Friday, 17 May 2013

கலைஞரின் காதல்


‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன்களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ புத்தகம் வீட்டு நூலகத்திலிருந்து எட்டிப்பார்த்துச் சிரிக்கிறது. அதுவும் ஓர் அழகின் சிரிப்புதானே!

வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிற நெல்சன் மண்டேலா, ஒரு நடுத்தர வயது மங்கையைக் காதலித்துக் கட்டித்தழுவும் படங்கள் ஏடுகளை அலங்கரிக்கும் இந்தக் காலத்தில், நான் காதலைப் பற்றி ஒரு கட்டுரைதானே எழுதுகிறேன். எனவே, என் கொள்ளுப் பேரர்களும் பேத்திகளும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்.

‘‘காதல் வர்ணனைகளைக் காட்டாற்று வெள்ளமெனப் பொழிந்து தள்ளிய இந்தப் பேனா, இப்போது மிகச் சாதாரண நடையில் சில செய்திகளைச் சொல்லப் போகிறது.’’

இப்படிச் சுருக்கமாக என் காதல் (தோல்வியுற்ற) கதை ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் முதல் பாகம் 74-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.அந்தக் காதல் நடந்த நாட்களையும் அது தோல்வியுற்ற காரணத்தையும் நினைத்துச் சுவைக்கும் வயது இப்போது எனக்கு! அதனால் அந்தக் காதல் படிக்கட்டுகளில் என் நினைவுக் கால்களால் சற்று நடந்து திரும்புகிறேன். ஆம்; அன்று எழுதாததை அல்லது எழுத விட்டுப் போனதை, இன்று எழுதுகிறேன். எழுதக்கூச்சப் படும் இளமைப்பருவம் பறந்துவிட்டதால் இந்த முதுமைக்கு ஏற்பட்ட துணிச்சல். வெட்கம் மறந்து விட்ட நிலையில் எழுதிடத் தூண்டுகிறது என்னை; அதனால் எழுதுகிறேன்.

கொடி ஊர்வலங்கள், கூட்டங்களில் முழக்கங்கள், கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று திரும்பிக் கொண்டி ருந்த பள்ளிப்பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தை பறி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம்... ஏனென்றால் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள். குறிப்பாக, சாந்தா என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! சாந்தா என்பதில் ஓர் எழுத்து மாறினால் அவள் உண்மைப் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பரிசுப் போட்டி வைக்க விரும்பவில்லை. அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வகையில் தூரத்து உறவும்கூட! நல்ல உறவில்தானே பொல்லாத பகையும் முளைத்துத் தொலைக்கும். எங்கள் இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாத அளவுக்கு செமப்பகை! அந்தப் பகை நடுவே, எங்களுக்குள் பனிப்புகை நடுவே புகுந்த கதிர்போல காதல் தோன்றிவிட்டது. அவள் பள்ளிக்குப் புறப்படும் நேரம் பார்த்து நானும் புறப்படுவேன். ஆரூரின் அகன்ற சாலைகளில் அவள் ஒரு பக்கம் போவாள். நான் இன்னொரு பக்கமாகத் தொடர்ந்து நடப்பேன். அவள் திரும்பிப் பார்க்கிறாளா என்று நான் அவள் பின்னால் நடப்பதும் உண்டு. நான் திரும்பிப் பார்ப்பதை அவள் கடைக்கண்ணால் கண்டிட அவள் என் பின்னால் நடப்பதும் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்ததும் அவள், தட்டச்சு கற்றுக் கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப் ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக் கொண்டிருந்தேன். அவள் தட்டச்சு பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டு விடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல்-ஓ-வி-இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதிய வைத்துக் கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.

‘கண்ணொடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக்காதலாக மாறியது. திருவாரூரில் நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள். காலை எழுந்தவுடன் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பேன். சரியாகப் படிக்கச் சொல்லி அவர்களைக் கண்டிப்பதும் உண்டு. அந்தச் சிறுவனை மட்டும் காதைத் திருகித் தண்டிப்பதும் உண்டு. நான் தங்கிப் படித்த அந்த வீட்டுக்கு அருகில் அதே தெருவில்தான் என் சாந்தாவின் வீடும் இருந்தது. அவள் வீட்டுக் கொல்லைப்புறமும் என் பள்ளி நண்பன் ஒருவன் வீட்டுத் தெருவாசல் பகுதிகளும் எங்கள் விழிக்கணைகள் பாயும் காதல் களங்களாக இருந்தன. சில நாட்களில் என்னிடம் பாடம் பயின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி எங்களுக்கிடையே ‘தூதி’ ஆகி விட்டாள். ஒரு நாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதிமுழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்துவிட்டு, தட்டுடன் திரும்பும்போது அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். அந்த ‘வீரனார்’ அறிய மறக்கமாட்டேன் என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். மனசாட்சி அறையக் கைவிடமாட்டேன் என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்து விட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக்கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ஆமாம் என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண்கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

‘‘அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்து கொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானா?’’

பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தன. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும் நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! ‘‘காதலா? கொள்கையா?’’ இதுதான் அந்தக் கடிதத்தின் கருப்பொருள்.

‘‘ஊருக்குத்தான் உபதேசம்.

உனக்கும் எனக்கும்

இல்லையடியென்று கூறுவது

எத்தனின் செயல் அல்லவா?’’

என்ற கருத்தமைந்த பதிலை கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவளே இணங்கி விட்டாள் - அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!

ஏன். அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார்’ கோயில் சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனசாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே யோயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டு விட்டது.

அதன் பின்னர் சில நாட்களில் ஒரு திகில் செய்தி& என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள்! அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று & இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அந்த நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்திற்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவனையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளது பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்திற்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தையே!

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் - எப்போதோ பார்த்த ஞாபகம் - எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள். ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

(நன்றி : கலைஞரின் காதல் படிக்கட்டுகள், ஜூனியர் விகடன், 15-01-1997 இதழ்)

---
நன்றி 

Thursday, 16 May 2013

பாம்பே டாக்கீஸ் : வயசு நூறு!!!

 "உள்ளடக்கம், தொழில்நுட்பத் தரத்தில் உலகின் எந்தவொரு சினிமாத்துறைக்கும், எங்களால் சவால் விட முடியுமென்று ‘பாம்பே டாக்கீஸ்’ மூலமாக இந்திய சினிமா அறைகூவல் விட்டிருக்கிறது."
மே 3, 1913. பாம்பேவின் காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையிடப்படுகிறது. தாதாசாகேப் பால்கே தயாரித்து இயக்கியிருந்தார். மராத்தி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், மவுனப்படத்துக்கு மொழி ஏது. பொய்யே அறியாத அரிச்சந்திரனின் கதை இந்தியர்கள் யாவருக்கும் மனப்பாடம் என்பதால் திரையில் நகர்ந்த காட்சிகளோடு ஒன்றிப் போனார்கள். படம் முடிந்ததும் அழுகை, ஆனந்தம் என்று வரையறையில்லாத உணர்வுகளோடு திரும்பினார்கள். ஒரே ஒரு பிரிண்டு போடப்பட்டு திரையிடப்பட்ட ‘ஹரிச்சந்திரா’ வெறும் சினிமா அல்ல. இந்திய சினிமா வரலாற்றின் தொடக்கம்.
1895ல் லூமியர் சகோதரர்களால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சினிமா அடுத்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிட்டது. தொடர்ந்து ஹீராலால் சென் இயக்கிய குறும்படமான ‘பாரசீக மலர்’ 1898ல் வெளியானது. தாதாசாகேப் டார்னேவின் ‘ஸ்ரீ புண்டாலிக்’ மே 18, 1912லேயே அதே பாம்பே காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் திரையிடப்பட்டது. ஆனால் இந்தியாவின் முதல் சினிமா என்கிற கவுரவம் அதற்கு மறுக்கப்பட்டது. ஏனெனில் பிரபலமான ஒரு மராத்திய நாடகத்தை கேமிராவில் பதிவு செய்து, அப்படியே திரையிட்டிருந்தார்கள். எனவேதான் சினிமாவுக்கென்றே திட்டமிடப்பட்டு, படமாக்கப்பட்ட ‘ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் சினிமா என்கிற பெருமையை பெறுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெண்கள் யாரும் அப்போது சினிமாவில் நடிக்கத் தயாராக இல்லை. எனவே ஹரிச்சந்திராவின் மனைவியாக கூட ஒரு ஆணே, பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டியிருந்தது.
raja
ஆரம்பத்தில் சினிமாவை ஒரு பொருட்டாக மேல்தட்டு வர்க்கம் நினைக்கவில்லை. நாடகம்தான் கலை. சினிமா வெறும் பொழுதுபோக்கு என்று நிராகரித்தார்கள். பணம் செலவழித்து நாடகம் பார்க்க முடியாத, அந்த கலைவடிவை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கம்தான் சினிமாவின் எளிமையிலும், கவர்ச்சியிலும் மயங்கிப்போய் அதற்கு கை கொடுத்தது.
ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சி சினிமாவுக்கு ஆதரவாகவே அமைந்தது. சினிமா பேச ஆரம்பித்த பிறகு நாடகங்களுக்கு மவுசு குறைந்தது. சினிமா வெறும் கலையாக மட்டும் வளராமல் மக்களிடையே பிரச்சாரம் செய்யக்கூடிய ஊடகமாகவும் வளர்ந்துவிட்டதால், ஆரம்பத்தில் அதை புறக்கணித்தவர்களும் கட்சிமாறி வந்து சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக 1940ல் தொடங்கி 1960 வரை இந்தியாவில் கோலோச்சிய நெம்பர் ஒன் துறையாக சினிமா பரிணமித்தது. இன்று இந்திய சினிமாவில் ஹிந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்புரி, அஸ்ஸாமி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, ஒரியா, சிந்தி, பஞ்சாபி, துளு, படுகா, நேபாளி என்று எண்ணற்ற மொழிகளில் வருடத்துக்கு ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன. உலகளவில் சினிமாவை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டாடும் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது.
alamara
இப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு கடந்துப்போன மே 3 அன்றுதான் 
நூற்றாண்டு நிறைவு. சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடுவது. கொண்டாட்டம் என்றாலே, நமக்கு திருவிழாதான். சினிமாக்காரனுக்கு சினிமா எடுப்பதுதானே திருவிழா. எனவே இந்திய சினிமா நூற்றாண்டை கவுரவிக்கும் முகமாக ‘பாம்பே டாக்கீஸ்’ திரைப்படம் வெளியானது.

நம்மூர் சினிமா மீது அயல்நாட்டு விமர்சகர்கள் சில கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். டவுன்லோடு சிந்தனை கொண்ட நம்மூர் விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் அவற்றின் மீது எவ்வித ஆராய்ச்சியோ, அலசலோ செய்யாமல் அதே விமர்சனங்களை தாங்கள் கண்டுபிடித்தது மாதிரி அப்படியே வழிமொழிகிறார்கள்.
அவற்றில் சில முக்கியமான விமர்சனங்கள் :
காலாவதி ஆகிப்போன ஆதிகால புராணங்களையே, இந்தியர்கள் இன்னமும் வேறு வேறு வடிவங்களில் சினிமா ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். புதிய சமகால கதைகளை உருவாக்கும் திறன் இந்திய படைப்பாளிகளுக்கு இல்லை.
இந்திய சினிமாவில் பெண்களுக்கு தரப்படும் இடம் மோசமானது. காட்டு மிராண்டித்தனமானது. மார்புகளை குலுக்கி, தொடைகளை ஆட்டி, தொப்புளைக் காட்டும் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே, இந்திய சினிமாக்களில் பெண்கள் இடம் பெறுகிறார்கள்.
இவர்களுக்கு சினிமாவின் வடிவமே தெரியாது. காட்சிகளால் சொல்ல வேண்டியவற்றை வசனங்களில் பக்கம் பக்கமாக ஒப்பிக்கிறார்கள். சினிமா என்பது காட்சி வடிவம் என்பதே, இந்திய சினிமா இயக்குனர்களுக்கு தெரியாது.
ஒரு ஹீரோ. ஒரு ஹீரோயின். ஒரு வில்லன். அம்மா. தங்கை. அப்பா. நாலு சண்டை. ஆறு பாட்டு. இவ்வளவுதான் இந்திய சினிமா. அரைத்த மாவையே நூறு ஆண்டுகளாக திருப்பித் திருப்பி அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களே நட்சத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கு கோயில் கட்டி தீபாரதனை காட்டுகிறார்கள். சினிமாவுக்காக கதை என்பது போய், நட்சத்திரங்களுக்காக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலை நீட்டித்துக்கொண்டே போகலாம். குறைந்தபட்சம் நூறு பாயிண்டுகளாகவது தேறும். நூறு ஆண்டு சினிமா அல்லவா.
bombaytalkies8
நூற்றாண்டை கொண்டாடுவதோடு இல்லாமல், இந்த விமர்சனங்களுக்கும் பதில் தரவேண்டுமென்ற வெறி பாம்பே டாக்கீஸாருக்கு இருக்கிறது. எனவேதான் எதுவெல்லாம் இந்திய சினிமா என்று பொதுப்புத்தியில் பதிந்துப் போயிருக்கிறதோ, அதுவெல்லாம் இல்லாமல் ‘பாம்பே டாக்கீஸ்’ எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவின் தற்காலப் போக்கினை தீர்மானிக்கக்குடிய நடிகர்களும், கலைஞர்களும் பங்களித்திருக்கிறார்கள்.

முக்கியமாக ‘பாம்பே டாக்கீஸ்’ வழக்கமான வடிவிலான ஒரே முழுநீளக்கதை அல்ல. நான்கு இயக்குனர்கள் தனித்தனியாக எடுத்துள்ள நான்கு சிறுகதைகள். கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், அனுராக் காஷ்யப் என்று இந்தியாவின் டாப் இயக்குனர்கள் தலா அரைமணி நேர குறும்படமாக எடுத்த நாலு படங்கள்தான் ஒட்டுமொத்தமாக ‘பாம்பே டாக்கீஸ்’
bombaytalkies6
கரண் ஜோஹரின் படம் ஓரினச்சேர்க்கை உறவை பற்றி எந்த நெருடலும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறது. கோவலன் கண்ணகி கதைதான். மாதவியோடு குஜால் செய்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாளா, இல்லையா? இந்தப் படத்தில் கோவலன் இன்னொரு ஆணோடு, கொஞ்சம் ‘லவ்’ ஆகிவிடுகிறான். உடனடியாக அருவருப்பாக உணர்ந்தாலும், உலகப் போக்கை உணர்ந்த நாயகி, “இதெல்லாம் இந்தக் காலத்தில் சகஜம்தான்” என்று இயல்பாகிறாள். ஓரினச் சேர்க்கையாளர்களை சைக்கோக்கள் மாதிரியும், காமவெறி மிருகங்களாகவும் இதுவரை சித்தரித்த இந்திய சினிமா, இந்த அரைமணி நேர குறும்படத்தில் அவர்களும் இயல்பானவர்களே. சொல்லப்போனால் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் என்கிற பிம்பத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. இரண்டு ஆண்களுக்கு இடையே அமர்க்களமான, அழுத்தமான லிப்-டூ-லிப் முத்தக்காட்சியும் உண்டு.

திபாகர் பானர்ஜியின் படம் தோல்வியடைந்த ஒரு நடிகனின் ஒரு நாள் வாழ்வை சித்தரிக்கிறது. அவனது குழந்தைக்கு தினமும் ஒரு கதை சொல்ல வேண்டும். முந்தைய நாள் சொல்வதற்கு அவனிடம் கதை எதுவுமில்லை. அன்று அவனுக்கு ஒரு சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வசனமற்ற பாத்திரம். ஓரிரு நொடி ஃப்ரேமில் வந்துப்போகும் பாத்திரம். ஆனாலும் சினிமாவில் நடித்துவிட்டான். அன்று இரவு அவன் குழந்தையிடம் சொல்ல கதை கிடைத்துவிட்டது. தான் சினிமாவில் நடித்த கதையை திரைக்கதை வசனத்தோடு மிகைப்படுத்தி சிறப்பாக சொல்லி அசத்துகிறான். திரையில் பாத்திரங்கள் பேசும் வசனங்களில், ஒரு கதை நேரடியாக சொல்லப்படுகிறது. பின்னணிக் காட்சிகளில் நிறைய ஹைக்கூ கதைகள் மறைமுகமாக சொல்லப்படுகின்றன. பார்வையாளனே தனக்கேற்றாற் வகையில் அக்கதைகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது இப்படத்தின் சிறப்பம்சம்.
bombaytalkies4
ஸோயா அக்தரின் படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிறுவனின் ஆசையை காட்சிப்படுத்துகிறது. மகன் என்னவோ ஆகி, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து அப்பாவின் கனவும். குழந்தைக்கு என்று ஆசையோ, கனவோ இருக்கக்கூடுமென்பது கூட, அவர்களுக்குத் தெரியாது. இந்திய நடுத்தர வர்க்கத்தை மறைமுகமாக கேலி செய்வதோடு, சுடும் யதார்த்தத்தை, சூப் போட்டு கொடுக்கிறார்கள். பையனுக்கு நடனக்கலையில்தான் ஆசை. அப்பாவோ அவனை வலுக்கட்டாயமாக விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, உடல் வலிமை இருந்தால்தான் பைலட் ஆக முடியும் என்கிறார். தன்னுடைய கனவை ரகசியமாக பையன் எப்படி தற்காலிகமாக நனவாக்கிக் கொள்கிறான் என்பதோடு படம் முடிகிறது.

bombaytalkies3
அனுராக் காஷ்யப் இயக்கிய படம் தான், இந்திய சினிமா நூற்றாண்டுக்கு நிஜமான ட்ரிப்யூட். நம் சினிமாவின் ஸ்டார் வேல்யூ என்னவென்பதை மிகைப்படுத்தாமல், யதார்த்தமாக காட்சிப்படுத்துகிறார். வாரணாசியில் வசிக்கும் பெருசு ஒருவருக்கு ஓர் ஆசை. குலாப் ஜாமூன் மாதிரி ஒரு ஸ்வீட்டை ஜாடியில் அடைத்து வைத்திருக்கிறார். இதில் பாதியை அமிதாப் பச்சன் கடிக்க வேண்டும். மீதியை தான் சாப்பிட வேண்டும் என்கிற உயரிய 2020 இந்திய வல்லரசுக் கனவு. இப்பவோ, அப்பவோ என்றிருக்கும் அப்பாவின் இந்த ஆசையை நிறைவேற்றினால், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்வார் என்று மகனுக்கு நம்பிக்கை. குலாப் ஜாமூன் ஜாடியோடு, மும்பைக்கு ரயில் ஏறுகிறான். அமிதாப்பை பார்த்தானா. குலாப் ஜாமூனை கடித்தாரா என்பதை லேசான நகைச்சுவை மற்றும் அழுத்தமான உணர்வுகளாக காட்சிப்படுத்துகிறார் காஷ்யப்.

தனித்தனி இயக்குனர்கள், தனித்தனி நடிகர்கள், தனித்தனி தொழில்நுட்பக் கலைஞர்கள் தனித் தனியாக நான்கு படங்களை இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், தொழில்நுட்பத் தரத்தில், ஒரே மாதிரியாக, சர்வதேசத் தரத்தோடே படங்கள் அமைந்திருக்கிறது. நான்குக்கும் இசையமைப்பாளர் மட்டும் பொதுவானவர். அமித் திரிவேதி. மேலை நாட்டு இசையும், சாஸ்திரிய சங்கீதமாக சரிபாதியாக பங்குபோட்டு, தமிழ் திரையிசையில் கோலோச்சிய காலத்தில், நம்மூர் தெம்மாங்கையும், தாலாட்டையும், ஒப்பாரியையும் திரையிசை வடிவத்துக்கு கொண்டு வந்து, ஒப்பற்ற சாதனை செய்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட அதே மாதிரி சாதனையை அமித் திரிவேதி இந்தியில் செய்துக் கொண்டிருக்கிறார். வடஇந்திய நாட்டுப்புற இசைக்கலைக்கு திரையில் உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்.
bombaytalkies2
உள்ளடக்கம், தொழில்நுட்பத் தரத்தில் உலகின் எந்தவொரு சினிமாத்துறைக்கும், எங்களால் சவால் விட முடியுமென்று ‘பாம்பே டாக்கீஸ்’ மூலமாக இந்திய சினிமா அறைகூவல் விட்டிருக்கிறது.
ஆனால் நாங்கள் ஏன் அச்சுபிச்சுவென்று படமெடுக்கிறோம் என்கிற கேள்விக்கும் படத்துக்கு ‘எண்ட்’ கார்ட் போட்டுவிட்டு போனஸாக விடையளிக்கிறார்கள். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாட ஒரு ரசிகனுக்கு அழைப்பு வருகிறது. பாம்பே டாக்கீஸ் என்கிற அரங்குக்கு போகிறான். ஆயிரம் இருக்கைகள் இருக்கும் அரங்கில் அவன் மட்டும் படம் பார்க்கிறான். இந்திய சினிமாவின் மைல் கற்களாக அமைந்த படங்களின் காட்சிகள் ஒரே பாடலில் மாண்டேஜ் காட்சிகளாக ஒளிபரப்பாகிறது. மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் தொடங்கி, நண்டு சிண்டு நட்சத்திரங்கள் வரை அவன் ஒருவனுக்காகவே, ஒட்டுமொத்தமாக விண்ணிலிருந்து மண்ணிறங்கி நடனம் ஆடுகிறார்கள். இந்த பாடலுக்கு வட இந்திய அரங்குகளில் எழுந்து நின்று தலைக்கு மேல் கையை தூக்கி தட்டுகிறார்கள் ரசிகர்கள். விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. தங்கள் அபிமான நட்சத்திரம் தோன்றும்போது, ஒவ்வொரு ரசிகனும் கண்களில் நீர்க்கசிய ஓவென்று கத்துகிறான். “இதுதான் இந்திய சினிமா”வென்று கண்ணடிக்கிறார்கள் பாம்பே டாக்கீஸார்.
end 











 ---
 நன்றி:-

Wednesday, 8 May 2013

மாவீரன் பூலித்தேவன்



இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர்.

சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது.

தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம்.

ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி.

அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர்.

இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும்.

அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள்.

வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம்.

இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன்.

அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் .

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான்.

ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை.

எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.

புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன்.


--