Friday, 11 May 2012

ஒரு மாதத்தில்

பிறப்பு: சாளரம்(கார்க்கி)

செகந்திராபாத் ரயில்வே நிலைய முதலாவது பிளாட்ஃபாரத்திற்கு சார்மினர் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில் வந்து சேரும் என்று தெலுங்கில் சொன்னார்கள். ப்ளாட்ஃபாரத்தில் இருந்த நான் தண்டவாளத்தில் பாதுகாப்பாக இறங்கிவிடலாமா என்று யோசிக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். 18, 19 வயதிருக்கும். தமன்னாவை பார்த்து ”ஏங்க்கா இவ்ளோ குண்டாயிட்டிங்க” என்று கேட்க அவளால் முடியும். குழந்தையின் சிணுங்கல் மட்டுமே இருந்தது. குமரியின் வளங்களை காண முடியவில்லை.  அவள் சிரிப்பில் என்னை தொலைக்க எத்தனித்த நேரம், அவளை நோக்கி சிலர் வந்தார்கள். வந்ததில் நால்வர் பெண்டிர், இருவர் ஆண்கள் என்பதை கண்டறிய சற்று சிரமப்பட்டுத்தான் போனேன்.
கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்புவது போன்று தெரிந்தது. அழைத்துச் செல்ல அவளின் அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மா முன்னரே ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டார். இடம் பிடித்திருப்பார் என நினைக்கிறேன். ஏறும்போது அவர் கையில் கைக்குட்டையை காணவில்லை. அப்பா மட்டும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும். மற்றவர்கள் சிரிப்பு அவள் சிரிப்பு போல் இல்லை. அது சரி. நமக்கு தேவதைதானே முக்கியம்? அவளை மறைப்பது போலவே அந்த அறுவரும் நின்றுக் கொண்டிருந்தார்கள். 360 டிகிரியும் சுற்றி வந்தேன்.  இராட்சச நண்பர்கள். நான் பார்க்க முடியவில்லை என்பதை விட அவளுக்கு காற்றாவது வருமா என்ற சந்தேகமே என்னை கஷ்டப்படுத்தியது. தேவதைகளுக்கு வேர்க்குமா என்று கண்டறிய வேண்டும்.
அந்த இரண்டு பேரில் ஒருவன் நன்றாக இருந்தான். அவனது சிரிப்பும் கியூட்டாக இருந்தது. அவன் தான் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான். அவளும் அவன் சொல்ல ஆரம்பிக்கும்போதே சிரிக்கத் தொடங்குவதை சரியாக செய்து கொண்டிருந்தாள். எல்லாம் ரிப்பீட் ஜோக் போல என நினைத்துக் கொண்டேன். அவள் அவனின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனை கைவிட்டு என்னை நோக்கித்தானே வர வேண்டும்?
ஆம். நேரமாகி விட்டதால் ரயிலில் ஏறி சன்னலோரம் அமர்ந்தேன். எனக்கு எதிர் இருக்கையில் தேவதையின் அம்மா. அய். மீண்டும் அவர்களை நோக்கி பார்வையை திருப்பினேன். முதலில் அந்த க்யூட் பையன் தான் அழுவதற்கு ஆரம்பித்தான். அவனுக்கு மட்டும்தான் ரயில் கிளம்பும் நேரம் தெரிந்திருக்க வேண்டும். தேவதை அவனது கைகளை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவன் அழுகை அதிகமாக தேவதை அவனை இறுக அணைத்துக் கொண்டாள். நட்பில் நெகிழ்ந்து போய்விட்ட தேவதையைப் பார்த்து சிரித்தேன். கொடுத்து வைத்தவள். வைத்தவன். ஒருவர் பின் ஒருவராக கலைந்தார்கள். ஆளுக்கொரு திசையில் அழுகை. ஒவ்வொருவராக தேடித்தேடி அணைத்து ஆறுதல் சொன்னாள் தேவதை. விக்ரமன் பட லாலாலா எனக்கு மட்டும் கேட்டது.
”கன்னி மலர்கள் கூட படிக்கும். காளை மனதில் சாரல் அடிக்கும். கல்லூரி சாலை எங்கள் வேடந்தாங்கல்”. சரியான்தான்யா சொல்லியிருக்கார் வாலி என்று நினைத்துக் கொண்டேன். அவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களாகத்தான் இருந்திருக்கும். ரயில் பாட ஆரம்பித்தது. 12 கண்களும் அப்போதுதான் ஒரே திசையை பார்த்தன. ரயிலை நோக்கி. தேவதையின் அப்பா ரயிலேறிக் கொண்டார். தேவதை இன்னும் ஏறவில்லை. இன்னொரு பெண் அவளை ஆரத்தழுவிக் கொண்டாள். இன்னொருத்தி அவர்களை தேற்றி தேவதையை ரயிலேற சொன்னாள். அந்த இரு பையன்களும் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன். ரயிலோடு ஓடி வந்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் மட்டும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்று விட க்யூட் ப்ளாட்ஃபார்ம் முடியும்வரை ஓடி வந்தான். அழுது கொண்டேதான். முடிவில் நின்றுவிட்டான். ரயில் தொடர்ந்து சென்றுக் கொண்டேயிருந்தது தேவதையை சுமந்தபடி. தேவதை படியில் நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். இவன் நிச்சயம் நமக்கு போட்டிதான் என்றபடி நகம் கடித்துக் கொண்டிருந்தேன் நான். ரயிலின் வேகம் கூட வேண்டும், என் விரல்களாவது தப்பிக்க வேண்டுமே!
ஹைதையை விட்டு மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது சார்மினார். எதுவும் பேசாமல் உறைந்திருந்தார் தேவதையின் அப்பா. பாவம். பயம் இருக்கத்தானே செய்யும்? அம்மாவோ கண்கள் மூடி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தேவதை மட்டும் அவளுக்கு வந்த பரிசுகளை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரிப்பு மட்டும் ஓயவில்லை. அது சிரிப்பு கூட இல்லை. மெல்லிய புன்னகை எனலாம். என்னையும் பார்த்து சிரித்தாள். இது சிரிப்புதான். அப்பாவைப் பார்த்தேன். மாமாவை தேற்றுவோம் முதலில் என பேச்சுக் கொடுத்தேன். தயங்கி தயங்கித்தான் பேசினார். வேண்டாமடா விஷ பரீட்சை என அப்பாவை விட்டு அப்பர் பெர்த்திற்கு தாவினேன். தூங்கியும் விட்டேன்.
மறுநாள் காலை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தோம். பாதி தூக்கத்தில் இறங்கினேன். தேவதை தனக்கு பிடித்த கிஃப்ட்டை மட்டும் கையிலெடுத்துக் கொண்டாள். அம்மா முடிந்தவரை எடுத்துக் கொண்டார்கள். அப்பாவால் எல்லாவற்றையும் எடுக்க முடியாது. போர்ட்டரும் காணவில்லை. சான்சுடா கார்க்கி என்று உதவினேன். அப்பாவும் நானும் பின்னால் செல்ல, தேவதையும் அம்மாவும் முன்னால் சென்றார்கள்.
காலெஜ் லைஃபே தனிதான் சார் என்றேன்.
ம்ம் என்றார்.
ஆனா இந்த பசங்க செஞ்சது ஓவர். இப்பலாம் சேட், மொபைல்ன்னு ஆன பிறகு எதுக்கு இவ்ளோ சீன் போடறாங்க? அவ்ளோ அக்கறை இருந்தா மாசம் ஒரு தடவ வந்துட்டு போகலாம். நான் வாராவாரம் வறேன் சார்
…………..
என்ன சார்?
ஆமாம்ப்பா. அவ இன்னும் ஒரு மாசம்தான் உயிரோட இருப்பா. அவளுக்கு…..
ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் செத்துக் கொண்டிருந்தேன்.
என் கையிலிருந்த பைகளையும் வாங்கிக் கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றார். நான் அப்படியே  நின்றுவிட்டேன். கண்களில் திரண்ட நீர்த்துளி ஏனோ அந்த க்யூட் நண்பன் என் கண்ணை விட்டு மறைந்த கடைசி காட்சியை நினைவுப்படுத்தி சென்றது.

No comments:

Post a Comment