Thursday, 29 March 2012

கூடங்குளம் - ஒரு பார்வை

பிறப்பு : நண்பர் நண்டு  அவர்களின் வலைபதிவிலிருந்து ...


$ நடுத்தரவர்கத்தினர் மற்றும் சிறு,குறு தொழில் முதலாளிகள் - தமிழக அரசு
மக்களை மக்களுக்கெதிராக திசை திருப்பிவிடும் மகா மட்டமான கீழ்த்தரமான அரசியல் தந்திரம். நாளொன்றுக்கு பத்து மணி நேரத்துக்கும் மேல் மின்தடை.(நான் சொல்வது சென்னைவாசிகளுக்கல்ல. சென்னை மட்டுமே தமிழகம் அல்ல.) மக்கள், "என்ன காரணம்? ஏன் இந்த மின்தடை?" என்று கேட்கும் போது, "ஏதோ கூடன்குளமாம்... அங்க இருக்குற அணு உலைய அந்த ஊர் ஜனங்க தொறக்கவிடுலையாம். அது மட்டும் வந்துடுச்சுனா இந்த கரண்ட்டு பிரச்சினையே இருக்காதாம்" என்கிற மேம்போக்கான பதிலை கிளப்பிவிட தெருவுக்கொரு அணு விஞ்ஞானி இல்லாமலில்லை. சிறு , குறு தொழிலாளிகள் - முதலாளிகள் மின் தடை மற்றும் வார மின் விடுமுறை இவற்றால் எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள், மாணவர்களின் பொதுத்தேர்வு காலத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் அவர்களுக்குள் ஏற்படுகின்ற மன அழுத்தங்கள், நடுத்தர வர்க்கம் அன்றாடம் பொழுதை கழிக்க அவசியமான மின்சாதனங்களான தொலைகாட்சி, குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறி, அரைப்பான் போன்றவற்றை குறித்த நேரத்திற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் - அதானால் ஏற்படும் எரிச்சல் - "அட! இந்த கூடங்குளம் அணு மின் உலைய திறக்க சொல்லுங்க!" எனும் ஆவேச வரிகளை வெகு இயல்பாக வரச்செய்கின்றன. இதற்கு முழு காரணம் தமிழக அரசின் மெத்தனப்போக்கு. பிரச்சினையின் வீரியத்தை உணராமல், அதை மக்கள் பக்கம் தள்ளிவிடப்பார்க்கிற மலிவான அரசியல் தந்திரம்.

$ எதிர்கட்சிகள் - தமிழக அரசு
தி.மு.க தலைவர் சில நாட்களுக்கு முன் மின் பற்றாக்குறையைப் போக்க கூடங்குளம் அணுவுலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று அறிக்கைவிட்டார். ஜெயா அரசு அடுத்த சில நாட்களில் ஒரு குழுவை கூட்டி விவாதித்து, அணுவுலை விரைவில் அதன் பணிகளைத் தொடங்கும் என அறிவிக்கிறார். அடுத்த நாளே கூடங்குளம் போராட்டக்காரகளுக்கு ஜெயலலிதா துரோகம் இழைத்துவிட்டார் என்று பேட்டியளிக்கிறார். எல்லா பிரச்சினைகளையும் அரசியலாக்க வேண்டும் என்பதே நம்மூர் அரசியல்வாதிகளின் கொள்கை போல.வைகோ, எழுத்தாளர் ஞானி உள்ளிட்ட சிலர் அறிவுப்பூர்வமான சில கேள்விகளை முன்வைத்தாலும் கண்டுகொள்ள ஆளில்லை.

$ மத்திய அரசு - தமிழக அரசு
போதிய நிதி ஒதுக்குவதில்லை, கூட்டணியில் இல்லாத கட்சி ஆளும் மாநிலம் என்பதால் மாற்றன்தாய் மனப்பான்மையுடன் எங்களை நடத்துகிறது என காரணம் சொல்லி மத்திய அரசின் திட்டத்தை வேடிக்கை பார்கிறார் ஜெயலலிதா. மின் உயர்வைப்பற்றி கேட்டால், அது மின்சார வாரியம் எடுக்கும் முடிவு. அதில் அரசு தலையிட முடியாது என்கிறார்.

$ விஞ்ஞானி
அப்துல்கலாம் - முன்னாள் குடியரசுத்தலைவர். ஓர் ஏரோனடிகால் என்ஜினீயர். ராக்கெட் தொழில் நுட்பத்தில் மிகுந்த அனுபவம் உடையவர்.கூடங்குளத்தை ஓர் இரவில் பார்வையிட்டார். அறிக்கை தயாரித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாசித்துக்காட்டினார். சாராம்சம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது. ஏனையா... முன்னாள் முதல் குடிமகனாக இருந்த நீர் குடிமக்களை சந்தித்திருக்க வேண்டாமா? அவர்களின் சந்தேகங்களை போக்கியிருக்க வேண்டாமா?

$ போராட்டக்காரர்கள் - தமிழக அரசு
அங்குள்ள பிரச்சினை என்ன? அங்குள்ள மக்களின் மன ஓட்டம் என்ன? அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்ன? இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அவர்கள் முன் விளக்காமல் ஒரு குழு அமைத்து அவர்கள் சொல்வதை அமலாக்கியிருக்கிறார் செல்வி ஜெயலலிதா.

ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்!
தேர்தலின் போதும் ஒரு குழு அமைத்து உங்களின் பிரச்சாரத்தை அவர்கள் முன் மட்டும் செய்யலாமில்லையா? ஏன் ஊர் ஊராக, தெருத்தெருவாக மக்களின் முன் சென்று ஓட்டுக்கேட்கிறீர்கள்?

No comments:

Post a Comment