

"அய்யோ அக்கா... அவரும் ஊருல இல்லையே. என்ன பண்ணுவேன். அக்கா உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நீங்க எனக்கு துணைக்கு வாங்க. அவர் வந்ததும், உங்க வீட்டுக்காரர் தகவல் சொல்லட்டும். வாங்கக்கா, நான் அப்பாவை பார்க்கணும்" என்று அழத் துவங்கிவிட்டாள்.

"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" என்று சொன்னதற்கே இத்தனை அழுகை என்றால் - இறந்தது தெரிந்தால். அய்யோ கடவுளே. இவள் என்னை வேறு கூப்பிடுகிறாள். நான் வர மறுத்தால் இவள் இங்கேயே இருந்து விடக்கூடும். செல்வியை அழைத்து கொண்டு புறப்பட்டாள்.

பத்மாவின் கணவனே பஸ் ஸ்டாண்ட்வரை வந்து வழி அனுப்பினார்.

"பார்த்து போங்க. இரண்டு பொம்பளைங்களா போறிங்க. கவனம். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி ஆட்டோவுல போகாதீங்க. நிலைமை சரியில்லை. டவுன் பஸ்லேயே போங்க. நைட் சர்வீஸ் பஸ் எப்போதும் உண்டு" என்று சொல்லி அனுப்பினார்.


"ப்பா ரெம்ப சிகரெட் பிடிப்பார். அதான் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு" என்றாள். "அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது" என்று தனக்கு தானே பேசி கொண்டாள்.

பத்மாவுக்கு தன் அப்பா இறந்த நாள் ஞாபகத்துக்கு வந்தது. அப்பா தவறி விட்ட சேதியை, சுப்பையா சித்தப்பா தான் வந்து சொன்னார். ஏனோ தெரியவில்லை, இழப்பாக தெரியவில்லை. அழுதோமா என்று கூட ஞாபகம் இல்லை. அவர் இருந்த போது எந்த சந்தோஷமும் இல்லாமல் இருந்தது. இறந்த பின் எந்த வருத்தமும் இல்லாமல் போனது.

ஒரு தடவை செல்வி சொன்னாள். "அப்போ எனக்கு அஞ்சு, ஆறு வயசு இருக்கும். மீசைக்காரா னு கூப்பிடுவேன். அப்பா முத்தம் கொடுக்கும்போது மீசை குத்தும். அப்பா போலீஸ்காரராச்சே. கடா மீசை வைச்சிருப்பார். குத்துது... நீ முத்தம் கொடுக்காதேன்னு" அழுதேனாம். மறு நாளே அப்பா மீசையை எடுத்துட்டார். "மனுஷன் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டதும் தியாகம் பண்ண பழகிக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வார். அப்பா எனக்காக செய்த முதல் தியாகம் மீசை"

செல்வி தன்னுடைய அப்பாவை பற்றி பேசும் போதெல்லாம், பத்மா தன் அப்பாவை நினைத்து பார்த்து கொள்வாள். அப்பா தனிபிறவி. பிள்ளைகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பார்.

ஒரு தடவை நானும் அப்பாவும் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தோம். ஒரு மனிதர் கல் தடுக்கி கீழே விழுந்துட்டார். "நான் ஷேம் ஷேம்... பப்பி ஷேம்னு" சிரிச்சு குதிச்சேன். அப்பா கன்னத்துல அறைஞ்சிட்டார். அப்பா அந்த பத்து வயசு வரை அடிச்சதே இல்லை. இதுக்கு ஏன் அடிக்கணும். கீழே விழுந்தவர், "பரவாயில்லை. சின்னப்புள்ளை தானே. விடுங்க சார்" என்றார்.

ஆனா அப்பா என்னை இலேசுல விடல. புத்திமதி சொன்னார். பிறர் விழுவதை பார்த்து நாம் சிரித்தால், நாம் விழுவதை பார்த்து இன்னொருவன் சிரிப்பான். யாருக்கும் யார் மேலேயும் அனுதாபம் இல்லாமல் போயிடும். அப்புறம் மிருகங்களா தான் இருப்போம்னு சொன்னார். இதெல்லாம் பத்து வயசு பெண்ணுக்கு புரியுமான்னு அவர் நினைக்கலை. அப்புறம் ரோட்டுலயும் சரி, வாழ்க்கையிலும் சரி, யார் தடுக்கி விழுந்த போதும் நான் சிரிக்கலை. பல சமயம் தோணும். அப்பாவோட சுபாவத்துக்கும் அவர் உத்யோகத்துக்கும் சம்பந்தமே இல்லைன்னு. ஆனா இந்த மாதிரி சுபாவம் உள்ளவங்களும் போலீஸ் துறைக்கு தேவைன்னு நினைச்சுப்பேன்" என்றாள் செல்வி.


ஸ்ஸில் ஒயாமல் அப்பாவை பற்றி பேசி கொண்டே வந்தாள்.

 "அப்பா ஒரு சிறந்த கவிஞர். ஆனா அம்மாவுக்கு கழுதையை தான் தெரியும். கவிதைன்னா என்னன்னு தெரியாது. நான் கூட அம்மாவை திட்டுவேன். என்னம்மா இப்படி இருக்கே. அப்பாவை இன்சல்ட் பண்ற மாதிரி ஞான சூன்யமா இருக்கேன்னு. அப்பா மேலே பேச விடாம என்னை தடுப்பார். அவளோட சுபாவம் அது. அவ அப்படியே இருக்கட்டும். அப்படி அவ பாசாங்கு இல்லாம இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு" என்பார்.

"எத்தனை அருமையான அப்பா. நிச்சயம் அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது" என்று கண்களை துடைத்து கொண்டாள்.

பத்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. செல்வியை தன் தோளில் சாய்த்து கொண்டாள்.

"ஒரு சமயம் - நான் காலேஜ்ல படிக்கும்போது ஒரு பையனை லவ் பண்ணினேன். அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. படிச்சு முடி. பிறகு பார்த்துக்கலாம்னு சொன்னார். வேற ஒண்ணும் சொல்லல. கொஞ்ச நாளில் காதல் என்பது வெறும் மாயை என்று புரிஞ்சது. ஒரு வேளை அப்பா காச்சு மூச்சுன்னு கத்தி அடிச்சு, உதைச்சு இருந்தாருன்னா நான் அவன் கூட ஓடிப்போய் இருப்பேன்" என்று செல்வி சொன்னபோது பத்மாவுக்கு, தன் தகப்பனின் ஞாபகம் வந்தது.

பெண்கள் ஜன்னல் பக்கம் நின்று வேடிக்கை பார்த்தாலே அவ்வளவு கோபம் வரும் பத்மாவின் அப்பாவுக்கு..

"அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாதுலக்கா?"

"சீரியஸ்ன்னு சொன்னாங்க" என்று மழுப்பினாள்.

"சீரியஸ்னா என்ன, அப்பா பிழைச்சுப்பார். அப்பா பிழைச்சுப்பார். அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. ரெண்டு மூணு தடவை ஹார்ட் அட்டாக் வந்தவங்களே பிழைச்சிருக்காங்க. எழுபது, எண்பது வயசுக்காரங்களே கல்லு மாதிரி இருக்காங்க. அப்பாவுக்கு ஐம்பத்தி மூணு வயசு தானே ஆகுது. அதுவும் எக்சர்சைஸ் பாடி. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது" தனக்குள்ளாக புலம்பினாள்.

எப்படி தெரிவிப்பது. அங்கு போய் சேர்ந்த பின் அவளாக தெரிந்து கொள்ளட்டும்.


ஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது. மெள்ள இறங்கினார்கள். பத்மாவுக்கு மனசு பக்பக்கென்று அடித்து கொண்டது. செல்வியால் அப்பாவின் இழப்பை தாங்க முடியுமா? அந்த இரவிலும் நைட் சர்வீஸ் பஸ்ஸில் கூட்டமாய் தான் இருந்தது.

பஸ் பிடித்து வீடு வந்த சேர்ந்தபோது - பந்தல் போட்டு கொண்டிருந்தார்கள். வீட்டின் முன், வரிசையாய சேர்கள். மரப்பெஞ்சுகள்... மஞ்சள் பல்பு எரிந்து கொண்டிருந்தது.

செல்விக்கு புரிந்துவிட்டது.

"பொய் தானேக்கா சொன்னே. அப்பா தவறிட்டார்ல" பத்மாவின் தோளை பிடித்து கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள்.

"அப்பா பிழைச்சுப்பார். உயிரோட இருக்காருன்னு நம்பி வந்தேன். அங்கேயே இறந்தது தெரிஞ்சிருந்தா அழுகையோடு போயிருக்கும். அப்பா உயிரோட இருக்காருன்னு நம்பி வந்து இப்ப ஏமாத்தமா போச்சு... அப்பா" நெஞ்சே வெடித்து சிதறிவிடுவது மாதிரியான அழுகை.

பத்மாவுக்கும் அழுகை வந்தது. தன் அப்பா இறந்த அன்று கூட வராத அழுகை.

Friday, 18 May 2012

Photographer Robert Capa


போர்க்கள புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே

1938ம் ஆண்டு பிக்சர் போஸ்ட் என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் நாளை முதல் பிரசுரமாகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு புகைப்படக்கலைஞருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து வெளியான இந்த அறிவிப்பு, யார் அந்த புகைப்படக்கலைஞன் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை அவரை அறியாதவர்களுக்கு ஏற்படுத்தியது.
யார் அந்த ராபர்ட் கபே; வாழ்வையும், சாவையும் போர்க்களமாக்கிக்கொண்ட புகைப்படக் கலைஞர். உலகை உலுக்கிய போர்ப்புகைப்படங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர். நாற்பது வயதில் மரணத்தை தொட்டவர். அந்த நாற்பதாவது வயதிலும் கேமிராவுடன் போர்களத்தில் நின்றவர். இதனால் உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்களின் மனதை வென்றவர். 
ஹங்கேரியில் பிறந்த இவரது இயற்பெயர் என்ட்ரி ப்ரைடுமேன். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சந்தர்ப்பம் இவரை புகைப்படக் கலைஞராக்கியது. எழுத்தில் வார்க்க நினைத்த உணர்வுகளை புகைப்படங்களில் கொண்டுவர முடிவு செய்தார்.புகைப்படக்கலைக்கு தீவிரமானதொரு முகத்தை தருவது போர் புகைப்படங்களே என்பதை உணர்ந்து போர் புகைப்படங்களை எடுக்க துணிந்தார். போர் வீரர்களுக்கு இணையான வீரமும், துணிச்சசலும், சாகசமும் இருந்தால் மட்டுமே போர்க்கள புகைப்பட கலைஞனாக இருப்பது சாத்தியம். இதெல்லாம் கூடுதலாகவே கொண்டிருந்த என்ட்ரி ப்ரைடுமேன், ராபர்ட் கபே என்ற புனைப்பெயருடன் போர்ப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.



போர்க்கள புகைப்படங்கள் என்றாலே வீரர்கள் அணிவகுப்பு, பீரங்கிகளின் முன்னேற்றம், குண்டு துளைத்த கட்டிடங்கள், பிணக்குவியல்தான் காட்சி படுத்தப்படும். அந்த மாதிரியான சூழலில் ஸ்பானிஷ் போரின் போது ஸ்பானிஷ் வீரர் ஒருவர் குண்டடிபட்டு சாய்ந்து விழும் படம் ஓன்றை ராபர்ட் கபே எடுத்தார். சாவின் எஞ்சியிருந்த கடைசி நொடியினை பதிவு செய்த அந்த படம் வு என்ற பிரெஞ்சு பத்திரிகையில் முதலில் வெளிவந்தது. அப்போது கூட அந்த படம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தை லைப் பத்திரிகை உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் சரியும் போர்வீரன் என்று தலைப்பிட்டு பெரிதாக வெளியிட்டதும் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் தத்தம் கண்ணோட்டத்துடன் அந்த படத்தை மறுபிரசுரம் செய்தன.

இதன் பிறகு ராபர்ட் கபேயின் பெயர் உச்சத்திற்கு சென்றது. இவரை ஒப்பந்தம் செய்து போர்க்களத்திற்கு புகைப்படம் எடுக்க அனுப்புவதற்கு புகழ் பெற்ற செய்தி ஸ்தாபனங்கள் போட்டியிட்டன. அவரும் இரண்டாம் உலகப்போர், ஜப்பானியப் போர், அரபு- இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து போர்களங்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஆயிரக்கணக்கான சாகவரம் பெற்ற படங்களை பதிவு செய்தார். இவர் போர்க்களத்தில் பெற்றதைவிட இழந்தது அதிகம். தான் உயிருக்கு உயிராய் காதலித்த ஹெரா டேராவையும் போர்க்களத்திற்கு கூட்டிச் சென்று காதலையும், புகைப்படக்கலையும் ஒரு சேரக் கற்றுக் கொடுத்தார். இரண்டிலுமே பிரமாதமாக பரிணமிக்கும் நேரத்தில் குண்டுக்கு பலியாகி காதலி டேரா அநியாயமாக செத்துப்போனார்.
ரொம்பவே மனது பாதிக்கப்பட்டாலும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராபர்ட் கபே தனது நண்பர் துணையுடன் மேக்னம் போட்டோஸ் என்ற ப்ரீலென்ஸ் புகைப்பட அமைப்பை ஏற்படுத்தினார். இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறை புகைப்படக்கலைஞர்களின் வாழ்விற்கு, வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நிறுவனம்தான் மேக்னம் போட்டோஸ் நிறுவனம். 
ஜார்ஜ் ஆக்ஸல், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களுடனும், நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டெப்பெக்கருடனும் இணைந்து போர்க்களங்களில் பணியாற்றினார். இவர்களின் எழுத்தும், வர்ணனைகளும் ராபர்ட் கபேயின் படங்களுக்கு மிகவும் உணர்ச்சியூட்டி மிகுந்த உயிரோட்டத்தை உண்டாக்கியது.
பிரபல டைம் பத்திரிகைக்காக இந்தோசீனா போரை படமெடுக்க களமிறங்கியவர், 1954ம் வருடம் மே மாதம் 25 ம்தேதி ராணுவ வீரர்களுக்கு முன்பாக வேகமாக ஒடிச்சென்று படமெடுக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தூக்கியெறியப்பட்டார். அலறியடித்து அனைவரும் ஒடிச்சென்று பார்த்த போது அவரது கால்கள் சிதறி சி்னாபின்னமாகியிருந்தது. மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஒடினார்கள். ஆனால் அங்கே அனைவரது கண்முன்னாலும் அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்தது. கடைசிவரை பிரியாமல் இருந்தது அவரது கையில் இருந்த கேமிரா மட்டுமே.

Thursday, 17 May 2012

தமிழ் இனத்தின் பெருமைகள்


தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!

அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -
ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905
ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837
ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. னால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு...