பிறப்பு: சாளரம்(கார்க்கி)
பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல ரயிலில் சுருண்டு கிடந்தான் மதன். புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.
இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.
“Send me SMS if i am not reachable" .
sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent" என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.
மது.
என்ன?
நான் வேற ஒண்ணும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.
புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.
நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.
ம்ம்.. சரி.
முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.
ம்ம்
என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?
கிளம்பறீயா? ட்ரெயினுக்கு டைம் ஆச்சு.
ட்ரெய்னுக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.
ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.
எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.
எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)
ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)
இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலில் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.
விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.
லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.
செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி
“Anitha calling"...
No comments:
Post a Comment