நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்தது. அது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்து, இன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறது. பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும் வருகின்றோம். ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில், உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).
அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயே, இவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள். அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும், எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாது. அந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும், அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
"என்ன விளையாடுகிறீர்களா? அது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறது" என நீங்கள் அலறுவது புரிகிறது. கத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காது. அத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காது. அத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான். இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும், எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால், குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானா? இல்லையா? என்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாது. இவையெல்லாம் வேறு ஏதோ சித்திரங்கள்' என்று சொல்லி நானும், நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம். ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லை, இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையே' என்ற முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில், எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான். அந்தப் பொருள் என்ன தெரியுமா? பாட்டரிகள்.
"என்ன பாட்டரிகளா? கி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள். நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு, இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றன. இவை பற்றி பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இவை எம்மை யோசிக்க வைக்கின்றன. உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.
சரி, இவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால், இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்? இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.
அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்று அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன். அதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள்.
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன், அதே உடைகள், காலணிகள், தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின் உச்சமல்லவா?
எப்பொழுதும் விழிப்புணர்வு என்பது எமக்கு மிக அவசியமானது. நாம் எல்லாவற்றையும் நம்புகிறோம். எல்லாரையும் நம்புகிறோம். அரசியல்வாதியாக இருந்தாலென்ன, மதவாதியாக இருந்தாலென்ன, எழுத்தாளனாயிருந்தாலென்ன, எல்லாரையும் சுலபமாக நம்பிவிடுகிறோம். எமது இந்த நம்பிக்கையையே பலகீனமாகக் கொண்டு, தப்பான கருத்துகளை எம்முள் விதைப்பதற்கு ஒரு கூட்டமே எம்முன்னே காத்திருக்கிறது. அதனால்தான், அடிப்படையில் குறைந்தபட்சமாவது சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது அறிவியல். பல விசயங்களுக்கு விடைகள் இல்லாதபோதும், தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க, அறிவியல் எம்மை வற்புறுத்துகிறது. ஆதாரமில்லாத எதையும் அறிவியல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதில்லை.
ஒன்றைச் சரியாகக் கணிப்பது என்றால் என்ன? தர்க்க ரீதியாக சிந்திப்பது என்றால் என்ன? என்பது பலருக்குத் தெரிவதில்லை. பரீட்சைகளில் வரும் வினாத்தாள்களில் ஒரு வினாவுக்கு நான்கு பதில்கள் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதில் சரியான விடையைத் தெரிந்தெடுப்பது சரியான கணிப்பு. அதே நேரத்தில் சரியான விடை எதுவென எமக்குத் தெரியாத பட்சத்தில், தப்பான பதில்கள் எவையாயிருக்கும் எனச் சிந்தித்து, அவற்றை நீக்குவதன் மூலம் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் தர்க்க ரீதியாக முடிவெடுப்பது என்பது.
ஓவியத்தில் நாம் கோடுகளையும், நிறங்களையும் படிப்படியாக, சேர்த்துச் சேர்த்து முழு ஓவியத்தைப் படைக்கின்றோம். ஆனால் சிலையில், அதைச் செய்யும் கல்லில் இருந்து தேவையற்ற பாகங்களை படிப்படியாக நீக்கி, முழுச் சிலையையும் வடிக்கிறோம். ஒன்று சேர்த்தல், மற்றது நீக்கல். இரண்டும் இறுதியில் முழுமையான படைப்பாய் மாறுகின்றன.
ஒரு விண்வெளி மனிதன் கிருஸ்தவத் தேவாலயத்தில் சிலை வடிவமாக இருக்கும் படங்களைக் கடந்த பதிவில் தந்தது ஞாபகம் இருக்கலாம். அந்தக் கிருஸ்தவ தேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள 'சலமன்கா' (Salamanca) என்னும் ஊரில் இருக்கிறது. அந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர். அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப் பயணியின் உருவம் வரமுடியும்? அதற்குச் சாத்தியம் உண்டா? எனச் சிந்தித்தால், சாத்தியமே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். அந்த உருவத்தில் இருக்கும் காலணி முதல் ஜாக்கெட் வரை எல்லாமே, தத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான விசயம். மாயாக்களோ அல்லது எகிப்திய பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக் கொடுத்தாலும், இவ்வளவு தத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்தது. இந்த தேவாலயம் 1992ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட போது, இந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒரு போத்துக்கேய சிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அது உண்மையாக 800 வருடப் பழமை வாய்ந்ததல்ல.
இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லது. இனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்........!
மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பமே மாயனின் அதி உச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 'என்னடா, இந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே' என்று நினைக்கலாம். நான் சொல்லப் போகும் விசயம், மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாக அமைந்த ஒன்று. உங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களும், அறிவியலாளர்களும் இதுவரை உலகத்தில் நடைபெற்ற அனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்கு அவிழ்த்துக் கொண்டே சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூடத் தோற்ற ஒரு இடம் உண்டென்றால், அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்.
அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? சொல்கிறேன்......!
மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின் கண்ணில் தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்று, அதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்தது. அந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!
"அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?" என்றுதானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். முழுவதும் சொல்லிவிடுகிறேன். ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.
அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல......! அது ஒரு 'கிறிஸ்டல்' மண்டை ஓடு.
ஆம்! 'கிறிஸ்டல்' (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது.
இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் 'கிறிஸ்டல்' என்பது பற்றி நான் முதலில் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும். கிறிஸ்டல் என்பது சாதாரண கண்ணாடியை விட வலிமை வாய்ந்த, கடினமான ஒரு மூலப் பொருள். கண்ணாடியிலும் கிறிஸ்டல் உருவாக்கப்படும் என்றாலும், 'குவார்ட்ஸ்' (Quartz) போன்ற பலம் வாய்ந்த மூலப் பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்த வகைக் கிறிஸ்டலை வெட்டுவது என்பது, இன்றைய காலத்திலேயே, மிகக் கடினமானது. வைரம் போன்றவறால்தான் அதை வெட்ட முடியும். அல்லது நவீன 'லேசர்' (Laser) தொழில் நுட்பத்தினால் வெட்டலாம்.
சரி, மீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா!
'மிச்செல் ஹெட்ஜஸ்' (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னா ஹெட்ஜெஸ் (Anna Hedges). 1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்த இடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……!
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம் பழமையானது தெரியுமா…? 5000 வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும். அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு.
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த 'ஹூவ்லெட் பக்கார்ட்' (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒரு பதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இது சாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட, நவீன கருவிகள் இல்லாமல் இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்க முடியாது.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால், நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள். அவ்வளவு மர்மங்களை அடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு கிடைத்ததற்கு அப்புறம், மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில் ஆராய்ந்தால் கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாக இருக்கின்றன. இது பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் என்னும் அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை அடிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு 'இன்டியானா ஜோன்ஸ் அன்ட் த கிங்டொம் ஆஃப் த கிறிஸ்டல் ஸ்கல்' (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg).
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பது உண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம். அவர்தான் மேலே நான் சொல்லிய மிச்செல் ஹெட்ஜெஸ்.
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச் சாத்தியமானது….?
குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..?
அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..?
மாயாக்கள் என்ன, மனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது!
அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா....?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில், அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர், பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்தது. மொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவை, குவார்ட்ஸ் என்னும் கனிமத்தினாலும், சில 'அமெதிஸ்ட்' (Amethyst) என்னும் ஆபரணங்கள் செய்யும் ஒரு வகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும்.
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான்.
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள் மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொண்டார்கள். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்தக் காரணம் என்ன….? மிகுதி ஐந்து மண்டை ஓடுகளும் எங்கே போயின? அவை கிடைத்தால் எமக்கு ஏதாவது நன்மைகள் உண்டா?
மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாக பதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர். அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு, மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.
இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தே வாழ்கிறார்கள். இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார். ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி, பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது.
பகுத்தறிவுவாதி, பகுத்தறிவுவாதி அல்லாதவர் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவரை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். தான் நினைப்பது மட்டும்தான் சரி என்னும் நினைப்பால் இருவருமே அடுத்தவனை அலட்சியப் படுத்துகின்றனர். தவறாக மதிப்பிடுகின்றனர். ஆனால் கோட்பாட்டு ரீதியில், இந்த இரண்டுவிதமான மனிதர்களுக்குமிடையில், நூலிழை போல இன்னும் ஒன்றும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுதான் 'மிஸ்டரி' (Mystery) என்று சொல்லப்படும் 'விடை தெரியா விந்தைகள்'. விடை தெரியாத பல விந்தைகள் இன்னும் உலகில் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கான விடையின்றி, காரணங்களே தெரியாமல் பல விசயங்களும், மர்மங்களும் எம்மிடையே இருந்து வருகின்றன.
இன்று எமக்கு இருக்கும் நவீன அறிவை வைத்துக் கொண்டும் கூட, அவற்றின் காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணங்கள் தெரியப்படுத்தப்படாத காரியங்களை அறிவியல் முழுமையான உண்மையாக ஏற்றுக் கொள்வது இல்லை. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அதை மிஸ்டரி என்னும் ஒன்றுக்குள் அடக்கி, அதன் விளக்கத்தை அறிவியல் ஆராய்ந்து கொண்டே இருக்கும்.
ஆனாலும் எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது.
இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ‘ஏரியா 51' (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள்.
மேலே இருப்பது சாட்டிலைட் மூலமாக 'ஏரியா 51' இன் காட்சிப் படம். இந்த 'ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.
ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை, 'அலன் லூயிஸ்' (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது.
"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..."
இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது?
இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது. இந்த ஏரியா 51 ஐ, 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்.
இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக 'ஏரியா 51' உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.
இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.
இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா.....….?
கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….?
மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?
அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.
உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான். உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.
சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம் எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.
அது மட்டுமல்ல, மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன?
இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது.
செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை.......!
'பால் வெளி மண்டலம்' எனச் சொல்லப்படும் 'மில்க்கி வேயில்' (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன. இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த 'இண்டியானா ஜோன்ஸ்' படம் எடுத்திருக்கிறார்கள்.
‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால், ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Lines).
நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.
ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல், இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய, ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லை.
கலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, 'பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?' எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லை. உங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென் (Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் 'அலென் டெலெஸ்கோப் அர்ரே (Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால் பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டுவது, 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Liines) என்பதைத்தான். தமிழில் அதை நாஸ்கா கோடுகள் என்று சொல்வோமா?
அது என்ன நாஸ்கா கோடுகள்? இது பற்றி கொஞ்சம் பார்க்கலாம்………..!
தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca) என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. கோடுகள், சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று நினைத்து விடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லாமே மனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500 சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.
இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது. அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்கள்.
இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் 285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது. அதாவது கால் கிலோமீற்றர் நீளம். அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.
எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்கு எழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர், யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்? 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.
இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும். அவை என்ன?
இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின் அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள்.
கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும் இயந்திரம் போல, தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால், அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர், அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும், அந்தக் காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்க வைக்கிறது.
இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறைய யோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டு சித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'ஓடு பாதை' போல அமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடு பாதையேதானா?
இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனின் சித்திரம். யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம். இந்தச் சித்திரத்துக்கு 'த அஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.
இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ?
நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன.
இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற சித்திரத்திலும், வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும், அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.
ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒரு பிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?
இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச் சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது. நாஸ்கா அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.
உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு. அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன. இவற்றில் கிறிஸ்டல் மண்டையோடுகள், நாஸ்கா கோடுகள் ஆகிய இரண்டையும் முழுமையாகப் பார்க்காவிட்டாலும், ஓரளவுக்குப் பார்த்திருக்கிறோம். பார்க்காமல் இருப்பது சோளச் சித்திரங்கள்தான். ஆனால் அதை நாம் பார்ப்பதற்கு முன், மாயா இனத்தவர் பற்றி முழுமையாகப் பார்த்துவிட்டு வரலாம்.
மாயா இன மக்களும் உலக அழிவும்-3
No comments:
Post a Comment