பிறப்பு: கல்கி
ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி மேடையில் நடைபெற்று கொண்டிருந்தது. எங்கள் ஸ்டாலிலிருந்து பார்த்தால் மேடை ஓரளவுக்கு தெரியும் தான். ஆனாலும் எங்கள் ஸ்டால் ஓனர், ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியை பார்க்க மேடைக்கு பக்கத்தில் சென்றிருந்தார். ஸ்டாலில் நானும், மஞ்சுவும் மாத்திரம் இருந்தோம்.
நாங்கள் பணிபுரிவது மிக்ஸி கம்பெனி ஸ்டால் ஒன்றில். மஞ்சு மேடைப் பக்கம் பார்வையை திருப்பினாள். திடீர் திடீரென்று கூச்சல், ஆரவாரம். எனக்கு அதை வேடிக்கை பார்க்க ஆர்வமில்லை. வேறு விதமான கவலைகள் இருப்பதால், இதன் மீதெல்லாம் ஆசையில்லை. இன்றோடு முடிகிறது - இந்த வீட்டு உபயோக பொருட் கண்காட்சி. பத்து நாட்கள் நடந்தது. தினசரி இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். மொத்தம் இரண்டாயிரத்தி ஐந்நூறு ரூபாய் வரும்.
நாளை திரும்ப வேறு வேலை தேடி அலைய வேண்டும். தீபாவளி வேறு நெருங்குகிறது. நிறைய செலவு இருக்கிறது. மஞ்சு சொன்னாள். "தீபாவளிக்காக டெம்பரவரியா ஒரு கடை போட்டு இருக்காங்க. ஆட்களை வேலைக்கு சேர்க்கிறாங்க. நான் நாளையிலிருந்து போறேன். பதினெட்டு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். வர்றீங்களா?"
நான் எதுவும் சொல்லவில்லை. பதினெட்டு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய். அந்த ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்தால் அதற்கும் செலவு சரியாக இருக்கும்.
அக்காவுக்கு இது இரண்டாவது தீபாவளி. அக்காவுக்கும், மாமாவுக்கும் புது டிரஸ் எடுக்க வேண்டும். தங்கைக்கு சுடிதார் எடுக்க வேண்டும். அக்கா கல்யாணத்திற்கு போடுவதாக சொன்ன மோதிரம் ஒன்றை இன்னும் போடவில்லை. இந்த தீபாவளிக்காவது போட வேண்டும்.
இப்போறைக்கு ஐந்தாயிரம் அவசிய தேவை தான். இல்லை, கடன் வாங்க வேண்டும். இந்த வேலைக்கு போனால் கிடைக்கும் தான். ஆனால் பி.எஸ்.ஸி., முடித்து விட்டு ஜவுளி ஸ்டாலில் துணி கிழிப்பதா என்று சங்கடமாய் இருந்தது. தெரிந்தவர்கள், கூடப்படித்தவர்கள் எவரேனும் அங்கு வரலாம். "என்னப்பா. காலேஜுக்கு போனே. கடைசில இங்க வந்துட்டே" என்று கேட்கலாம்.எந்த தொழில் பார்ப்பதிலும் கேவலம் இல்லை. ஆனால் நாம் பார்க்கும் வேலையை பிறர் இளக்காரமாய் பார்க்கையில் தொழில் மீது பிடிப்பு போய் விடுகிறது.
"என்ன கணேஷ். உம்முன்னு இருக்கீங்க. என்ன சிந்தனை? "மஞ்சு கேட்டாள்.
"ஒண்ணும் இல்ல. நாளைய பொழுதை எப்படி துவக்குறதுன்னு தெரியலை. அதான் சிந்தனை. பத்து நாள் பொழுது எப்படியோ போயிடுச்சு"
"விடுங்க. கொஞ்ச நேரம் ப்ரோக்ராமை பாருங்க. ரெம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு" என்றாள்.
கண்காட்சியுடன் தினசரி ஏதாவது ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. தினசரி குலுக்கல் முறையில் பரிசுகள், ஜனங்களை கண்காட்சிக்கு வரவழைக்க இத்தனையும் செய்ய வேண்டி உள்ளது. மேடையில் நடக்கும் நிகழ்ச்சி ஓரளவு தான் தெரிந்து. இருந்தாலும் ஸ்பீக்கர் வழியே நிகழ்ச்சியை தெள்ள தெளிவாக கேட்க முடிந்தது. அசட்டுத்தனமான கேள்விகள். அதை விட அசட்டுத்தனமான பதில்கள். கண்காட்சிக்கு வருபவர்களை எல்லாம் பார்க்கும்போது, மக்கள் இத்தனை பணக்காரர்களாய் இருக்கிறார்களா... பணம் இவ்வளவு கொட்டி கிடக்கிறதா என்று ஆச்சர்யமாய் இருக்கும்.
எனக்கு இங்கே காலையில் ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணி வரை தொடர்ந்து பனிரெண்டரை மணி நேரம் பணி செய்தால் தான் இருநூறு ரூபாய். அந்த இருநூறு ரூபாய்க்காகவே எவ்வளவு போராட வேண்டி உள்ளது. ஆனால் இங்கே ஒரு ஸ்டாலில் வினேதமான விளையாட்டு என்று இருநூறு ரூபாய் வசூலிக்கிறார்கள்.
"எல்லோருக்கும் பிரச்சனைகள், கவலைகள் இருக்கிறது கணேஷ். நாம் ஏன் ஓயாம அதையே நினைக்கணும். கொஞ்ச நேரம் ப்ரோக்ராமை பாருங்க. கவலைகளை மறங்க" என்றாள் மஞ்சு.
மஞ்சுவும் என்னை மாதிரியே கஷ்டஜீவனம் நடத்தி கொண்டிருப்பவள் தான். என்னை மாதிரியே நாளையை பற்றிய கவலைகள் அவளுக்கும் நிறைய உண்டு. ஆனாலும் தன்னை மகிழ்ச்சியுடன் வைத்து கொண்டிருப்பவள்.
"நா இந்த ப்ரோக்ராமை பார்ப்பதால் எனக்கேதும் பலன் கிடைச்சா பார்க்கலாம். எனக்கென்ன கிடைக்க போகுது" என்றேன்.

மஞ்சு சிரித்தாள். "பணம் கொடுத்தா தான் பார்ப்பீங்களா. என்கிட்ட பேசுவதற்கு கூட காசு கேட்பீங்க போலிருக்கு"
"ம். உங்கக்கிட்ட பேச காசு கேட்க மாட்டேன். பிறர் கிட்ட பேச காசு கேட்டாலும் கேட்பேன்" என்றதற்கு,
மஞ்சு சிரித்தாள். மஞ்சுவால் சிரித்து கொண்டே இருக்க முடிகிறது. அவளது வீட்டு துயரங்களோடு ஒப்பிடுகையில், என் வீடு எவ்வளவோ மேல். பெரிய குடும்பம். குறைந்த வருமானம். இவள் வீட்டில் யாருக்கும் பொறுப்பு என்பதே இல்லை. இவள் தப்பி பிறந்துவிட்டாள். பாசம் இவளை அலைக்கழிக்கிறது. குடும்பச் சுமையை தூக்கி தூக்கி கூன் விழுந்து விட்டதோ என்று கூட தோன்றும். லேசான கூன் உண்டு அவளுக்கு இயற்கையாகவே.
இந்த பத்து நாளாக தான் மஞ்சுவின் சினேகம். காலேஜுக்கு போய் இருக்கிறாள். இரண்டாம் வருஷத்தோடு நிறுத்திவிட்டார்கள். இவள் கல்லூரி படிப்பை முடித்திருந்தால், இவளது புத்திசாலித்தனத்திற்கு நல்ல வேலை கிடைத்து நன்றாய் இருந்திருப்பாள் என்று தோன்றும்.
அனேகமாய் இனி இன்று வியாபாரம் இருக்காது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிறைவு விழா நடக்கும. பரிசளிப்பு விழா நடக்கும். வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டியது தான். இன்று வியாபாரம் கொஞ்சம் மந்தம் தான். நாலைந்து நாட்கள் நல்ல வியாபாரம்.
"என்ன கணேஷ். நாளைக்கு அங்க வேலைக்கு வர்றிங்களா" என்று திரும்ப மஞ்சு கேட்டாள்.
"நைட் தான் முடிவு பண்ணனும்"
"நான் போறேன். பதினெட்டு நாளைக்கு நாலாயிரம் சம்பளம். அது போக தீபாவளிக்கு முந்தின தினம் டிரஸ் கொடுத்தாலும் கொடுப்பாங்க" என்றாள்.

"நீங்க ஏன் ஏதாவது ஒரே இடத்தில் வேலை பார்க்கக்கூடாது. இங்கப்பத்து நாள், அங்கப்பத்து நாள்ன்னு கஷடப்பட்டுட்டு"
"சில இடங்கள்ல ஓரு மாசம் சம்பாதிக்கிறதை இங்க பதினைஞ்சு இருபது நாள்ல வாங்கலாம். அதோட படிக்கிறதால் இப்படி வேலை பார்க்கிறதால் நேரம் கிடைக்குது. அப்புறம் ஒரே இடத்தில் இருந்தா, நம் குடும்ப சூழ்நிலையை புரிஞ்சிட்டு சிலர் தொந்தரவு தர்றாங்க. எனக்கு இந்த மாதிரி வேலை பிடிச்சிருக்கு"
"இப்படியே அலையே வேண்டியது தானா. கல்யாணம் பண்ற ஐடியாவெல்லாம் இல்லையா?"
"அது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. நானா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் உண்டுன்னு நினைக்கிறேன்" என்றாள்.
"உங்க கதை தான் என் கதையும். நீங்க சொன்ன மாதிரிதான் என் நிலையும்" என்றேன்.
மஞ்சுவை என்க்கு பிடிக்கும். எனக்கேற்ற குணம். மணந்து கொண்டால் வாழ்க்கை நிச்சயம் சுகமானதாய் தான் இருக்கும். என்னை அவளுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. நான் சிகரெட் பிடிப்பதை குற்றம் சொன்னாள்.
"உங்க வருமானத்துக்கு நீங்க ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கு சிகரெட் பிடிப்பது - மன்னிக்க முடியாத குற்றம். பணத்தை சாம்பலாக்குறிங்க" என்றாள்.
"ரெம்ப உரிமை எடுத்துட்டேனா" என்று கேட்டாள் இங்கு வந்த நான்காம் நாள். ஏனோ பிறகு சிகரெட் பிடிக்கவில்லை. இந்த ஆறுநாளாய் சிகரெட் பிடிக்கவில்லை. எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை. இனி சிகரெட்டை தொட வாய்ப்பில்லை.
பஸ் ஸடாப்பிற்கு வந்தோம். பத்து நாள் வாழ்க்கை முடிந்து விட்டது. பையில் பத்து நாள் சம்பளம் இருந்தது. தினசரி பஸ் ஸ்டாப் வரை சேர்ந்து தான் வருவோம். பிறகு அவரவருக்கான பஸ்ஸில் ஏறி கொள்வோம்.
"என்ன நாளைக்கு வர்றிங்களா?" என்று கேட்டாள். மறுக்க முடியாமல் போனதற்கு பணம் மட்டுமே காரணமாக தோன்றவில்லை.
No comments:
Post a Comment