Tuesday, 9 April 2013

பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு

Inspired by My Close Friend Love.

தலைப்பு நல்கிய  ஜாவீத்க்கு நன்றி

அறந்தாங்கியில் உள்ள பிரபல பள்ளி.
பன்னிரெண்டாம் வகுப்பு.
இன்று தான் கடைசி நாள். இன்றோடு 12ம் வகுப்புகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். இனி தேர்வுகள் மட்டுமே இருந்தது.

இன்றோடு வகுப்புகள் முடிந்தது இனி தேர்வு முடிந்ததற்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்க்க முடியுமோ முடியாதோ. நண்பர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பர வாழ்த்துக்கள், நன்றிகள் என்று கண்ணிருடன் விடை பெற்று கொண்டிருந்தார்கள். நண்பர்களை பிரிந்து செல்வது சற்று கடினம் தான்.

சிவா  ஒவ்வொரு புத்தகமாக எடுத்து வைத்து கொண்டிருந்தான். சங்கர், சிவா இருவரும் சைக்கிளில் தான் ஒன்றாக  வீட்டுக்கு செல்வார்கள். இருவரின் வீடும் அருகருகில். இருவரின் முகமும் சற்று வருத்தம் கலந்து  இருந்தது.

இருவரும்  வகுப்பை விட்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்துகொண்டுஅதை தள்ளி கொண்டே நடந்து சென்றார்கள். வழக்கமாக வகுப்பு முடிந்து மணி அடித்ததும் சிட்டாய் பறக்கும் இருவரும் இன்று இவ்வாறு நடந்து சென்றது ஆர்ச்சர்யம் இல்லை.

நடந்து செல்லும் வழியில் இருவரும் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டே சென்றனர். சிவா  தான் Teacher Training சேரப் போவதாக சொன்னான். சங்கர் தான் அவ்வூரிலயே Arts ans Science சேர போவதாக சொன்னான். இருவரும் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

வீடு வந்ததும் தேர்வன்று சந்திப்பதாக சொல்லி விட்டு சென்றனர்.

தேர்வுகள் நடந்து  முடிந்து, முடுவுகளும் வெளிஇடப்பட்டது. இவர்கள் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி  பெற்றிருந்தார்கள். அவர்கள் விருப்பப்படி  இருவரும் கல்லூரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்ததும் இருவரின் வீட்டில் இருந்தவர்களும் அவர்களை பொறியியல் படிக்குமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் குடும்ப சூழ் நிலை அவர்களை பயமுறுத்தியது. சிவா  நான்கு தங்கைகளுடன் பிறந்தவன். சங்கர் ஒரு தங்கையுடன் பிறந்தவன். இருவரில்  சிவாவின் நிலைமைதான் சற்று மோசமானது.

தங்கைகளை படிக்க வைத்து நல்ல இடத்தில திருமணம் செய்துவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான் அவன் T.T விண்ணப்பித்து இருந்தான். ஆனால் சொந்தங்கள் பேச்சை தட்ட முடியாமல் அவனும் கரூரில்  உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.

சிவா   பன்னிரெண்டாவது  படித்து முடித்த அதே நேரம், ஈரோடு  மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளியில் இருந்து  முதல் வகுப்பு தேர்ச்சியுடன் வெளியே வந்தாள் சக்தி. இவளும் சிவா சேர்ந்த அதே கல்லூரியில் சேர்ந்தாள்.

இது வரை வீட்டிலிருந்தே பள்ளி சென்ற சிவா முதல் முறையாக ஹாஸ்டலில் தங்க போகிறான். தமிழ் வழியில்கல்வி பயின்றவன் முதல் முறையாக ஆங்கில வழியில் கல்வி பயில போகிறான். எண்ணற்ற கனவுகளோடு கல்லூரியில் சேர்ந்தான்.

இவனைபோலவே இன்னும் சிலர் அதே கல்லூரியில் இவனுடன்  சேர்ந்தனர். ஆனால் இவர்கள் தான் சிவாவின் வாழ்கையை மாற்ற போகிறவர்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

(இதுக்கு மேல என்னால இந்த மாதிரி தமிழ்ல எழுத முடியல).... இனிமே தங்கலிஷ்லையே எழுதறேன்..... மன்னிக்கவும் நண்பர்களே ...

ஹாஸ்டல்ல சேர்ந்த  முதல் நாள்அவன் ரூம் மேட்டாக வந்தவங்க ராஜா, செந்தில் , செல்வா (எ) செல்வகுமார். இந்த நாலு பேருமே நாலு விதம். ஒருத்தன் பேசவே மாட்டன். ஒருத்தன் பேசியே கொல்வான். ஒருத்தன் காமெடி பீசு. இது யார் யாருன்னு சொன்னா என்ன விரட்டி விரட்டி அடிப்பாங்க அதனால் அப்படியே விட்ட்ருவோம். ஆனா கூடிய சீக்கிரம் உளறி விடுவேன். அது மட்டும் கன்பார்ம்.

காலேஜ் ஜாயின் பன்ன முதல் நாள்.

காலேஜ்ல பர்ஸ்ட் இயர் பர்ஸ்ட் செம் எல்லா டிபர்ட்மெண்டுக்கும் ஒரே சப்ஜெக்ட் தான் அதனால மிக்ஸ் பண்ணி தான் கிளாஸ் பிருச்சு விட்ருப்பாங்க.

அப்படி வந்து சேந்தவ தான் சக்தி. சொல்ல போனா இவங்க நாலு பேரும் ஒரே Department. அதனால எல்லோரும் ஒரே கிளாஸ் தான்.

ஒரு  சில பேருக்கு பர்ஸ்ட் சைட் லவ் மேல நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு பத்து பழகுன பின்னாடி  தான் லவ் வரும்.ஒரு சிலருக்கு சும்மா பிரெண்ட்ஸ் ஏத்தி விட்டு லவ் வரும்.

இவங்க லவ் எப்படின்னு போக போக புருஞ்சுக்கு வீங்க.

கிளாஸ் ல மட்டும் தான் பசங்க பொண்ணுங்கன்னு தனி தனிய இருக்கணும். லேப்ல அஞ்சு அஞ்சு நம்பரா   பிரிச்சு விற்றுவாங்க.  அன்னைக்கி கடைசி  பீரியட் தான் லேப் (என்ன லேப்ன்னு தெரியல).

அந்த கூட்டத்துல இவங்க (அதாங்க நம்ம ஹீரோ ஹீரோயின்) ஒரே பேட்ச்ல வந்தாங்க.

அப்ப தான் இவங்க ரெண்டு பேரும்அவங்க அவங்க பேர் என்னன்னு கேக்குறாங்க. நம்ம ஹீரோ நம்லமாதிரி தங்கலிஷ் தான்.

ஆனா இந்த பொண்ணுங்க இருக்காங்களே பசங்க பக்கத்துல வர்ற வரைக்கும் தமிழில் தான் பேசுவாங்க ஆனா பசங்க பக்கத்துல வந்தா மட்டும் ஏதோ எலிசபெத் சொந்த காரி கணக்கா பேசுவாங்க.

"ஹாய்"

"ஹாய்"

" என் பேர் சிவா "

"ஐ  அம்  சக்தி"  (நான் சொல்லல.... இந்த பொண்ணுங்களே இப்படிதான் )

சோ ரெண்டு பேரும் அடுத்தவங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க.

முதல்  நாள் லேப்ல அப்படியொண்ணும் பெருசா வேலை இருக்காது. லேப் முடுஞ்சு வெளியே வரும் போது bye சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.

இப்படியே ஒரு ரெண்டு மாதம் போச்சு.

(First Semester மட்டும்  எல்லா  Department labum செய்யணும் )

அப்படி ஒரு நாள் மெக்கானிகல் லேப்ல வெல்டிங் அடிக்கிற எக்ஸ்ப்ரிமென்ட்.

நம்ம ஹீரோ சிவகாசி விஜய் மாதிரி சும்மா ஸ்டைலா அடிச்சு முடுசிட்டார்.
ஹீரோயின்  வழக்கம் போல தான்....  சும்மாவே நின்னுகிட்டு இருந்தாங்க.
வழக்கமா  ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனைனா நாடி நரம்பு எல்லாம் புடைத்துக்கொண்டு வெளிய வரும். அதே மாதிரி இவரும் போய் அவங்களுக்கு ஹெல்ப் பன்ன .... வந்துது பாருங்க ஒரு சவுண்ட் ..... ப்பா ....

அது வேற யாரும் இல்லங்க லேப் இன்சார்ஜ்.

அவரு,  இங்க என்னடா பன்னுரன்னு கேக்க இவரும் ஒன்னும் இல்ல சொல்லி சமாலுச்சிட்டு வந்துட்டாரு. ஆனா நம்ம ஆளு யாரு ஹீரோவாச்சே.
சும்மா விடுவாரா.
பக்கத்து டேபிள்ல நின்னுக்கிட்டு இவரு கண்ணாலையே சொல்ல அவங்களும் அதே மாதிரி பண்ணி முடுச்ட்டாங்க.


 அதுக்கு அப்புறம் இவங்க அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல இவரு கொஞ்ச பெருந்தன்மையா இட்ஸ் ஒகே ன்னு சொல்ல...... ச்ச்ஷ்ப்பா முடியல ....






அதுக்கு அப்புறம் லேபெல்லாம் முடுஞ்சு அப்படியே பர்ஸ்ட் செமஸ்டரும் முடுஞ்சுருச்சு.

அதுக்கு  அப்புறம் என்ன நடந்துதுன்னு அப்புறம் பாக்கலாம்.

Monday, 8 April 2013

கடைசி ஆசை

கி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன்.

"நண்பரே, உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் த.பொ. அவனிடம். அவன் மரணதண்டனைக் கைதி. அவன் செய்த குற்றம் நமது கதைக்கு தேவையற்றது என்பதால் நேரடியாக அவனது கடைசி ஆசைக்கு செல்வோம்.

"அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துவிட்டதா?" என்றான் அவன்.

"ஆம் நண்பரே, இன்னும் 1 மணிநேரத்தில் தங்களது தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. எனவே உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றச் செல்வோமா?"

"கண்டிப்பாக" என்றான் மனதெங்கு‍‍‍ம் மகிழ்ச்சியுடன்.

*********

அடுத்த அறையில்...

"நண்பரே, இதுதான் கால இயந்திரம். உங்கள் கடைசி ஆசையின்படி நீங்கள் இதில் பயணம் செய்யப்போகிறீர்கள்...ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்"

அவன் அமைதியாக இருந்தான்.

"முதலில், நீங்கள் இறந்த காலத்திற்குத்தான் செல்ல முடியும், எதிர்காலத்திற்கு அல்ல, நீங்கள் மரணதண்டனை குற்றவாளி என்பதால். அடுத்தது உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே, அதன்பின் நீங்களாகவே திரும்பிவிட வேண்டும், 1 நிமிட தாமதம் கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மூன்றாவது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்ல முடியும், அங்கேயிருந்து வேறு ஒரு காலத்திற்கு உங்களால் செல்ல முடியாது, திரும்பி இங்கே வருவது மட்டுமே சாத்தியம். புரிகிறதா?"

"புரிகிறது"

"எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள்?"

"நூறு ஆண்டுகளுக்கு முன்னால்"

"நல்ல தேர்வு, மாசுபடாத காற்று, சுத்தமான நீர், அபரிமிதமான இயற்கை வளம் எல்லாம் அனுபவிக்க முடியும்."

மறுபுறம் திரும்பி அங்கே இருந்த க்வான்டம் கணினியில் ஒரு சில உள்ளீடுகளைச் செய்தார்.

"உலகின் எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா? கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா?"

அவன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன். காதலியுடன் ஐரோப்பா முழுவதையும் ரசித்தவன். எனவே

"கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று"

"கண்டிப்பாக ந‌ண்ப‌ரே"

மீண்டும் ஏதோ உள்ளீடுகளைச் செய்தார்.

"அனைத்தும் தயார். இதை அணிந்து கொள்ளுங்கள். இது இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி உள்ளன என்று காட்டும். இதோ இந்த கதவில் உள்ளே செல்லுங்கள். கடைசியாக சில அறிவுரைகள், நீங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் செல்லப் போகிறீர்கள். இந்த கால இயந்திரம் நவீன க்வாண்டம் கணிணியின் உதவியுடன் உங்களை குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்ப உதவும். சரியாக கிளம்பிய 55 நிமிடத்தில் நீங்கள் மீண்டும் இதற்குள் வந்து இந்த சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் இங்கேயே திரும்பி வந்து சேருவீர்கள். மீண்டும் சொல்கிறேன். கால தாமதம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மேலும் இது 16 மெகா பிட் நீளமுள்ள பாதுகாப்புத் தகவலுடன் இயங்குகிறது, தற்போதுள்ள அதிவேக க்வாண்டம் கணினியால் இதை உடைக்கவே 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே உங்களுக்கு இருக்கும் 55 நிமிடத்தில் முயற்சி செய்யாதீர்கள்."

"நான் தயார்" என்றான் அவன்.

"உற்சாகமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்."

த‌.பொ. மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பின் பச்சை நிறத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.


********

அவன் சடாரென உள்ளிழுக்கப்பட்டான் அல்லது பட்டதாக உணர்ந்தான். அடுத்த வினாடி அவனது கால் மற்றும் கை விரல்களில் ஆரம்பித்த வலி உடலெங்கும் பரவ ஆரம்பித்தது. அவன் உடல் வெப்பநிலை திடீரென்று உயர்ந்தது.

'என்ன இது.. நான் ஏமாற்றப்பட்டேனா? எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா?'

அவன் வலியால் கத்த ஆரம்பித்த நேரம் அவன் பனி வெள்ளத்திற்குள் விழுந்தது போல் உணர்ந்தான். வலி முற்றிலும் இல்லாமல் காற்றில்லா தளத்தில் மிதப்பது போல். அவன் மனதை அதுவரை அவன் கடந்த மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பினான்.

பத்து வயது சிறுவனாக அம்மா மடியில் தலை வைத்து படுத்தான். பதினைந்து வயதில் சக தோழியிடம் இருந்து முதல் முத்தம் பெற்றான். கைத்தட்டல்களுக்கு நடுவே பல்கலை கழகத்தின் மேடையில் தங்கப்பதக்கம் பெற்றான். காதலியுடன் ஐரோப்பிய தங்கும் அறைகளில் கட்டிப் புரண்டான்.

அவன் நினைவு தடைபட்டது. எதன் மீதோ மோதி பிடிமானமில்லாமல் விழுந்தான். மெல்ல கண்களைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன. கால இயந்திரம் ஏதோ ஒரு அழகான பூங்காவின் பச்சைப் புல்வெளியில் நின்றிருந்தது.

மணிக்கட்டைப் பார்த்தான். இன்னும் 54 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கதவைத் திறந்து வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்தான்.

'இதோ இங்கே இரண்டாயிரம் காவலர்களின் பாதுகாப்பு இல்லை. கதவுகளைத் திறக்க இருநூற்று ஐம்பத்தாறு எழுத்துகளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு மாத்திரைகள் இல்லை. தப்பிச் செல்லாமல் இருக்க பதினாறு வளைய சுற்றுச் சுவர்கள் இல்லை. வான் வழித் தப்புதலைத் தடுக்க கண்ணிற்குத் தெரியாத லேசர் படலங்கள் இல்லை. சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிக்க நினைப்போரை பொடிப் பொடியாக்கிக் கரைக்கும் அமிலக் குழாய்கள் இல்லை.

நினைக்கும் போதெல்லாம் நாவிற்கு சுவையான உணவு, சுதந்திரமான சுற்றுப்புறம், அபரிமிதமான பெட்ரோல், அழகான பெண்கள்.

இல்லை. நான் திரும்பிப் போவது இல்லை. இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேன். முதலில் இங்கேயிருந்து தொலைவில் செல்ல வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு. ஒருவேளை அவர்கள் என்னைத் தேடி வந்தாலும், என்னைப் பிடிப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கக் கூடாது. திரும்பிச் சென்றால் உடனடியாக நான் லேசர் அறைக்குள் அனுப்பப்பட்டு என் சாம்பல் கடலில் கரைக்கப்படும். இங்கேயே இருப்பதன் மூலம் அவர்கள் வந்து என்னைப் பிடித்தாலும் குறைந்தது எனது ஆயுள் ஒரு மணிநேரமாவது நீட்டிக்கப்படும்.

ஒருவேளை அவர்கள் வராமலே போனால் புதிய வாழ்க்கையை தொடங்குவேன். ஆம் அதுதான் சரி'

நினைத்துக்கொண்டே கால இயந்திரத்தை விட்டு நகரம் தெரிந்த திசையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

******

அங்கே....

"இவர் திரும்பி வருவார் என்று நம்புகிறீர்களா?" என்றார் உதவிக்காவலர்.

பதில் சொல்லாமல் புன்னகைத்தார் த.பொ.

******

அது ஒரு அற்புதமான காலை நேரம். சூரியன் லேசாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. வழியில் பார்த்த எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருப்பதாக பட்டது அவனுக்கு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்; தெருவை சுத்தப்படுத்திக் கொண்டும், பள்ளிக்கு சென்று கொண்டும், தினப் பத்திரிக்கைகளை விற்றுக் கொண்டும், இரு சக்கர மிதிவண்டிகளில் அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டும்....

'ம்ம்ம்ம் நூறு ஆண்டுகளில் உலகம் எவ்வளவுதான் மாறிவிட்டது'

அவனுக்கு அப்பொழுது ஒரே பிரச்சினை, தான் எங்கே இருக்கிறேன், எந்த தேதியில் இருக்கிறேன் என்று தெரியாதது. எல்லா அறிவிப்புப் பலகைகளிலும் சித்திர எழுத்துகளே பிரதானமாக இருந்தது. எந்த நாடு என்பதைக் கூட யூகிக்க முடியவில்லை.

எதிப்பட்டவர்களிடம் "இங்கிலீஷ்" என்றான். எல்லோரும் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு தலையை இட வலமாக அசைத்தனர்.அரை மணி நேர நடைக்குப் பின்னர் நகரத்தின் முக்கிய வீதியை வந்தடைந்தான். மற்ற இடங்களை விட இது பரபரப்பாக இருந்தது. மணிக்கட்டை பார்த்தான் 22 என்று காட்டியது.

வீதியில் நடக்க ஆரம்பித்தான். வழியிலிருந்த தண்ணீர் குழாயில் குளிர்ந்த நீரை உடலெல்லாம் வழிய வயிறு முட்டக் குடித்தான். சின்ன சின்னதாக கால்களை ஆட்டியவாறு நடைபாதையிலேயே குட்டி ஆட்டம் ஆடினான்.

எதிர்ப்பட்டவர்களிடம் ஆட்களைத் தேர்ந்தெடுத்து "இங்கிலீஷ்" என்றான், வெகு நேரத்திற்கு வெற்றி இல்லாமல். கடைசியாக ஒருவன் "யெஸ்" என்றான்.

மனம் நிறைந்த மகிழ்வுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான்.

"இது எந்த நாடு?"

"ஆச்சரியமான கேள்வி. நீங்கள் என்னை சோதிக்கிறீர்களா? நீங்கள் இருப்பது எம்பயர் ஆஃப் ஜப்பான்"

'அற்புதம், சரியான இடத்தில்தான் இருக்கிறேன். ஜப்பானின் வேகமான வளர்ச்சியில் நானும் பங்கு கொள்ளப் போகிறேன், தொண்ணூறுகளில் பொருளாதார தாழ்நிலை ஏற்படும்போது நான் இயற்கையாகவே மரித்திருப்பேன்'

*******

அங்கே....

"இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றது" என்றார் உதவிக்காவலர் தவிப்புடன்.

"காத்திருப்போம்" என்றார் த.பொ.

*******

"நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறீர்கள்?"

"என் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான். நீங்கள்?"

"நான் அமெரிக்காவில் படித்தவன்"

அவர் முகம் மாறியது.

"இந்தியன். ஆனால் படித்தது மட்டும் அமெரிக்காவில். இனி பிழைக்கப் போவது இந்த ஜப்பானில்"

அவர் சிரித்துக் கொண்டே "நல்வரவு" என்றார்.

*******

அங்கே...

உதவிக்காவலர் பதறினார் "55 நிமிடங்களிக்கு மேலே 15 வினாடிகள் ஆகிவிட்டன. அவர் திரும்பி வருவதாகத் தெரியவில்லை. இன்னும் கால இயந்திரம் திரும்புவதற்காக ஆரம்பிக்கப்படவே இல்லை. அவர் திரும்பி வரப் போவதில்லை"

த‌.பொ. எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து சுவரிலிருந்த தகவல் பலகைக்குப் போனார். அங்கே அவன் புகைப்படத்திற்கு நேராக இருந்த 'தண்டனை நிறைவேற்றப்பட்டது' என்ற பொத்தானை அழுத்தினார்.

*******

அவன் உற்சாகமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"இன்றைய தேதி என்ன?"

"ஹா..ஹா..ஹா..நீங்கள் என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, 1945ம் வருடம், நேரம் காலை 8.14 மணி. நீங்கள் நின்று கொண்டிருப்பது நகரின் பிரபலமான‌ ஷிமா மருத்துவமனை வாசலில். போதுமா தகவல்கள்?"

ஏதோ நெருடியது...'06 ஆகஸ்ட் 1945, காலை 8.14 மணி'

நடுங்கும் குரலில் கேட்டான் "இது என்ன நகரம்?"

அவர் உற்சாகமாக பதிலளித்தார் "ஹிரோஷிமா"

32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் ஓசை அவன் காதில் கேட்டது.

--
வெண்பூ

Friday, 5 April 2013

நான் புனே போன கதை

ஒரு ரெண்டு வருசத்துக்கு சென்னை சூளைமேடுல நானும் என்னுடைய நண்பர்களும் ஒரு வாடகை வீட்ல தங்கி இருந்தோம். இப்போ அது மேட்டர் இல்ல. மேட்டர் என்னன்னா ..... சொல்றேன்...

அப்போ எல்லோருக்கும் (ரூம்ல இருந்த என்னுடைய நண்பர்கள் ) பேருக்கு வேலைன்னு ஒன்னு இருந்துச்சு. ஒரு நாள் நைட் நான் என்னுடைய நண்பர்கள் முருகேஷ் மற்றும் கார்த்தி (இவர் தான் இந்த கதையோட ஹீரோ ) மூணு பேரும் சாப்பிட போனோம். ஏதோ பேசிக்கொண்டு இருக்கையல திடிர்ருன்னு பேச்சு புனே பக்கம் போச்சு. நானும் புனே போய் இருக்கேன்னு சொன்னேன்.(கனவுல ... இது நம்ம ஹீரோவுக்கு தெரியாது )

நான் சொன்னதும் அவன் அப்படியே ஷாக் ஆகிட்டான்

"எப்படா  போனா"

"டென்த் படிக்கும் போதுடா "

"எதுல போனா "

"எங்க ஊர்ல இருந்து  மாமா கூட கார்ல போனேன் (இதெல்லாம் எப்படின்னு கூட இன்னும் தெரியல.. அதுவா வருது..... இன்னும் கூட கார்ல நாலு கிலோ மீட்டருக்கு மேல போனது இல்ல ...  )".

"கார்லையா ஹ்ம்ம்"  கொஞ்சம் பீல்  பன்னுனான்.

"எதுக்கு"  ன்னு கேட்டான்.

"எங்க மாமா அங்க வண்டி ஒட்டுறார் அவர் கூட சும்மா போனேன்". (ஆனா உண்மைல அவரு வண்டி ஒட்டுனது கள்ளகுருச்சில )

"என்ன வண்டி"

"புல் டோசர்"  (அப்போ இந்த வண்டி நார்த்ல கொஞ்சம் அதிகமா ஓடி கொண்டு இருந்துச்சு).

"ஓ"
 --

Oh my God
இதுக்கும் மேலையும் நம்ம ஹீரோ கண்டு பிடிக்கல (பின்ன நான் கார்ல... அதுவும் புனே வரைக்கும் போனேன்னு சொன்னா யாரவது நம்புவாங்கள )
சரி  சாப்பிட்டு ரூம் போற வரைக்கும்கொஞ்சம் என்டேர்டைன்மென்ட் வேணும்ல ... நானும் என்னுடைய கற்பனை  கதைய கண்டின்யூ பண்ணேன்.
--
எவ்ளோ  நாள் ஆச்சுன்னு கேட்டான்.

ஆமாடா, ரெண்டு நாள் ஆச்சு ஜாலியா வெடிக்க பார்த்துக்கொண்டே போனேன். எங்க மாமா அப்போ மாருதி 800 வச்சுருந்தார் அதுல தான் போனேன்.(சத்தியமா அப்போ அந்த கார் இருந்துச்சா என்னனு கூட எனக்கு  தெரியாது).

கூட வந்த முருகேஷ் எதுவுமே பேசல. இவனும் நம்புறான்  போலன்னு நெனைச்சேன். ஆனா பய கொஞ்சம் உசாரு . கேள்வி கேக்கல.

வரும் போது வாழைப்பழம் கூட  வாங்கி  கொடுத்தான்.(மனசு கேக்கல இருந்தாலும் ஒரு பழம் போயிருமே உண்மைய சொன்னா ... கொஞ்சம் நேரம் கழித்து சொல்லுவோம்ன்னு விட்டுடேன் )...

இப்படியாக சாப்பிட்டு முடுச்சிட்டு ரூம்க்கு ஸ்டெப் ல வரும் போது சொன்னேன்.

"ஏண்டா இதெல்லாம் நம்புறையான்னு "

ஒரு ரியாக்சன் குடுத்தான் பாருன்ங்க தனுஷ் படிக்காதவன் படத்துல ஆர்த்தி I LOVE YOU MAMA ன்னு சொன்னதுக்கு ஒரு ரியாக்சன் குடுப்பரே அதே மாதிரி.

முருகேஷ் கேக்கபிக்கே சிரிகுறான்.

 அப்புறம் கொஞ்ச நேரம் ஏதுவுமே பேசல.

இந்த மாதிரி அப்பாவி இருந்தவரு இப்போ .....

.
.
.
.
.
.
.
"  கொஞ்சம்" உசார்ராகிட்டான்.


சாரி  மிஸ்டர் கார்த்தி ... :)

Thursday, 4 April 2013

தாய்மண்

அன்று மிகவும் உற்சாகமாய் இருந்தான் சங்கர். ஒரு மாத இரவு பகல் பாராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியில் மிதந்து கொண்டிருந்தான்

அந்த பெரிய கிளயன்ட்டின் ப்ராஜெக்ட் ஒகே ஆனதில் தன் டீமில் நிறைய பேரின் வேலையை காப்பாற்றிய நிம்மதியில் இருந்தான்

அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணத்தின் பணம் படைத்தவர்கள் வசிக்கும் இடத்தில், அரை ஏக்கரில் மாளிகையாய்  அமைந்த தன் வீட்டை நெருங்கும் போதே, அந்த மாற்றம் உறுத்தியது சங்கருக்கு

கார் சத்தம் கேட்டதும் garage கதவு திறந்து முன் வாசலில் வந்து நிற்கும் மனைவியை காணோம். காரை விட்டு இறங்கும் முன் "டாடி" என தாவும் மகளையும் காணோம்

காலிங் பெல் அடிக்கவும் வீட்டில் வேலை செய்யும் சீனப்பெண் வந்து கதவை திறந்தாள்

"Did Preethi and her mom went out?" என கேட்க

"No... up...room" என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்க முயன்றாள். அதை கேட்டதும் சங்கரின் முகத்தில் சற்று முன் இருந்த உற்சாகம் காணாமல் போனது. உள்ளே இருந்து கொண்டே ஏன் தான் வந்தும் கீழே வரவில்லை என குழம்பினான்

வேகமாய் படியேறினான். ஒவ்வொரு அறையாய் தேடியவன், வெளிப்புற terrace பெஞ்ச்ல் மனைவியும் மகளும் ஆளுக்கு ஒரு புத்தகத்தில் புதைந்திருப்பதை பார்த்ததும்

"ஹலோ மை ஸ்வீட் ஏஞ்செல்ஸ்" என இருவருக்கும் நடுவில் சென்று அமர்ந்தான்

மகள் அவனை விட்டு விலகி அமர "என்னாச்சுடி செல்லம்... அம்மா திட்டினாளா?" எனவும்

"வேண்டாம்... என்னை வம்பிளுக்காதீங்க சொல்லிட்டேன்" என்றாள் அவன் மனைவி செல்வி

"மம்மி...டாடிகிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல... ஏன் பேசற?" என சீறினாள் சங்கரின் ஐந்து வயது செல்லம் ப்ரீத்தி

"ஏய் குட்டி வாலு... என்னடி அத்தன கோபம் இப்போ?" என வலுக்கட்டாயமாய் அவளை தூக்கி மடியில் இருத்த முயன்றான்,  திமிறினாள் ப்ரீத்தி

"என்ன செல்வி நீயாச்சும் சொல்லேன்... என்னாச்சு?" என பாவமாய் சங்கர் கேட்க அதற்கு மேல் செல்வியால் மௌனமாய் இருக்க இயலவில்லை

"இன்னிக்கி ப்ரீத்தி ஸ்கூல் chirstmas concert க்கு வரேன்னு சொன்னீங்கல்ல... பாவம் கொழந்த எவ்ளோ எதிர்பாத்துட்டு இருந்தா தெரியுமா? நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு மிஸ் Maddy கிட்ட கேட்டு அவ ப்ரோக்ராம் கூட கடைசிக்கு மாத்த சொன்னா கொழந்த" என கூறவும் சங்கர் குற்ற உணர்வில் தவித்தான்

"சாரி ப்ரீத்தி குட்டி... ஆபீஸ்ல..." என்றவனை பேச விடாமல் இடை மறித்தாள் ப்ரீத்தி

"ஐ ஹேட் யு டாடி... சும்மா பொய் சொல்லாத... ஜூலி டாடி உன் ஆபீஸ் தானே... அவர் எல்லாம் மொதலே வந்து அவளுக்கு மேக்அப் எல்லாம் போட ஹெல்ப் பண்ணினார்... நான் ஜூலி வீட்டுலையே பொறந்து இருக்கலாம்... ஐ ஹேட் யு ஐ ஹேட் யு ஐ ஹேட் யு" என அழுது கொண்டே அன்னையிடம் சென்றவள் "மம்மி எனக்கு பசிக்குது" என செல்வியின் மடியில் விழுந்தாள்

சங்கர் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்

கணவனின் அதிர்ச்சியை புரிந்தவளாய் "உங்களுக்காக தான் சாப்பிடாம வெயிட் பண்றோம்...வாங்க சாப்பிடலாம்" என பேச்சை மாற்றினாள் செல்வி

"நீங்க சாப்பிடுங்க... நான் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்... " என்றபடி நகர்ந்தான்

                                              ****************************

"நான் ஒரு நல்ல அப்பாவா இல்லையா செல்வி?" என அருகில் படுத்திருந்த மனைவியின் கையை பற்றி கன்னத்தோடு இழைத்து கொண்டே கேட்டான் சங்கர்

"என்னப்பா நீங்க? கொழந்த சொன்னத போய் பெருசு பண்ணிக்கிட்டு... காலைல எழுந்ததும் ஹாய் டாடினு கழுத்த கட்டிப்பா பாருங்க... அவ்ளோ தான் உங்க மகளோட கோபத்துக்கு ஆயுசு" என கணவனுக்கு ஆதரவாய் பேசினாள் செல்வி

"அவ கோபத்துக்காக சொல்லலடி... எனக்கே ரெம்ப குற்ற உணர்வா இருக்கு... நானெல்லாம் சின்னதுல ஒரு சின்ன விசயம் செஞ்சா கூட எங்க அப்பா ஊரே சொல்லுவாரு... ஒவ்வொரு விசயத்தையும் கவனிச்சு எவ்ளோ என்கரேஜ் பண்ணுவாரு தெரியுமா..."

"......." அவனே பேசி மன பாரம் குறைக்கட்டும் என நினைத்தவளாய் மௌனமாய் இருந்தாள் செல்வி

"எப்ப பாரு ஆபீஸ் ஆபீஸ்னு நான் ப்ரீத்தியோட டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல செல்வி... இன்னிக்கி ஸ்கூல்க்கு வரேன்னு சொன்னத கூட மறந்துட்டேன்...நெஜமா ரெம்ப கில்டியா இருக்கு... உங்கள வெளிய ஒரு அவுட்டிங் கூட்டிட்டு போய் கூட ஒரு மாசம் இருக்குமல்ல?" என்ற கணவனை ஆறுதலாய் பார்த்தவள் செல்வி

"நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?"

"என்ன?"

"பொங்கலுக்கு ஊருக்கு போலாமா? ரெம்ப நாளாச்சுங்க"

"ஏய் சொல்ல மறந்துட்டேன்... அம்மா இன்னைக்கி என் செல்லுக்கு கூப்ட்டாங்க..."

"தெரியும்... அதை இவ்ளோ நேரமா சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்து பொறுமை போய் நானே பேச்சை எடுத்தேன்" என கோபமாய் கூறினாள்

"உனக்கு யாருடி சொன்னா? என்னை உளவு பாக்க ஆபீஸ்ல ஆள் செட் பண்ணி இருக்கியா?" என மையலாய் புன்னகைத்தான்

"அது ஒண்ணு தான் கொறச்சல்... நான் ஊருக்கு போன் பண்ணினேன் இன்னிக்கி... அத்தை தான் சொன்னாங்க உங்ககிட்ட பேசினதா"

"ஓ... சாரி சொல்ல மறந்துட்டேன்"

"உங்களுக்கு ஆபீஸ் தவிர வேற என்ன தான் நெனப்புல இருக்கு... வீட்டுல இருக்கற கொஞ்ச நேரமும் டிவி முன்னால... எதாச்சும் பேசுங்கன்னா என்ன பேசறதுனு சலிச்சுபீங்க... இந்த மாதிரி போன் விசயம் கூட சொல்றதில்ல" என முறைத்தாள்

"என்னடி இதுக்கு போய் கோவிச்சுக்கற?"

"பின்ன கொஞ்சுவாங்களா?"

"ஓ... கொஞ்சலாமே... என் அத்தை பெத்த ரத்தினமே, எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்ல, செல்வி, என் செல்ல தமிழ்ச்செல்வி... அழகான பேருடி உனக்கு" என மனைவியின் இடையை சுற்றி அணைத்தான்

"போதுமே... நைட்ல இழைய வேண்டியது... காலைல எழுந்ததும் அழவெக்க வேண்டியது" என சலித்தாள்

"நான் எப்படா உன்ன அழவெச்சேன்?" என அவன் கேள்வியாய் நோக்க

"அப்ப இன்னிக்கி காலைல என்னை திட்டினது கூட நெனப்பில்லையா?" என முறைத்தாள்

"இன்னைக்கா?" என அவன் புரியாமல் விழிக்க

"சமாதானம் செய்யாட்டி கூட பரவாயில்ல... திட்டனதே நெனப்பில்லைனா... உங்கள திருத்தவே முடியாது" என அவன் கையை விலக்கி மறுபுறம் திரும்பி படுத்தாள்

"ஏய்... காலைல கெளம்பற அவசரத்துல எதாச்சும் டென்சனா பேசி இருப்பேன்... அதை போய் பெருசு படுத்துறியே கண்ணம்மா" என அவள் முகம் பற்றி திருப்பினான்

அவனின் பாவமான பார்வையில் சற்று மனம் நெகிழ "அப்ப நான் சொல்றத கேளுங்க... உங்களுக்கும் ஒரு சேன்ஜ் வேணும்... ப்ரீத்தியும் என்ஜாய் பண்ணுவா... இந்தியா போயிட்டு வரலாம் ப்ளீஸ்"

"எனக்கும் ஆசையா தான் இருக்கு செல்வி... ஆனா ஆபீஸ்..."

"ஆபீஸ் எப்பவும் தான்பா இருக்கு... நாம இப்படியே இருந்தா ப்ரீத்திக்கு நம்ம உறவு ஜனம், பேச்சுவழக்கு, கலாச்சாரம் எல்லாமும் அந்நியமாய்டும்னு பயமா இருக்குப்பா...ப்ளீஸ்" என கெஞ்சல் பார்வை பார்க்க,  அவள் கூற்றில் இருந்த நியாயமும் மனதில் பட, அதற்கு மேல் மறுக்க இயலாதவனாய்

"ஒகே... நீ சொல்றத நான் செய்ய முயற்சி பண்றேன்... அதுக்கு முன்னாடி நான் சொல்றத நீ செய்யணும்" என குறும்பாய் கண் சிமிட்டினான்

"என்ன?" என பதில் தெரிந்தே கேள்வி கேட்டாள் அவன் மனைவி

"அதான் கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டியே... கொஞ்சரதானு...அதை செய்" என சிரித்தான்

"ம்...மொதல்ல நான் சொன்னத நீங்க செய்ங்க... அப்புறம் நீங்க சொல்றத நான் செய்யறேன்... சரியா?" என அவன் தாடையை பற்றி கேலியாய் கூறினாள்

"ராட்சசி...." என அவளை பற்றி இருந்த பிடியை மேலும் இறுக்கினான்

                                        **************************************

சொந்த மண்ணில் கால் பட்டதும் ஒரு நாள் முழுக்க விமானத்தில் பயணம் செய்த அலுப்பு கூட பறந்து போனது சங்கருக்கு. இந்த பயணம் தன் வாழ்வையே திசை திருப்ப போவதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை

சொந்த ஊரை ரசிக்கும் ஆவலில் டாக்ஸி டிரைவரிடம் சற்று மெதுவாய் செல்லுமாறு பணித்தான்

அறுப்புக்கு காத்திருக்கும் பச்சை பசேல் வயல் வெளியும்...
பாசாங்கற்ற மனிதர்களின் முகமும்...
சிலு சிலுவென்ற காற்றும்...
தென்றலின் இசைக்கேற்ப நடனமாடும் மங்கை போல் தலை அசைக்கும் தென்னை மரங்களும்...
மடை நீரில் நடை பயிலும் நாரைகளும்...
வேட்டியை மடித்து கட்டி வரப்பில் எட்டி நடை போடும் உழைப்பாளிகளும்...
கண்டாங்கி சேலை முடிந்து தூக்கு சட்டி கையில் தொங்க கதை பேசி செல்லும் பெண்கள் கூட்டமும்...
ம்ம்மா என குரல் கொடுத்து தன் பசி உரைக்கும் கோமாதாவின் குரலும்...
கழுத்து மணி ஒலிக்க அவர்களின் முன் சென்று  கொண்டிருந்த  ரெட்டை  மாட்டு வண்டியும்...
செம்மண் குழைத்த வீடுகளும்...
சாணி மெழுகிய திண்ணைகளும்...
வாசல் கோலத்தில் நிறைந்த சாணி பிள்ளையார்கள் மேல் பூத்திருந்த பூசணிப் பூக்களும்...
பொங்கலுக்கென வெள்ளை சாயம் பூசி இருந்த தெருக்களும்...
தூரத்தில் ஒலித்த கோவில் மணி ஓசையும்...
நகரின் பரபரப்பற்ற சூழ்நிலையும்...பார்க்க பார்க்க தெவிட்டவில்லை சங்கருக்கு

செல்வி கூட தான் படித்த பள்ளி இது, விளையாடிய இடம் இது, தோழியின் வீடு இது என மகளிடம் சிறு பிள்ளை போல் குதூகலமாய் கூறி கொண்டே வந்தாள். ஆம், அவளும் அதே ஊரை சேர்ந்தவள் தான். சங்கரின் சொந்த அத்தை மகள் தான்

ப்ரீத்திக்கு எல்லாமே புதியதாய் தோன்றியது, உற்சாகமாய் கேள்வி கேட்டு கொண்டே வந்தாள். மூன்று ஆண்டுக்கு முன் வந்தபோது பார்த்த போதும், சிறு பிள்ளை என்பதால் அவளுக்கு நினைவில் பதியவில்லை

வீட்டின் முன் டாக்ஸி நின்றதும் வயதை மறந்து ஓடி வந்த அன்னையை கண்டதும் தன்னையும் அறியாமல் கண் பனித்தது சங்கருக்கு

"ராசா... சங்கரு... வந்துட்டியாப்பா? வா மருமகளே... ஆத்தி என்ன பெத்த ஆத்தி" என பேத்தியை முத்தத்தால் குளிப்பாட்டினாள் சரஸ்வதி, சங்கரின் அன்னை

சற்று மிரண்டு விலகிய மகளிடம் "ஏய் ப்ரீத்தி... அப்பத்தா டா...உன் அப்பத்தா" என்றான் சங்கர்

"அம்மா எப்படிமா இருக்கீக... மேலுக்கெல்லாம் சொகந்தான" தாயை கண்டதும் தாய் மண்ணின் பாஷை தானாய் வந்து ஒட்டி கொண்டது சங்கருக்கு

"எனக்கென்ன ராசா... சொகமா இருக்கேன்... நீ தான் முன்னைக்கு இப்ப இளச்சாப்ல இருக்க" என மகனின் தலை கோதினாள் பெற்றவள்

அந்த உயிர்ப்புள்ள காட்சி செல்வியின் கண்களை நிறைத்தது. தோளுக்கு மேல் வளர்ந்தாலும் என்ன, அன்னைக்கு என்றும் பிள்ளை தானே என தோன்றியது அந்த கணம்

அதற்குள் அவர்கள் வந்த சேதி அறிந்து சூழ்ந்து கொண்ட சங்கரின் தந்தையும், செல்வி வீட்டு ஜனமும், அக்கம் பக்க உறவுகளும் என அந்த இடமே உணர்ச்சிமயமாய் ஆனது

பின்பு உணவும் ஓய்வும் ஆனதும் வயலை காண மனைவி மகள் சகிதம், தந்தையையும் அழைத்து கொண்டு சென்றான் சங்கர்

"நம்ம ஊரு மாறவே இல்லீங்கப்பா..." என மகன் கூற

"ஆமாங்கண்ணு... மாத்தமில்லாத வர மாசில்ல...என்ன நான் சொல்றது" என தந்தை சிரித்தார்

"உண்ம தானுங்கப்பா"என ஆமோதித்தான் சங்கர்

வயலின் நடுவில் சென்று நின்றதும் பிரபஞ்சமே சொந்தமானது போல் உணர்ந்தான் சங்கர். ஒரு நாள் கூட இந்த உணர்வை அவன் வாழும் நகரத்தில் அனுபவத்ததில்லை என்பது உறைத்தது

"என்ன ராசா ரோசன... எந்த கோட்டைய புடிக்க" என தந்தை கேலியாய் கேட்க

"நெல் அறுப்பு எப்பங்கப்பா" என அதை பார்க்கும் ஆவல் கண்ணில் மின்ன கேட்டான் சங்கர்

"நம்முளுது சேத்து வயல் நேரடி வெதப்பு தான கண்ணு, ஐ.ஆர்.இருவது ரகம், இனி தான்... நோம்பி கழிஞ்சு அறுப்பு"

இது என்ன அது என்ன என கேள்வி கேட்ட மகளுக்கும் பதில் கூறி கொண்டே வந்தான் சங்கர்

செல்விக்கு, தான் இப்போது காணும் சங்கரும் பரபரப்பாய் சுழலும் கலிபோர்னியா சங்கரும் வேறு வேறு ஆளோ என தோன்ற ஆச்சிர்யமாய் கணவனை ரசித்தபடி வந்தாள். அவனை இத்தனை சந்தோசமாய் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதென தோன்றியது அவளுக்கு

ஊருக்குள் ஒரு சுற்று வரும் ஆவலில் தந்தையிடம் கூறி விட்டு மனைவி மகளை அழைத்து கொண்டு எட்டி நடை போட்டான் சங்கர்

கண்களை இடுக்கி பார்த்த ஒரு முதியவள் "ஆறது... நம்ம சரஸ்வதி மகன் சங்கரபாண்டியா... ராசா வந்துட்டியா? உங்காத்தா நீ வாரேன்னு ஊர் பூரா தண்டோரா அடிக்காத கொறதேன்...உன்ர பொண்டாட்டியா... அன்னிக்கி பாத்த மேனிக்கி அப்படியே இருக்கற போ... உன்ர மகளா இது... ஏன் இப்படி எலும்பும் தோலுமா இருக்குது புள்ள" என பொக்கை வாய் விரிய வெற்றிலை காவி படித்த ஈறுகள் ஜொலிக்க சிரித்தாள்

தன் முழுப்பெயர் சங்கரபாண்டி என்பதையே மறந்து போயிருந்த சங்கர் ஒரு கணம் பேச இயலாமல் நின்றான்

"ஆமாத்தா... சரஸ்வதி மகன் சங்கரபாண்டி தான்... சொகமா இருக்கீகளா?" என நேசமாய் முதியவளின் அருகில் திண்ணையில் அமர்ந்தான்

"இருக்கறன் ராசா... காடு வா வா ங்குது... வீடு போ போ ங்குது" என கூறியவளை இடை மறித்தது ஒரு குரல்

"சங்கரபாண்டி... நீ பொறந்த காலத்துல இருந்தே ஆத்தா இதத்தேன் சொல்லிக்கிட்டு கெடக்கு... காடும் வாங்கராப்ல காணோம்... வீடும் போங்கராப்ல இல்ல" என முதியவளின் மருமகள் சுந்தரி சிரிக்க முதியவள் கோபமாய் முகம் திருப்பினாள்

"ஹா ஹா... சொகமாங் அத்த... எங்க மச்சான்க ஆராயும் காணல" என வீட்டின் உள்நோக்கி பார்த்தான் சங்கர்

"நம்முளுது கரும்பு காடு தான ராசா... இப்பத்தான கிராக்கி கரும்புக்கு... சொசைட்டிக்கு போய் இருக்காக அல்லாரும்... வர்ற நேரந்தான்... இரு கண்ணு காப்பி தண்ணி எடுத்துட்டு வாறன்... உள்ள வா செல்வி... வா குட்டி பொண்ணே, அப்படியே அப்பன உரிச்சு வெச்சுருக்கா உன்ர மக...வா கண்ணு" என சுந்தரி உரிமையாய் அழைக்க

"இல்லீங் பெரிம்மா... பின்ன வாறம்... சும்மா அப்படியே ஊர ஒரு சுத்து பாக்கலாமுன்னு காலாற வந்தோம்" என செல்வி கூற

"அதுவுன்செரிதேன் சாவுகாசமா ஒருவேள சோருங்கராப்ல வாங்க கண்ணு" என கிராமத்து பாசம் மிளிர கூறினார் சுந்தரி

அதற்குள் ப்ரீத்தி தன் அன்னையின் காதில் ரகசியமாய் ஏதோ கேட்க "என்ன கேக்குது புள்ள?" என முதியவள் விசாரிக்க

"உங்க காதுல ஏன் இவ்ளோ பெரிய ஓட்டைனு கேக்கறா ஆத்தா" என சிரித்தாள் செல்வி

"அதுவா... இங்க வா சொல்லுறன்" என ப்ரீத்தியை அருகில் இருத்தி கொண்டவள் "அது... என்ற ராசா... அதான் என்ற புருஷன், என்ன கண்ணாலம் கட்டினப்ப பத்து பவுணுல தண்டட்டி போட்டாக... ஊரே மூக்குல வெரல வெச்சு பாத்தது... அந்த தண்டட்டி போட்டுதேன் காது இப்படி ஆகி போச்சு... அது சரி... பட்டணத்து சிங்காரி உனக்கென்ன தெரியும் தண்டட்டியும் அட்டிகையும்" என மீண்டும் பொக்கை வாய் சிரித்தது

அவள் கூரியதெதுவும் புரியாத போதும், ஏதோ மியூசியத்தில் அதிசியத்தை பார்ப்பதை போல் அந்த முதியவளை ரசித்தாள் ப்ரீத்தி. தனக்கும் முதியவளின் சிரிப்பு தொற்றிக்கொள்ள வாய் பொத்தி சிரித்தாள் ப்ரீத்தி

இளமையும் முதுமையும் சங்கமித்த அந்த காட்சியை படம் பிடிக்க இயலவில்லையே என வருந்தினான் சங்கர். இன்னும் கேமரா எதையும் பெட்டியைவிட்டே எடுக்கவில்லையே

அவர்களிடம் விடைபெற்று ஊர் மத்தியில் இருந்த கோவில் நோக்கி சென்றனர் மூவரும்

அன்று காப்பு கட்டு நாளுக்கு மும்முரமாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தன கோவிலில். சங்கரை பார்த்ததும் எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்

"அடடே... சங்கரு... நீ வாரன்னு ஆத்தா சொல்லிச்சு... எப்படி மச்சான் இருக்க? வா தங்கச்சி... புள்ள அப்படியே சங்கரு தான்" என்ற சங்கரின் சிறு வயது தோழன் முத்து, ப்ரீத்தியை ஆசையாய் தூக்கி கொண்டான்

"நல்லா இருக்கேண்டா முத்து... நீ எப்படி? தங்கச்சி புள்ளைக எல்லாம்?"

"அல்லாரும் சொகந்தான்... அவ ஆத்தா ஊட்டுல இருக்கா.. மூணாவது பொம்பள புள்ள... ரெண்டு மாசந்தான் ஆச்சு.. ஆத்தா சொல்லுச்சா?" என ஆவலாய் கேட்டான் முத்து

"அப்படியா? ரெண்டும் ஆம்பள புள்ளயா போச்சுன்னு நீ பொலம்பின நான் போன வாட்டி வந்தப்ப... ரெம்ப சந்தோஷம் முத்து... இன்னும் அம்மாகிட்ட உக்காந்து பேசவே இல்ல முத்து" என்றான் சங்கர்

"சரிப்பா... நோம்பி கழிஞ்சு நாளமத்தன நம்ம ஊட்டுக்கு ஒரு வா கரி சோறு உங்கராப்ல வா... தங்கச்சி, இவன் மறந்தாலும் நீ கூட்டிட்டு வாற... சரி தான" என உரிமையாய் செல்வியிடம் கூறினான் முத்து

"கண்டிப்பா வாரமுண்ணா" என்றாள் செல்வி அந்த அன்பில் நெகிழ்ந்தவளாய்

இப்படியாய் சிறு வயது தோழர்களையும், தூக்கி வளர்த்த உறவுகளையும் திகட்டாமல் பார்த்தும் பேசியும் அந்த நாள் கழிந்தது

                                        **************************************

சங்கரின் வீட்டில் அவன் வசதிக்கென கட்டப்பட்டிருந்த காரை மச்சு அறையில் (மாடி ரூம்) செல்வியுடன் பௌர்ணமி நெருங்கும் நிலவை ரசித்து கொண்டிருந்தான் சங்கர்

மனம் நிறைவாய் இருந்தது இருவருக்கும். சுற்றிய அலுப்பில் ப்ரீத்தி உறங்கி இருக்க, கணவனும் மனைவியும் கதை பேசி கொண்டிருந்தனர்

"என்ன தான் சொல்லுங்க... நம்மூரு நம்மூரு தான் இல்லியா?" என செல்வி கேட்க

"நிச்சியமா... அம்மா மடில படுத்து தூங்கற சுகம் தான் செல்வி இது" என மனைவியின் கன்னத்தில் செல்லமாய்  தட்டினான்

"ஆமாம்பா... நம்ம ப்ரீத்தி என்ன சொன்னா தெரியுமா கொஞ்சம் முன்னாடி... நாம இங்கயே இருந்துக்கலாம் மம்மி... இங்க வந்ததுல இருந்து டாடி என் கூடவே இருக்காரு... திட்டவே இல்ல... நெறய பேரு இருக்காங்க... அப்பத்தா எனக்கு கதை எல்லாம் சொன்னாங்க... அப்பிச்சி கரும்பு உரிச்சு குடுத்தாங்க... ஜாலியா இருக்கு மம்மினு சொல்றா. அவ சொல்றது நடந்தா சொகந்தான்" என பெருமூச்சு விட்டாள் செல்வி

"ஏய்... இது ப்ரீத்தி ஆசையா இல்ல என் பொண்டாட்டி ஆசையா... உண்மைய சொல்லு..." என மனைவியை சீண்டினான் சங்கர்

"எனக்கும் ஆச தான்... நெனச்சா ஆத்தா ஊட்டுக்கு போலாம்... அக்கா தங்கச்சிய பாக்கலாம்... நல்லது கெட்டதுல கலந்துக்கலாம்... ஊரும் உறவுமா வாழுற வாழ்க்கை சுகந்தானேப்பா....ஏன் உங்களுக்கு இல்லையா ஆச? வந்ததுல இருக்கு பாத்துட்டு தானே இருக்கேன்... ஐயா மொகத்துல நூறு வாட்ஸ் பல்பில்ல எரியுது" என மனைவி சீண்டுவது போல் கூற

"ஏய்... நீ இப்படி நம்ம பேச்சு வழக்குல பேசிக் கேட்டு எம்புட்டு நாளச்சு செல்வி... கல்யாணத்துக்கு முன்ன பேசின என் மொற பொண்ணு செல்வி முன்னாடி நிக்கராப்ல இருக்குடி" என மனைவியை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்

திருமணத்திற்கு முந்திய நாட்களை பற்றி பேசியதும் செல்வி வெட்கத்தில் முகம் சிவக்க "போங்க மாமா" என கணவனின் தோளில் முகம் புதைத்தாள்

"ஏய்... நீ என்ன மாமான்னு கூப்ட்டு எத்தன நாளாச்சுடி" என அவளை மேலும் சிவக்க வைத்தான்

"என்ன வம்பு பண்ணினது போதும்... நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல" என பேச்சை மாற்றினாள்

"என்ன?" என வேண்டுமென்றே அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில் அவன் கேட்க

"இங்கயே இருந்துரலாமா?" என ஆசையாய் கேட்ட மனைவியை பாவமாய் பார்த்தான்

வளர்ந்து செழித்த நாற்றை பிடுங்கி நட்டது போல் அவள் கொண்டாடும் ஊரில் இருந்து பிரித்து சென்று விட்டோமே என முதல் முறையாய் வருந்தினான்

"என்ன மாமா...? பேச்சே வர்ல"

"நீ மாமான்னு கூப்படற அழகுல மயங்கி நிக்கறேண்டி" என்றான்

"ச்சு... பதில் சொல்லுங்க" என சிணுங்கினாள்

"என்ன சொல்ல? நடக்கறதா பேசு செல்வி"

"ஏன் நடக்காது?"

"ஏய்... விளையாடறயா? எனக்கு நாத்து நடறதோ... களை எடுக்கறதோ என்ன தெரியும் சொல்லு... இங்க இருந்து என்னடி செய்யறது?"

"ஏன் மாமா? இங்க இருக்கறவக யாரும் பொழக்கிலியா? உங்க பிரெண்ட் முத்து அண்ணன் படிச்சுட்டு ரைஸ் மில்லு வெக்கலையா இங்கயே... இன்னிக்கி பாத்தோமே சுந்தரி பெரியம்மா... அவங்க மகன் கூட அடுத்த வெதப்புக்கு அப்பறம் சுகர் மில்லு ஆரம்பிக்க போறதா அத்த சொல்லிட்டு இருந்தாக"

"ஓ... மாமியாரும் மருமகளும் சேந்து தான் அட்டாக் பண்றீங்களா?" என சிரித்தான்

"இல்லப்பா... பேச்சு வாக்குல அத்த சொன்னதுதேன்... இங்கயே நாமளும் எதுனா தொழில் பண்ணிக்கலாமேப்பா" என கெஞ்சலாய் பார்த்தாள்

"செல்வி செல்லம்... அமெரிக்க வாழ்க்கைக்கு பழகின நமக்கு இது கொஞ்ச நாளுல சலிச்சுடும்மா... அந்த வசதி வாய்ப்ப மனசு எதிர்பார்க்கும்... அது மட்டுமில்ல ப்ரீத்தி படிப்பப்பத்தி யோசிச்சு பேசு"

"இங்க பாருங்க மாமா... மனமிருந்தா மார்கமுண்டு... என்ன பெரிய அமெரிக்கா பேரிக்கானு? இந்த மண்ணுல தான பொறந்து வளந்தோம்... அந்த வசதி வாய்ப்பெல்லாம் வெறும் வெளிப்பூச்சு தா... இன்னும் சரியா சொல்லணும்னா அனல் மேல இருக்கற பனித்துளி போல, அதுக்கு என்ன ஆயுசு சொல்லுங்க... ஒரு நொடில அனல்ல பனித்துளி கரைஞ்சு போறாப்ல அற்ப ஆயுசு சுகம் தான் அதெல்லாம்... இதான்ப்பா நம்ம இடம்.... ப்ரீத்தி ஸ்கூல் பத்தி என்ன... இப்ப பக்கத்து டவுன்லையே நல்ல நல்ல ஸ்கூல் எல்லாம் இருக்கு தெரியுமா?" என்ற மனைவியின் கூற்றில் இருந்த உண்மை சாட்டியடியாய் மனதில் விழ சற்று நேரம் அமைதியாய் சிந்தித்தான்

அவனுக்கும் கூட ஊரில் வந்து இறங்கியதில் இருந்து இதே சிந்தனையாய் தான் இருந்தது. அதிலும் வயோதிகம் நெருங்கும் பெற்றோரின் முகம் வேறு கண் முன் வந்து பயம் காட்டியது

இன்னும் எத்தன தான் சம்பாதிச்சாலும் தாய் மண்ணின் சுகத்திற்கு ஈடாகுமா? இங்கு காலூன்ற வேண்டிய மட்டும் தான் சம்பாதிதாயிற்றே. இன்னும் ஏன் அங்கு இருக்க வேண்டும்? என பல கேள்விகள் சங்கரின் மனதில் ஓடி கொண்டே இருந்தன

"ம்...சொல்லுங்க" என செல்வி மீண்டும் கேட்க

"ம்... நல்லா ஸ்கூல் விசயம் எல்லாம் கூட விசாரிச்சுட்டு தான் பேசறீங்களா அம்மணி?" என கேலி செய்தான்

"இன்னும் நீங்க பதில் சொல்லல மாமா" என்றாள் அதிலேயே குறியாய்

சற்று நேரம் எதுவும் பேசாமல் பல விசயங்களையும் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் "இப்படி மாமான்னு ஆசையா என் பொண்டாட்டி கேட்டா மாட்டேன்னு எப்படிடி சொல்ல" என சங்கர் குறும்பு சிரிப்புடன் கூற

"நெசமாவா?" என ஆனந்தத்தில் கணவனை கட்டிக்கொண்டாள் செல்வி

"செல்வி... உடனே இங்க வந்துற முடியாது. போய் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு ப்ரீத்தி ஸ்கூல் இயர் முடிஞ்சப்புறம் வருவோம் சரியா?"

"போதும் மாமா... நீங்க வர ஒத்துகிட்டதே போதும்" என அவள் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது
 
""செல்வி... ஆனா பின்னாடி நீ இந்த முடிவ நெனச்சு எப்பவும் வருந்தமாட்டியே?" என சங்கர் கேள்வியாய் நோக்க

"எனக்கென்ன பைத்தியமா?" என  கோபமாய் பார்த்தாள். கோபத்திலும்  ஜொலித்த மனைவியின் அழகிய முகத்தை ரசித்தவன்,

"இல்லையா பின்ன... என் மேல பைத்தியமா கட்டுனா மாமனத்தான் கட்டுவேன்னு நிக்கல" என பழைய கதையை கூறி கேலி செய்ய

"சீ.... போங்க மாமா... உங்களுக்கு எப்பவும் கேலி தான்..." என மனம் நிறைந்த சந்தோசத்தில் கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் செல்வி

காலையில் தன் பெற்றவர்களிடம் இந்த முடிவை கூறி அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்வை காணும் ஆவல் அப்போதே சங்கரின் நெஞ்சில் ஊற்றாய் பொங்கியத.

தங்கமணி 

பிரிவு

"என்ன இது?"

"எது?"

"இதான்"

"தண்ணி"

"அதான் ஏன் கீழ சிந்தியிருக்கு?"

"கை கழுவினேனா அதான்...."

"கை கழுவினா டவல் யூஸ் பண்ணுங்க இப்படி கைய ஓதராதீங்கனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்"

"எத்தன வாட்டி சொல்லி இருக்க? சாரிம்மா கவுன்ட் பண்ணல"

"என்னை பாத்தா எப்படி இருக்கு உங்களுக்கு?"

"வேண்டாம்... சொன்னா திட்டுவ" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"என்னங்க... இன்னிக்கி கோயிலுக்கு போலாமா?"

"ஏன்? திடீர்னு?"

"ஆண்டவா... எதுக்கு எடுத்தாலும் ஏன் ஏன் ஏன்... பதில் சொல்லி எனக்கு சலிச்சு போச்சு... ஒரு நாளாச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க... திருப்பி கேள்வி கேக்காதீங்க ப்ளீஸ்"

"ஏன் எதற்கு எப்படினு கேள்வி கேட்டா தான் பிரைன் நல்லா ஷார்ப் ஆகும்னு யாரோ ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்கார் தெரியுமா?"

"அந்த கவலை பிரைன் இருக்கறவங்களுக்கு தானே வரணும்"

"கரெக்ட்... அது இருந்துருந்தா உன்கிட்ட சிக்கி இருப்பனா" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"பதினஞ்சு நாள்... தனியா சமாளிச்சுக்குவியா?"

"ம்"

"நேரத்தோட வீட்டுக்கு வா? இப்ப சாயங்காலமானா மழை வேற வந்துருது"

"ம்"

"தூங்கறப்ப பக்கத்துல போன் வெச்சுக்கோ"

"ம்"

"ஒழுங்கா சாப்பிடு... கேக்கறது ஆள் இல்லைனு ஏமாத்தாத"

"ம்"

"ஏய்... ஏன் உம்முன்னு இருக்க?"

"ஒண்ணுமில்ல"

அவள் முகத்தை உயர்த்தி பார்த்தவன், "இதுக்கு தான் சொன்னேன்... உனக்கும் லீவ் கிடைக்கறப்ப ஊருக்கு போலாம்னு"

"அந்த கடன்காரன் தான் லீவ் குடுக்கமாட்டேங்கரானே" என்றாள் எரிச்சலாய்

"கடன்காரன் கடன் தான் குடுப்பான், லீவ் கூடவா குடுப்பான்" என கேலியாய் அவள் மனதை திசை திருப்ப முயன்றான்

"ஜோக்கா, ஈ... சிரிச்சுட்டேன் போதுமா?" என்றாள் சற்றே கோபமாய்

"சிரிச்சியா... மொதலே சொல்லிடு... பயமா இருக்கில்ல" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி தாங்க முடியாதது போல் தோன்ற, வேகமாய் சென்று ரேடியோவை உயிர்பித்தாள்

உடை மாற்றி சமையல் அறைக்குள் வர, ஒரு தூசு கூட இல்லாத தரை அவளுக்கு ஏனோ உறுத்தியது

அந்த நிசப்த நொடியில் கேட்ட டெலிபோன் மணி சத்தத்தில் தூக்கி வாரி போட நிமிர்ந்தாள்

"ஹலோ"

"நான் தான்... என்ன பண்ணிட்டு இருக்க?"

"......." அவன் குரல் கேட்டதும் கண்ணில் நீர் துளிர்க்க அமைதியாய் நின்றாள்

"ஹலோ... ஹலோ"

"ம்"

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்ல" என்றவளின் குரல் காட்டி கொடுத்தது

"தனியா போர் அடிக்குதா?"

"ம்"

"ஒரு வாரம் ஓடி போச்சு... இன்னும் ஒரே வாரம்... வந்தர்றேன், சரியா?"

"ம்"

சற்று நேரம் பேசியபின் "சரிடா... நான் வெக்கறேன்"

"ஏன்?"

"எப்பவும் நான் தான் ஏன் ஏன்னு கேள்வி கேப்பேன்... இன்னைக்கி நீ கேக்கற" என அவன் சிரிக்க, அவள் மௌனமானாள்

போனை வைத்ததும் அவள் தனக்கு தானே செய்து கொண்ட முதல் சங்கல்பம் "இனிமே அவர்கூட சண்டையே போடக்கூடாது" என்பது தான்

அன்றிரவு உணவருந்தி கை கழுவிய பின், பேப்பர் டவல் நோக்கி நீண்ட கையை பின்னுக்கு இழுத்தாள்

வேண்டுமென்றே தரையில் நீர் படும் படி கையை உதறியவள், தனக்குள் மெல்ல சிரித்து கொண்டாள்


***********************************

"என்னங்க இது? ஈர துண்டை அப்படியே மத்த துணிக கூட போட்டு வெச்சுருக்கீங்க?"

"...... " மௌனமாய் அவளை பார்த்தான்

"என்ன பார்வ?"

"...... " பதில் கூறாமல் முறுவலித்தான்

"ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு... இன்னும் சூட்கேஸ் எடுத்து உள்ள வெச்ச பாடா காணோம்"

"...... " சிரிப்புடன் அருகில் வந்தான்

"என்ன சிரிப்பு இப்போ? நான் என்ன ஜோக்கா அடிச்சேன்?"

"Now I know...Why I missed you so much?" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள். பின் அவளும் சிரித்தாள.

தங்கமணி