Saturday, 22 June 2013

காதோல் பண்றாங்களாம்.. :)

முதல் வரியிலே கதை தொடங்கி விட வேண்டுமாம். இந்த விதியெல்லாம் எனக்கு தெரியாதுங்க. ஆனா கல்லூரிக்கு வந்த முதல் நாளே அவள பார்த்துட்டேன். அவள பத்தி சொல்றதுக்கு முன்னாடி என்னை பத்தியும் கொஞ்சம்… பேரு மதுசூதனன். என் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் சுனில் தான் அத மதன்னு சுருக்கி வச்சான். சுந்தரமணிகண்டவடிவேலு என்ற அவன் பேர நான் சுனில்னு சுருக்கல. அது வேற யாரோ. 12வது வரைக்கும் போளுர் பக்கம் தச்சாம்பாடியிலதான் படிச்சேன். மாவட்ட அளவுல முதலா வந்தேன். ஒரு நல்லவர்தான் சென்னையில இஞ்சனியரிங் படிக்க உதவி செய்றாரு. இவரு கதைக்கு எந்த உதவியும் செய்ய போறதில்லை. நாம நேரா அவள பார்க்க போலாம்.
அவ பேரு திவ்யா. பார்க்கவும் திவ்யமா இருப்பா. காருலதான் காலேஜுக்கு வருவா. அவ மேல பட்டா அவ கருத்துடுவாளோன்னு சூரியன் கூட அவ மேல யோசிச்சுதான் விழும். அட! காதல் எல்லாம் இல்லைங்க. அவள பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கும். அவள தங்கச்சியா எப்போதிலிருந்து நினைக்க ஆரம்பிச்சேன்னு தெரில. ஆனா எனக்கு அவள மாதிரி ஒரு தங்கச்சி இருக்கக் கூடாதான்னு ஏங்கினேன். அப்படி ஒரு நல்ல பொண்ணு. எல்லோருக்கும் நல்லதையே நினைப்பா. எல்லோர் கூடவும் சகஜமா பழகுவா. என் கூடவும்.
என் பக்கத்துலதான் உட்காருவா. எனக்காக தயிர்சாதம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வருவா. ஹாஸ்டல்ல போடுற தயிர் சாதம் ****ராட்டும் இருக்கும். அந்த வார்த்தை கூட அவளுக்கு புடிக்காது. கிராமத்தான் எப்படி பேசுவான்னு கேட்டா உன்னை மாத்துறேண்டான்னு சிரிப்பா. நான் மாறினா சிரிப்பா இருக்கும்ன்னு தெரிஞ்சுதான் சிரிச்சாளோ என்னவோ. பெசண்ட் நகர், சத்யம்ன்னு சுத்தாம எனக்கு புடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போய்  சென்னைய அழகா காமிச்சா. அம்மா அப்பாவ விட்டு இருக்கிற கஷ்டமே தெரியாம பார்த்துக்கிட்டா. காலேஜ்ல இருந்த சீனியர் எல்லாம் என்னை மச்சான்னு தான் கூப்பிடுவாங்க. நிறைய பேர் அவகிட்ட லவ் லெட்டர் எல்லாம் கொடுக்க சொல்லியிருக்காங்க. எதுவுமே அவளுக்கு தெரியாம பார்த்துக்கிட்டேன். ஒரு வருஷம் எப்படி ஓடுச்சுன்னே தெரில. எக்ஸாம் வந்துடுச்சு. நல்லபடியா எழுதினேன். அவதான் காரணம்.
  கடைசி எக்சாம் முடிஞ்ச அடுத்த நாள் கடைசி வருஷ பசங்களுக்கு ஒரு செண்ட் ஆஃப் ஃபங்க்‌ஷன் இருந்துச்சு.  அவ அப்பா தான் சீஃப் கெஸ்ட்டா வந்தாரு. ஆமா அவங்க அப்பா பெரிய தொழிலதிபரு. ஒரு நடிகையை பார்த்து கல்யாணாம் பண்ணிக்காம இவங்க அம்மா கூடவே வாழுற நல்ல தொழிலதிபர். இந்தியாவே அவர பத்தி பேசுதுன்னு நினைக்கிறேன். அவர் கிட்ட என்னையும், நண்பர்களையும் அறிமுகப்படுத்தினா. எல்லோரும் ஹலோ அங்கிள், ஹாய் அங்கிள்ன்னு சொன்னாங்க. நான் மட்டும் நல்லா இருக்கிங்களாப்பான்னு கேட்டேன். என்ன நினைச்சரோ? கோவமா அவள பார்த்து “வாட் இஸ் திஸ் திவ்யா”ன்னு கோவமா போயிட்டாரு.திவ்யா எவ்ளோ சொல்லியும் கேட்காம வேகமா போயிட்டாரு. எல்லோரும் என்னை காட்டான்னு திட்டினாங்க.திவ்யாவும் என்னை முறைச்சிட்டு கூடவே போயிட்டா. ரெண்டு நாள் வெயிட் பண்ணிட்டு நானும் ஊருக்கு போயிட்டேன். என்னை மாதிரி ஒரு கிராமத்தான மருமகனா மட்டும் இல்ல, மகனா கூட ஏத்துக்க மாட்டாங்கன்னு அப்பதான் தெரிஞ்சுது.
மே மாசத்துல ஊரே காய்ஞ்சு போய் இருக்கும். தச்சாம்பாடியும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா நான் இன்னும் மோசமா காய்ஞ்சு போயிட்டேன். என்னடா மதுசூதனான்னு பழைய பேரு மறுபடியும் வச்சிட்டாங்க.. அவகிட்ட பேச கூட முடியல. ஆமா. அவ லீவுக்கு லண்டனோ,நார்வேயோ போயிருந்தா. ஒரு மெயில் கூட இல்ல. மூணு நாளைக்கு ஒரு தடவ சேத்பட் வந்து பிரவுசிங் செண்டருக்கு அழுததுதான் மிச்சம். ஜூலை மாசம் காலேஜுக்கு வந்தப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு. ஆனா அவ வரல. பாஸ்போர்ட்ல ஏதோ பிரச்சினை ஆகி ஆகஸ்ட் மாசம் தான் வந்தா. வந்தப்புறமும் என்கிட்ட சரியாவே பேசல. நான் பேச போனப்ப எல்லாம் ஏதாவது சாக்கு வச்சு அவ ஃப்ரெண்ட்ஸ் கூட போயிடுவா. தனியா இருக்கிறப்ப பேசினா பேசாமலே போயிடுவா.
அன்னைக்கு ரக்‌ஷா பந்தன். பசங்க எல்லாம் பொண்ணுங்க ராக்கி கட்டிடுவாங்கன்னு பயந்து ஓடிட்டு இருந்தாங்க. நான் மட்டும் திவ்யாவுக்கு கொடுக்க பாக்கெட் நிறைய சாக்லெட் வாங்கிட்டு போனேன். கேண்டின்ல இருக்கிறதா இன்னொரு திவ்யா சொன்னா. நானும் போனேன். எனக்கு ராக்கி கட்ட மாட்டியான்னு கேட்டேன். முறைச்சிட்டே இருந்தவ அழ ஆரம்பிச்சிட்டா. என்ன ஆச்சோன்னு இன்னொரு திவ்யாவ போய் கேட்க சொன்னேன். பாவி மக.  நான் இல்லாம வாழ முடியாதாம். எத்தனை கதை படிச்சிருக்கிங்க?  அதையெல்லாம் சொன்னா. என்னை லவ் பண்றாளாம். :(

--
KarkiBava

No comments:

Post a Comment