Saturday, 30 March 2013

காதல் to ஊடல் to காதல்

"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது 
 
--
 

மௌனமான வார்த்தைகள்

"என்னங்க, நெக்ஸ்ட் வீக் எங்க சித்தப்பாவும் சித்தியும் அவங்க பொண்ணுக்கு மாப்ள பாக்கற விஷயமா ஊர்ல இருந்து வராங்க. நாமளும் கூட போகணும், லீவ் சொல்லிடுங்க" என்றவள் கூற

"ஐயையோ... புதன்கிழமையா மட்டும் இருக்கக்கூடாது கடவுளே" என வேண்டியபடியே "எப்போ?" என்றான்

"புதன்கிழமை" என குண்டை வீசினாள்

"ஓ நோ... எனக்கு புதன்கிழமை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவ் போட முடியாது" என்றான்

"ஆமா... எங்க வீட்டு சொந்தம் வராங்கனு சொன்னாலே உங்களுக்கு மீட்டிங், டெட்லைன், கோ-லைவ் எல்லாம் வந்துடும்" என சண்டையை துவங்கினாள்

"ஏன் புரியாம பேசற? நீயும் வேலைக்கு போறவ தான, தெரியாதா?" என புரியவைக்க முயன்றான்

"போன மாசம் உங்க அக்கா வந்தப்ப மட்டும் மூணு நாள் லீவ் போட்டீங்க, என்னையும் போட வெச்சீங்க. எனக்கு கூட தான் வேலை இருந்தது, உங்களுக்காக செய்யலையா?"

"எங்கக்கா ரெண்டு மாசம் முன்னாடியே வர்றத பத்தி இன்பார்ம் பண்ணினா, சோ பிளான் பண்ண வசதியா இருந்தது" என நியாப்படுத்தினான்

"ஓஹோ... உங்க சொந்தமெல்லாம் ரெம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க, எங்களுக்கு அவ்ளோ பத்தாதுன்னு சொல்ல வரீங்க, அப்படி தானே" என அவள் கோபமாய் சீற

"ஸ்டாப் இட், டோண்ட் புட் வோர்ட்ஸ் இன் மை மௌத்... உன்கிட்ட பேச முடியாது ச்சே" என சலிப்பாய் நகர்ந்தான்

"ஆமா என்கிட்டயெல்லாம் பேச முடியாது. உங்க டீம்ல இருக்காளே அவ பேரென்ன... நின்னாவோ உக்காந்தாவோ, அவகிட்ட பேசறதுன்னா மட்டும் இனிக்கும்" என கழுத்தை நொடித்தாள்

"அது நின்னாவும் இல்ல உக்காந்தாவும் இல்ல நீனா" என பற்களை கடித்தான் எரிச்சலில்

"அது ரெம்ப முக்கியம் இப்ப... நீங்க லீவ் போட முடியுமா முடியாதா?" என அவள் பிடிவாத குரலில் கேட்கவும்

"அட்ஜஸ்ட் பண்ண பண்ண ஓவரா டாமினேட் பண்றா, திமிரு" என மனதிற்குள் எரிச்சல்பட்டவன் "முடியாது" என ஒரே வார்த்தையில் எழுந்து சென்றான்

அதன் பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரவு உணவின் போது கூட மௌனமே ஆட்சி செய்தது

பின் அவன் இருப்பையே உணராதவள் போல் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அறைக்குள் செல்ல, "நானும் உனக்கு சளைத்தவனல்ல" என்பது போல் அவன் முன்னறையில் லேப்டாப் சகிதம் இல்லாத வேலையில் மூழ்கினான்

நடுஇரவில் அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் பாவனையில் கண் மூடினாள். மெல்லிய படலம் போல் அவன் அவளை பார்ப்பதை உணர்ந்தும் கண் திறக்காமல் இருந்தாள்

மெல்ல அவளருகே குனிந்தவன் "ராட்சசி... பேசறதெல்லாம் பேசிட்டு கொழந்த மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு தூங்கரத பாரு" என மெல்ல முணுமுணுத்தபடி, அவளை எழுப்பி விடாவண்ணம் மெல்ல நெற்றியில் இதழ் ஒற்றினான்

"உறங்குவது போல் நடித்தேன்
  உன்ரகசிய நாடகத்தை ரசிக்க"
என இன்ஸ்டன்ட் ஹைக்கூ உதித்தது அவள் மனதில்

திறக்க துடித்த இமைகளை அடக்கி நாடகத்தை தொடர்ந்தாள், அப்படியே உறங்கியும் போனாள்

காலையில் கண் விழித்தவளுக்கு அவனின் முகதரிசனம் முன்னிரவை நினைவூட்ட "வெவ்வவெவே" என பழித்தபடி, செல்லமாய் அலுங்காமல் அவன் கேசத்தை கலைத்தாள்

அடுத்த நாள் இரவும் இதே நாடகம் தொடர்ந்தது. ஆனால் பகலில் ஜென்ம விரோதிகள் போல் முகத்தை திருப்பி கொண்டனர்

மூன்றாம் நாள் கண் விழித்ததும் இரு நாளின் வழக்கம் போல் தனிச்சையாய் அவன் முன்னுச்சி கேசத்தை கலைத்துவிட்டு விலகியவளின் கரம் பற்றினான் அவன்

"அய்யோ நாடகம் அம்பலமாகி விட்டதே" என வெட்கமும், கூடவே சிறு கோபமும் சேர "கைய விடுங்க, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்" என கையை உதறினாள்

"நான் கூட ரெம்ப கோவமாத்தான் இருக்கேன்" என்றான் அவனும்

"எதுக்கு?" என முறைத்தாள்

"ம்... தூங்கற மாதிரி நடிச்சு ஏமாத்தினதுக்கு" என்றான் கேலியாய் சிரித்தபடி

"அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே" என அவள் மனதிற்குள் புலம்ப

"ஆமா, அதுவும் தெரிஞ்சு போச்சு" என்றான் அவள் மனதை படித்தது போல்

"எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு" என அவன் பிடியில் இருந்து ஓட விழைந்தவளை அருகே இழுத்தவன்

"இன்னிக்கி நீ வொர்க் ப்ரம் ஹோம்னு எனக்கு தெரியும்... அதான் நானும் வொர்க் ப்ரம் ஹோம் சொல்லிட்டு வந்துட்டேன்" என கண் சிமிட்டினான்

"ஐயோ கடவுளே... நேத்து சாயங்காலம் அந்த நீனா என்னை பாத்து 'என்ஜாய் வொர்கிங் ப்ரம் ஹோம்'னு சிரிச்சது இதுக்கு தானா, ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?" என பொய்யாய் சலித்தாள்

"ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றதுல கூட சில அட்வான்டேஜ் இருக்கு இல்லடி"

"எனக்கு 'டி' போட்டா கோபம் வரும்"

"அப்ப காபி போடட்டுமா?" என சிரிக்க, அதற்கு மேல் நடிக்க இயலாமல் தானும் சேர்ந்து சிரித்தாள்

"ஏய்... ஒரு நியூ இயர் ரெசல்யூசன் எடுக்கலாமா?" என்றவன் கேட்க

"என்ன? இனிமே அடிக்கடி வொர்க் ப்ரம் ஹோம் பண்றதுனா?" என்றவள் சிரிக்க

"எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல" என சீண்டியவன் "இன்னொன்னும் கூட" என்றான்

"என்ன?" என அவள் புரியாமல் பார்க்க

"இந்த 2013 வருசத்துல நானும் நீயும் சண்டையே போடாம இருக்கணும். டீல்?" என அவன் கை நீட்ட

"நோ டீல்" என அவன் கையை தட்டி விட்டாள்

"அடிப்பாவி... ஏன்?" என விழிக்க

"சண்டையே இல்லைனா என்ன லைப் அது, செம போர். மாசத்துக்கு நாலு சண்டை போடணும், ரெண்டு நாள் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு யார் மொதல்ல பேசுவாங்கனு தவிக்கனும், ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் ரசிக்கணும். சண்டைய சாக்கா வெச்சு உங்ககிட்ட நாலு கிப்ட் தேத்தணும், இதெல்லாம் இல்லைனா என்ன சுவாரஷ்யம் இருக்கு லைப்ல" என அவள் அபிநயத்துடன் கூற, அதை கண்ணெடுக்காமல் ரசித்தவன்

"பொண்ணுங்க எல்லாம் பிளான் பண்ணிதான் பண்றீங்க... இது புரியாம பசங்க நாங்க பீலிங்க்ல பீஸ் பீஸா போறோம்... ஹ்ம்ம்" என பாவமாய் அவன் கூற, அதை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட சத்தமாய் வாய் விட்டு சிரித்தாள்

சிரிப்பு ஓய்ந்ததும் "ஹாப்பி நியூ இயர்... ரெண்டு நாள் அட்வான்சா சொல்றேன், ஏன்னா என்னோட விஷ் தான் உங்களுக்கு முதல் விஷ்ஷா இருக்கணும்" என்றாள் தன் உரிமையை பறைசாற்றுவது போல்

அதையும் ரசித்தவன் "ஐ லவ் யு" என்றான், அவளை விட்டு பார்வையை விலக்காமல்

"ஹாப்பி நியூ இயர் சொன்னா திருப்பி ஹாப்பி நியூ இயர் தான் சொல்லுவாங்க, ஐ லவ் யு சொல்ல மாட்டாங்க... இது கூட தெரியாதா?" என்றாள் வேண்டுமென்றே

"ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு டூ சொல்லுவாங்க, சண்டை போட மாட்டாங்க... இது கூட தெரியாதா?" என்றான் அவனும் வேண்டுமென்றே

"இப்ப யாரு சண்டை போட்டா?" என அவள் முறைக்க, மீண்டும் அங்கு ஒரு  சண்டை (!) ஆரம்பமாகியது

--

 தங்கமணி

தீர்ப்பு


"அப்பா ப்ளீஸ்... வேண்டாம்... நான் முடிவு பண்ணிட்டேன்... டைவர்ஸ் தான்"

"அஞ்சலி..."

"ப்ளீஸ்'ப்பா... வேற வழி இல்ல. தினம் தினம் அடி திட்டுனு எனக்கு வெறுத்து போச்சுப்பா"

"அதில்லம்மா..."

"என்னோட இஷ்டத்துக்கு எதுவுமே செய்ய முடியாம என்ன லைப்'பா இது. வேண்டாம்'ப்பா போதும்"

"அது..."

"அப்பா, ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, பத்து வருசமா இந்த டார்ச்சர்... போதும்'ப்பா ப்ளீஸ்"

"என்ன இருந்தாலும்..."

"அத்தன பேர் முன்னாடி என்னை எப்படி இன்சல்ட் பண்ணி... ச்சே"

"ஆனா..."

"நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும்'ப்பா. தனியா எப்படினு தானே... எனக்கு நீங்க போதும்பா, உங்க பொண்ணா இருந்துக்கறேன்'ப்பா"

"நீ நெனைக்கற மாதிரி..."

"என்னால முடியும்'ப்பா"

"நான் சொல்றத கொஞ்சம்..."

"இங்க பாருங்கப்பா. நீங்க இன்னும் என்னை கம்பெல் பண்ணினா நான் வீட்டை விட்டு போய்டுவேன்"

"என்னது?"

"ஆமாம்'ப்பா எனக்கு வேற வழியில்ல"

"எங்கம்மா போவ?"

"எங்கயோ போறேன்"

"நான் என்ன சொல்றேன்னா..."

"வேண்டாம்'ப்பா, எதுவும் சொல்ல வேண்டாம். உங்க பிரெண்ட் அதான் லாயர் நாராயணன், அந்த அங்கிளை நாளைக்கி காலைல போய் பாக்கலாம். இப்ப எனக்கு தூக்கம் வருது, நான் போய் தூங்கறேன் குட் நைட்'ப்பா" என எழுந்து தன் அறைக்குள் சென்றாள் அஞ்சலி

மகள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த சரவணன், மௌனமாய் தன் அறைக்குள் சென்றார்

அறைக்குள் வந்தவரை பார்த்த அவர் மனைவி தேவி, தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மடித்து வைத்து விட்டு நிமிர்ந்தாள்

"என்ன? அப்பா பொண்ணு பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சதா?" என தேவி கேட்க, அதுவரை கட்டுப்படுத்தி இருந்த சிரிப்பை அதற்கு மேல் அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்தார் சரவணன்

"எதுக்கு சிரிக்கறீங்க?" என தேவி விழிக்க

"அது..." என தொடங்கியவர், மீண்டும் சிரிக்க தொடங்க

"ஒண்ணு, சொல்லிட்டு சிரிங்க. இல்லைனா சாவுகாசமா சிரிச்சு முடிச்சுட்டு என்னை எழுப்புங்க. குட் நைட்" என தேவி கூறவும்

"இரு இரு... ஹா ஹா ஹா... கேட்டா நீயும் பயங்கரமா சிரிக்க போற" என மறுபடியும் சிரிக்க

"அப்படி என்ன தான் சொன்னா உங்க சீமந்த புத்திரி" என கோபமாய் கேட்க

"நான் உன்னை டைவர்ஸ் பண்ணனுமாம்" என்று கூறிவிட்டு சிரிக்க

"என்னது?" என அதிர்ச்சியாய் எழுந்து நின்றாள் தேவி

"ஏய்...எங்க போற?" என சரவணன் தடுக்க

"ம்... உங்க பொண்ண கொஞ்ச போறேன்... எவ்ளோ கொழுப்பு இருந்தா அப்படி சொல்லும் அந்த குட்டி சாத்தான்" என சரவணன் தடுக்க தடுக்க மகளின் அறைக்குள் சென்றாள் தேவி

அஞ்சலியின் அறை விளக்கை உயர்பித்தவள் "என்னடி சொன்ன உங்க அப்பாகிட்ட?" என தேவி கோபமாய் கேட்க, அஞ்சலி தன் தந்தையை முறைத்தாள்

"ஐயோ... நான் ஒண்ணும் சொல்லல..." என பொய் பயம் காட்டி சிரிப்பை அடக்கினார் சரவணன்

"என்னை டைவர்ஸ் பண்ணனும்னு சொன்னியாடி?" என தேவி மிரட்ட

"அப்பா... நான் தூங்கணும், உங்க wife'ஐ கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருக்க சொல்லுங்க"

"என்னடி சொன்ன?" என தேவி முறைக்க

"அப்பா, உங்க wifeக்கு பெரிய ஜோதிகானு நெனப்பு, மொறைச்சு மொறைச்சு ஷோ காட்ட வேண்டாம்னு சொல்லுங்க"

அதை கேட்டதும் சரவணன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, தேவி முறைத்தாள்

"மீ சைலண்ட்" என மௌனமானார் சரவணன்

"மொளச்சி மூணு இல விடல பேச்ச பாரு" என தேவி அடிக்க கை ஒங்க

"ஏய் தேவி.. கொழந்தய போய்..." என சரவணன் தடுக்க

"கொழந்தனா கொழந்த மாதிரி இருக்கணும்... இது கொழந்த பேசற பேச்சா? பத்து வயசுக்கு இந்த பேச்சு பேசினா பல்லை தான் ஒடைக்கணும்"

"கூல் டௌன் தேவி ப்ளீஸ்" என சரவணன் சமாதானம் செய்ய

"அப்ப உங்க பொண்ண எங்கிட்ட சாரி கேக்க சொல்லுங்க"

"நான் எதுக்கு சாரி கேக்கணும். இன்னிக்கி சாயங்காலம் என் பிரெண்ட்ஸ் முன்னாடி என்னை திட்டினதுக்கு உங்க wife தான் என்கிட்ட சாரி கேக்கணும்'ப்பா"

"போட்டேனா ஒண்ணு வாய் மேல. பெரிய பிரெண்ட்ஸ் இவளுக்கு, ஹோம் வொர்க் பண்ணாம மத்த பிளாட் பசங்க கூட வெளையாடிட்டு இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா... என்னடி மொறைக்கற?"

"எப்ப பாத்தாலும் இத செய்யாத அத செய்யாதனு டார்ச்சர் ச்சே... எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு"

"நீ பேசலடி... நீ பாக்கற டிவியும் சினிமாவும் கத்து குடுக்கறது தான் எல்லாமும். அத ஒளிச்சு கட்டினா தான் இது உருப்படும்"

"அப்பா... டைவர்ஸ்'க்கு அப்புறம் நீங்க என்கூட இருக்க போறீங்களா இல்ல உங்க wife கூட இருக்க போறீங்களானு இப்பவே முடிவு பண்ணிக்கோங்க"

"கழுத உன்ன..." என தேவி அடிக்க ஸ்கேல் எடுக்க, பாய்ந்து தந்தையின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு கையில் சிக்காமல் ஓடினாள் அஞ்சலி

"ஒகே ஒகே... ரெண்டு பேரும் பேசாம இருங்க கொஞ்ச நேரம்" என மனைவியையும் மகளையும் ஆளுக்கு ஒரு புறம் அமர்த்திய சரவணன்

"தேவி, என்ன இருந்தாலும் நீ அஞ்சலிய அவ பிரெண்ட்ஸ் முன்னாடி திட்டினது தப்பு தான்... என்ன சொல்லணும்னாலும் தனியா கூப்ட்டு சொல்லு"

"ஆனா..."

"உஷ்... நாட்டமை தீர்ப்பு சொல்லும் போது நடுல பேசக் கூடாது" என மனைவியை அமைதிப்படுத்தியவர் "அஞ்சலி குட்டி, நீயும் ஹோம்வொர்க் பண்ணாம விளையாடினது தப்பு தான்"

"அப்பா..."

"உஷ்... நான் இன்னும் முடிக்கல" என்றவர், தொடர்ந்து "ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. So, மாத்தி மாத்தி சாரி சொல்லிட்டு பிரெண்ட்ஸ் ஆகணும் இப்போ, இல்லைனா ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே... இதான் என்னோட தீர்ப்பு" என நாட்டாமை சொல்லி முடிக்க

சிறிது நேர யோசனைக்கு பின் "நாங்க எப்பவும் பிரெண்ட்ஸ் தான்... இல்லம்மா" என அஞ்சலி முதல் பந்தை வீச

"ஆமாண்டி செல்லம்" என அதை கேட்ச் பிடித்தாள் தேவி

"இந்த அப்பா தான் சும்மா எதாச்சும் சொல்லி நம்மள சண்டை போட வெக்கறது... இல்லம்மா"

"ஆமாடி செல்லம்"

"அப்படினா இந்த அப்பா தான அம்மா நம்மகிட்ட சாரி கேக்கணும்" என அஞ்சலி குறும்பாய் சிரிக்க

"கரெக்ட்டுடி செல்லம்" என தேவியும் சிரிப்பை அடக்கி கொண்டு கூற

"அடப்பாவிங்களா... உங்களுக்கு நாட்டாமை வேலை பாக்க வந்தா என்னை காமெடி பீஸ் ஆக்கரீங்களா அம்மாவும் மகளும் சேந்துட்டு... நாட்டாமையை அவமதிச்ச குற்றத்துக்கு ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே, இதான் என்னோட புது தீர்ப்பு..." எனவும்

"நாட்டமை, தீர்ப்ப மாத்தி சொல்லு" என அம்மாவும் மகளும் ஒரே குரலில் கூற, அதன் பின் அங்கு எழுந்த சிரிப்பு அலையில் மூவரின் குரலும் சங்கமித்து ஒலித்தது 
 --
 
கோவிந்த்..
 

ஒரு பெண்ணின் அழகு



நிறைமாத  கர்பமாக இருக்கும் பொழுது,
சேலை கட்டி,
தலை நிறையா மல்லிகை பூ வைத்து ,
தெரிஞ்சவங்க  வீட்டுக்கு வரும் பொழுது,
என்ன  சாப்பிடனும் என்ன சாப்பிடக்கூடாது,
எப்படி  இருக்கணும் எப்படி இருக்க கூடாது,
அவங்கவங்களுக்கு தெரிஞ்ச யோசனையை அவளை கிண்டல் செய்து கொண்டே  சொல்லும் பொழுது,
.
.
.
.

இவற்றை எல்லாம்  கதவோரமாக இருக்கும் சுவற்றில்சாய்ந்து கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும்  கணவன்,
.
.
.
அவளையும் அறியாமல் வெட்கப்பட்டு ரத்தமென சிவக்கும் "அவள் முகம்",
ஹ்ம்ம்  அந்த நிலவு கூட தோற்று விடும்.
.
.
.
.
.

.
.
.
.
கொடுத்து வச்சுருக்கணும் .... ஹ்ம்ம்ம் ...

Thursday, 21 March 2013

இடலாக்குடி ராசா (எ) "பரதேசி" ராசா

‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.
ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும். ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் பலகை போல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்று போல் இருத்தி’ என்று எந்தச் சீதை வாழ்த்தினாளோ? என்றைக்குப் பார்த்தாலும் நாற்பது சொல்லும் உடல். ஆனால் கண்கள்? வெண்டிலேஷனுக்குப் போடும் நிறமில்லாத ஒளி ஊடுருவாத கண்ணாடி போல் ஒரு மங்கல். அல்லது வெளிறல். கண்களையே பேசும் மனம். பேச்சில் ஒரு வெடுக்கு.
பெயரில் இடலாக்குடி இருந்தாலும் அங்குதான் தங்குகிறானா? வீடுகளுண்டா? பெண்டு பிள்ளைகள் உற்றார் உறவு உண்டா? யாரும் கண்டுபிடிக்க முனைந்ததில்லை.
எப்போதாவது திடீரென அவன் பிரசன்னமாவான். அரையில் கிழிசல் இல்லாத பட்டைக் கரை ஒற்றை வேட்டி.  தோளில் சுட்டிப்போட்ட ஈரிழை துவர்த்து. இடது கையில் நரைத்துப்போன காசிக்கயிறு. குளித்து கோயிலுக்குப் போன அடையாளமாக காதில் பொன்னரளி அல்லது செவ்வரளி. அல்லது திருநீற்றுப் பட்டை அல்லது மஞ்சள் காப்புக் கீற்று. எப்போது பார்த்தாலும் களைந்து போன ஒரு சாமானை எடுக்கப் போவதுபோல் “விறீர்” என்று ஒரு நடை.
முற்பகல் பதினோரு மணிக்கு, பிற்பகல் மூன்று மணிக்கு, இரவு எட்டுமணிக்கு என்று அட்டவணைப்படியும் இல்லாமல் கிழமையில் இரண்டு மூன்று முறை அந்த ஊருக்கு வருவான். மனதில் தோன்றிய – அப்படி ஏதாவது தோன்றுமோ என்னவோ – யாரு வீட்டுத் தெருப்படிப் புரையிலாவது ஏறி வட்டச்சம்மணம் போட்டு உட்காருவான். துண்டால் முகத்தை ஒரு முறை துடைத்துக் கொள்வான். ஒரு வளையத்தின் நெளிவு இல்லாமல், நேர்க்கோட்டுக் கோணங்களில் வெடுக்வெடுக்கென்று காக்கையைப்போல் தலையைத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்ப்பான்.
யார் கவனத்திலாவது பட்டால் சரி. படாவிட்டால் “எக்கா… ஏ எக்கா… ராசா வந்திருக்கேன்” என்று இரண்டு விளி. அல்லது “பெரீம்மா. பெரீம்மோவ்… என்னா அனக்கத்தைக் காணேம். ஏ பெரீம்மா…” என்றொரு கூப்பாடு. இன்னாருக்கு இன்ன முறைதான் என்று ஒரு வரைமுறை கிடையாது. எல்லோரும் தன்னைவிட வயதில் பெரியவர்கள் என்ற அனுமான முறைகள். ஆனால் எந்த வீட்டிலும் ஆண்களைக் கூப்பிடுவது இல்லை.
சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து ‘அக்காவோ’ ‘பெரியம்மா’வோ எட்டிப் பார்ப்பார்கள். “என்னா ராசா? இந்த வேனா வெயில்லே எங்கயாக்கும் போய்ட்டு வாறே?”
“யாரு? ராசாவையே கேக்கே? காலம்பற நாவக்காடு… நம்ம அத்தானுக்க எளைய குட்டியைக் கெட்டிக் குடுத்திருக்கில்லா.. ஆவுடையம்மை. எட்டிப்பார்த்து ரெம்ப நாளாச்சு… பிள்ளை என்ன நெனைச்சுக்கிடும்? நம்மளைத் தேடாதா? ஒரு நடை…. இன்னா இரி காப்பி குடிச்சுக்கிட்டுப் போலாம்ணா…. ராசாக்கு கொறைச்சலுல்லா… கொண்டாங் கொடுத்தான் வீட்லயா காப்பிக்குடி… கொள்ளாமே! அவ அடுக்களைக்குப் போனா. வண்டியை விட்டுட்டேன். அக்காளைப் பாத்து நாளாச்சுல்லா….”
“ஆகாங்…”
“என்ன ஆகாங்… பேசிக்கிட்டே நிக்கே? விடிஞ்சாப்பிலே இருந்து ஒண்ணும் குடிக்காம அலைஞ்சு வந்திருக்கேன்…. பசிக்காதா!”
”அட காலறுவான்…. இன்னா இரி… எல்லாம் ஒன் அதியாரந்தான்….”
மஞ்சளாகப் பழுத்த ஒரு வாழையிலைத் துண்டு. அதன் சுருளை நீக்கி ராசா விரித்துப் பிடிக்க, அந்த ’அக்கா’ கற்சட்டியில் பிழிந்து கொண்டு வந்திருந்த பழைய சோற்றைக் கையால் அள்ளியள்ளி வைப்பாள். ஒரு முழு வேலைக்காரன் திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு. அதன்மேல் கொடியடுப்பில், மண்பானையில், எப்போதும் அனந்து நுரைத்துக் கொண்டிருக்கும் பழங்கறியில் இரண்டு மூன்று சிரட்டை அகப்பை. ‘பழஞ்சித் தண்ணி’யும் கொண்டு வைப்பாள்.
எதையோ நினைத்துக்கொண்டு “எக்கா…. ஏ எக்கா….?’
“என்னா? ஏன் போட்டு தொண்டையைத் தீட்டுகே?”
“ரெண்டு உப்புப் பரல் தரப்பிடாதா? வீட்டிலே எளவு உப்புக்கும் பஞ்சமா?”
“கரி முடிஞ்சு போவான்…. மறந்து போச்சுப்பா… மொளகா வேணுமா?”
“கொண்டா.”
விரல்களை விரித்து, முழு உருண்டையாக உருட்டி ராசா பழையது சாப்பிடுவதைப் பார்த்தால் இரண்டு கவளம் நமக்கும் தரமாட்டானா என்று இருக்கும். ‘நறுக்நறுக்’கென்று பச்சை மிளகாயைக் கடிக்கையில் நாவூறும். வள்ளிசாக ஒரு பருக்கை மீதமில்லாமல் சாப்பிட்டு முடிப்பான்.
“என்னா போருமா?”
“போரும்.. ராசாவுக்கு வயறு நெறஞ்சாச்சு…” தண்ணீர் விட்டுக் கையைக் கழுவுவான். சாப்பிட்ட இடத்தைத் துடைப்பான்.  “அப்பம் ராசா வரட்டா?”
“என்னா அதுக்குள்ளே பொறப்பிட்டாச்சா?”
“அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா. எக்கா, ராசா வண்டியை விட்டிருக்கேன்…. பிள்ளைகளையெல்லாம் பாத்துக்கோ என்னா? வண்டியை விட்டிருகேன்….” விறீர் என்று நடை தொடரும். எங்கே வந்தான்? எங்கே போகிறான்? யாருக்குத் தெரியும்?
அந்த ஊரில் தெருப்படிப்புரை உள்ள எல்லா வீடுகளிலும் இந்த அதிகாரம்தான். அந்த வீட்டில் பழையது இல்லாவிட்டால் அடுத்த வீட்டுக்காரியோ எதிர்த்த வீட்டுக்காரியோ அவன் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து அமுது படைப்பாள்.
பெரும்பாலும் ராசா சாப்பிடவரும் நேரங்களில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. இருந்தாலும் அவன் அதிகாரங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒரு அலட்சியம் அல்லது இளப்பம். குறுஞ்சிரிப்போடு விட்டு விடுவார்கள். சிலருக்கும் மட்டும் அவனுடன் விளையாடத் தோன்றும். “என்ன ராசா! அதியாரம் தூள் பறக்கு? இஞ்ச என்னா அறுத்தடிச்சுக் கொண்டு போட்டிருக்கையா?”
“யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”
“பசிச்சா…? அது கொள்ளாண்டே…!”
”அப்பம் ராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா… வண்டியை விட்டிருகேன்….” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம் குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.
“அட இருப்பா…. சொணையிலே கூடுனவன்தான், ஏவுள்ளா.. ராசாவுக்கு என்னமாங் குடு….”
“ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம். சவம் இப்படி ஒரு பொறவி.. கடவுளு படைச்சு விட்டுட்டான்…” சொல்லும்போதே அந்த ‘சித்தி’க்குக் கண்ணீர் முட்டும்.
ராசாவின் வரத்தும் போக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழும். தொடர்ந்தாற்போல் சில வாரம் கண் மறைவாகப் போய் விடுவான். “ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லை” என்று சில தாய் வயிறுகள் முனகும். நாள் கிழமைகளில் அவன் நினைவு வரும். “மூதி வரச்சிலே எல்லாம் புளிச்ச பழையது குடிச்சிட்டு போகு… ஒரு விசேச நாளுண்ணு வரப்பிடாது? சவன் எங்கின சுத்தீட்டுத் திரியோ?” என்று அங்கலாய்க்கும். இதெல்லாம் அவனுக்கு எட்டுமோ எட்டாதோ? இரண்டு மூன்று நாட்களில் திடீரென காட்சி கிடைக்கும்.
ராசா ஒரு கிறுக்கன் அல்ல. எந்த வயதில் அவன் மன வளர்ச்சி நின்று போனதோ தெரியாது. யாருக்கும் எந்த விதத்திலும் இம்சை செய்ததாகத் தகவல் கிடையாது. எதையும் யாரையும் கவனிக்காத ஒரு நிமிர்ந்த நடை. எதுவும் குறுக்கிட முடியாத வேகம். குறுக்கிட்டாலும் அவன் பொருட்படுத்துவதில்லை. சில சமயங்களில் அவன் சாப்பிடும்போது சிறு குழந்தைகள் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும். ஒன்றை மற்றது அவன் முன்னால் தள்ளிவிடும். மற்றது “கே” என்று கத்தும். அவன் நடக்கையில் பின்னாலிருந்து “ஏ இடலாக்குடி ராசா” என்று கூச்சலிட்டுப் பின் தொடரும். யாராவது வயதானவர்கள் அதட்டினால்தான் உண்டு. ராசாவின் கண்கள் இதனைக் காணவே செய்யும். ஆனால் உதடுகள் பிரிவதில்லை.
*****
வடக்குத் தெரு, மூலைவீட்டு வன்னியப்பெருமாள் வீட்டில் அன்று திருமணம். மூத்த மகளுக்கு. மாப்பிள்ளை செண்பகராமன்புதூர். திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலின் அவ்வூர் இளம் பிராயப் பிள்ளைகள் அனைவரும் நின்று விளம்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணி சாய்ந்தது. காலை எட்டரை மணி முகூர்த்தம். முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டாயிற்று. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், கல்யாணத்துக்கு வந்திருந்த பெண் வீட்டு வெளியூர்க்காரர்கள், உள்ளூர் ஆண்கள், பெண்கள், அடியந்தரக்காரர்கள் அனைவரும் சாப்பிட்டாயிற்று. கடைசியாக விளம்பிக் கொடுத்துவிட்டு நின்ற பையன்களுக்கான தனிப்பந்தி. ஏற்கனவே சாப்பிட்டு விட்டிருந்த ஐந்து பையன்கள் மட்டும் விளம்புவதற்காக நின்றனர்.
எப்போதுமே இந்தப் பந்தி ஏகக் கூச்சலும் கும்மாளியுமாக இருக்கும். உடல் வருத்தம் பாராமல் முன்தின இரவுதொட்டு வேலை செய்தவர்கள், சீமான் வீட்டுச் சீராளன் முதல் கூரை வீட்டுக் குமரன் வரை. படித்துக் கொண்டிருக்கும் அல்லது படிப்பை நிறுத்திய பையன்கள். வேறுபாடுகளற்றுப் புரண்டு மறியும் வயது. எனவே இந்தப் பந்தியில் என்ன நடந்தாலும் கல்யாண அடியந்திரக்காரர்கள் கண்டு முகம் சுளிப்பதில்லை. மாறாக ஒரு மன நிறைவுடன் பார்த்துச் சிரித்துவிட்டுப் போவார்கள்.
இடலாக்குடி ராசா எங்கோ போய்விட்டு ‘விறீர்’ என்று சப்பாத்துக்கலுங்கைத் தாண்டி வடக்குத் தெரு மூலையில் ஏறினான். இனிமேல் யாராவது சாப்பிட பாக்கி இருக்கிறார்களா என்று பார்க்க பந்தலைவிட்டு தெருவுக்கு வந்த பெண்ணின் தம்பி பார்வையில் பட்டான்.
கையோடு கொண்டுபோய், ஆக்குப் புரையில் நிறுத்தினான். கை கழுவி சாப்பிட உட்காரப்போகும் இளைஞர் கூட்டம் ராசாவை உற்சாகமாக வரவேற்றது.
பந்திப்பாய் விரித்து, எதிர் எதிராக இரண்டு வரிசையில் உட்கார்ந்தனர். தென் வடலான அந்தப் பந்தலில், கிழக்கு வரிசையில், தென்னை ஓலை நிரை ஒட்டிய வரிசையின் நடுவில் இடலாக்குடி ராசா. அவன் முகத்தில் பரவசக் கொந்தளம்.
நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து – விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான். பரப்பிரம்மாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.
நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு. கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து…
காது வைத்த செம்பு நிலவாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோருவையால் பறித்து, இலையிலையாக வைத்துக்கொண்டு  போனான் ஒருவன். தன் இலை தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான். “எண்ணேன்… ஏ எண்ணேன்… ராசாக்குப் போடாமப் போறியே…”
சிரிப்பை அடக்கிக்கொண்டு பருப்பு ஊற்றுபவன் வந்தான்.
“எண்ணேன்… ராசாக்கு வயிறு பசிக்கில்லா…”
பருப்புக்கு பின்னால் நெய் வந்தது.
ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்… எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா….”
இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல – ‘சோ’வென்று ஒரு சிரிப்பு. ஒரே சமயத்தில் பொட்டித் தெறித்த அலைகள். பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காள ஓசை.
ராசாவின் கண்களில்….
அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வரு முன்னால்-
“அப்பம் நான் வண்டியை விட்டிருகேன்…” சொற்கள் நனைந்து வந்தன.
திடீரென்று சிரிப்பு நின்றது..
‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா.
யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.
(தீபம், ஏப்ரல் – 1978)
 --
 நாஞ்சில் நாடன்