பிறப்பு: பரிசல்காரன்
“ரெண்டு வாரமா நான் சொல்லீட்டிருக்கேன். ரேஷன் கார்ட்ல அட்ரஸ் மாத்தணும். பேங்க் பாஸ்புக்ல அட்ரஸ் மாத்தணும்னு. யாரைப் பார்க்கணும்.. என்ன பண்ணனும்னு யாருகிட்டயாவது கேட்டீங்களான்னா இதுவரைக்கும் ஒரு பதிலில்லை”
“அ..”
“அதுக்கெங்க நேரம்ன்னு ஒடனே ஆரம்பிச்சிடாதீங்க. இந்த மாதிரி வீட்டு வேலைன்னா மட்டும்தான் உங்களுக்கு நேரம் இருக்காது..”
“ஆ..”
‘ஆஃபீஸ்ல லீவில்ல.. பர்மிஷன் கிடைக்காது – அதே பல்லவிதானே? எங்க யாரைப் பார்க்கணும்னு சொன்னா நான் போய்ப் பார்க்கறேன்.. அதக்கூட விசாரிச்சுச் சொல்லலைன்னா நான் என்னதான் பண்றதாம்?
“இ..”
“இப்படிப் புலம்பீட்டே இருக்கறதே எனக்கு வேலையாப் போச்சு. ஒரு காரியமும் முடிஞ்ச பாட்டைக் காணோம்.. இத விடுங்க.. ஒரு நாளைக்காவது வந்து புள்ளைங்ககிட்ட ‘இன்னைக்கு என்ன படிச்ச.. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க’ன்னு கேட்டதுண்டா?”
“எ..”
“ஒடனே ‘எதுக்கு கேட்கணும்.. அதான் நீ நல்லா பார்த்துக்கறியேன்னு ஐஸ் வைக்க வேண்டியது. நானும் கேட்டுட்டு அப்போதைக்கு பேசமாப் போய்டணும்.. இதானே ஒங்க நினைப்பு.. இன்னைக்கு விடறதாயில்லைங்க.. நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சே ஆகணும்”
“ஒ..”
“காலைல எந்திரிக்க வேண்டியது.. பேப்பர் பார்க்க வேண்டியது.. ஆஃபீஸ் போக வேண்டியது. நைட் வந்து டிவி பார்க்க வேண்டியது.. படுத்துத் தூங்கவேண்டியது…”
”நா…”
“காலைலேருந்து நைட் வரைக்கும் நான் எவ்வளவு வேலை செய்ய வேண்டிருக்கு. ஒரு நாளைக்காவது கிச்சன் பக்கம் வந்து எதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்கத் தெரியுதா?”
“அ..”
“அப்படிக் கேட்டு நான் சொல்லீட்டாலும் ஹெல்ப் பண்ணின மாதிரிதான்.. அன்னைக்கு அப்படித்தான் ஃப்ரென்ச் ஃப்ரை செஞ்சு தர்றேன்னு கிச்சனை வந்து நாசம் பண்ணீட்டுப் போனீங்களே.. அப்படித்தான் நடக்கும்..”
“எ..”
“எப்பன்னு கேட்காதீங்க.. ஒரு சண்டே அன்னைக்குச் செஞ்சீங்களே.. அப்ப்ப்பா! மொளகாத்தூள் எல்லாத்தையும் கொட்டி, எண்ணையெல்லாம் கொட்டி கேஸ் ஸ்டவ்வை க்ளீன் பண்றதுக்கே எனக்கு நாலு நாளாச்சு”
“இ..”
“’இதுக்குதான் நான் சமையலறைப் பக்கமே வர்றதில்ல’ன்னு சாக்கு சொல்லாதீங்க ஒடனே.. உதவி பண்றதை ஒழுங்கா பண்ணனும்”
“நா..”
“ஏதாவது சொல்லீட்டா மட்டும் கோவம் வரும். உம்முன்னு இருந்துடுவீங்க. நான் மட்டும்தான் எல்லாத்தையும் தலைல போட்டுக்கணும். இவருக்கு எதைப் பத்தியும் கவலை கெடையாது”
“ஆ..”
“ஆஃபீஸைப் பார்க்கறதா, வீட்டைப் பார்க்கறதான்னு, என்னமோ இவருதான் ஆஃபீஸ்ல எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச் செய்யற மாதிரி ஒரு கேள்வி வருமே இப்ப..”
“எ..”
“என்னதான் பண்ணச் சொல்ற இப்பன்னு கேளுங்க. வழக்கமான பல்லவிதானே நான் பாடறேன்… உங்களுக்கு ஒறைக்கவா போகுது”
“………………….”
“அரை மணி நேரமா கத்திகிட்டிருக்கேன். உங்கப்பா வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசறாரான்னு பார்த்தியா? எல்லாம் என் தலையெழுத்து!”
No comments:
Post a Comment