Tuesday, 24 April 2012

Inception


The Best Inception Review i have ever read in தமிழ்.


Inception (2010)-1


இன்செப்ஷன்..... இந்த படத்துக்கும் தமிழ் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒண்ணுதான்... தமிழ் படங்கள்ல நடிகர்கள் நாங்க பார்க்கனுமேங்கறதுக்க முழிச்சுகிட்டு நடிப்பாங்க.. பார்க்கற நான் தூங்கிடுவேன். ஆனா இதுல நடிகர்கள்லாம் தூங்கறாங்க.. என்னாலதான் கண்ணை சிமிட்டக் கூட முடியல...
அவ்வளவு பரபரப்பு.. அவ்வளவு விறுவிறுப்பு... படம் முடிஞ்சு போகறப்போ நாம இருக்கது ரியல் உலகத்துலயா? இல்ல கனவுலகத்திலயான்னு நமக்கே சந்தேகம் வந்துரும்.. அது தான் கிறிஸ்டோபர் நோலனின் final touch!



இன்செப்ஷன் கதை பற்றி விளாவரியா பதிவு போட எனக்கு நேரம் இல்லை.. ஏன்னா வாசிக்க முதல்ல எல்லாருக்கும் கதையோட பின்னணி தெரிஞ்சுருக்கனும்.. அதனால படத்தோட முக்கியமான காரணிகளைப் பற்றி தொடர் எழுதலாம் என இருக்கிறேன். இதற்காக படத்தை இரண்டு முறை பார்த்ததுடன் பல ஆங்கில இணையத் தளங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி இருக்கிறேன்.

கதை கண்டிப்பா தேவையாருந்தா இங்க போய் பாருங்க... படத்தை பத்தின ட்ரெயிலர் வேணும்னா இங்க போய்ப் பாருங்க... நான் இதுல எழுதுவது படத்தில் சந்தேகம் இருக்கிறவர்களுக்கும் படமே புரியாதவர்களுக்கும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.

படத்தோட ஹீரோ காப்புக்கும் (லியனார்டோ டிகாப்ரியோ) அவரோட குழுவுக்கும் வேலை.. மெய்நிகரான கனவுலகத்தை (virtual reality) டிசைன் பண்ணி ஒருத்தர அவருக்குத் தெரியமலேயே கூட்டிட்டு வந்து, கனவுலயே அவரோட ரகசியங்களைத்திருடி சம்பாதிக்கறது தான்.

ஸோ படத்தோட முக்கியமான காட்சிகள் எல்லாமே கனவுகளாத்தான் வருது!! இதுக்காக காப் கனவுலகம் பத்தி ஆராய்ச்சி பண்ணினாரோ, இல்லையோ இயக்குனர் நோலன் ஆராய்ச்சி பண்ணி சில தியரிகளை உருவாக்கியிருக்கார்.

ஒரு கனவுக்குள் இருந்து கொண்டே இன்னொரு கனவுக்கு செல்லும் போது எமது மனது+மூளை இன்னும் ஆழமான கனவு நிலைக்குச் செல்கிறது, கனவுக்கும் நிகர்த்தன்மை(reality) அதிகரிக்கிறது. அதாவது ஆழமான கனவு நிலையில் உள்ள ஒருவரை எழுப்புவது கடினம். சாதாரணமாக நாம் கனவில் விழுவது போன்று தோன்றினால், திடுக்கிட்டு எழுகிறோமல்லவா அதுகூட இங்கே முடியாது.

இதைவிட ஆழமான நிலை ஒன்று இருக்கிறது. அது தான் லிம்போ. சாதாரணமாக நாம கானும் கனவுகள் எல்லாம் எமது மனதால் உருவாக்கப்படுகின்றன.(உதாரணத்துக்கு டைனோசர் பத்தின புத்தகத்தை படிச்சுக்கிட்டே தூங்கிட்டம்னா டைனோசர் பத்தின கனவுதான் பெரும்பாலும் வரும்)
ஆனா லிம்போ யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. மிக அதிக ஆழமாக கனவு காணும் எல்லோரும் அங்கே இழுத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் ஒன்று. லிம்போ மற்ற எல்லாவற்றையும் விட நிகர்த்தன்மை கூடியது. அங்கு வந்துட்டம்னா எங்களுக்கு நிஜ உலகம்னு ஒண்ணு இருக்கதாக் கூட உணர முடியாது. அங்கு இருப்பவர்களைப் பொருத்த வரைக்கும் லிம்போதான் உலகமே... லிம்போ நிலையில் இருக்கும் ஒருவரை எழுப்புவதும் சுலபமல்ல. அதனால்தான் காப்பும் மாலும் அங்கேயே பல வருடங்களைக் கழித்தனர்.

ஆழமான கனவு ஒன்னுல இருந்துகிட்டு இறந்தாலும் லிம்போவுக்குத் தான் போவாங்க. ஆனால் லிம்போவுல செத்தா நிஜ உலகத்துக்கு திரும்பிடலாம்.

கனவுலகத்தில நேரமும் மிக முக்கியமானது. நிஜ உலகத்துல 5 நிமிஷம்னா, கனவுலகத்துல அது ஒரு மணிநேரம். அதுக்கு காரணம் நாம கனவுல இருக்கும் போது எமது மூளை மிக வேகமாக சிந்திக்கும். (இதனால்தான் விஞ்ஞானிகளே ஆழமாக தூங்கினால் படித்த பாடங்கள் எல்லாம் இலகுவில் நினைவில் இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்திருக்கிறர்கள் போலும்). நாம ஆழமாக கனவுக்குள் கனவு மாதிரியான ரேஞ்சுக்கு போகும் போது மூளை சிந்திக்கும் வேகம் இன்னும் அதிகமாகும்.
கனவில் காட்சிகள் எல்லாம் மிக வேகமாக உருவாக்கப்படும். லிம்போ நிலையில் 5 நிமிடம் பல தசாப்தங்கள் வரை செல்லும்.

இறுதிக்கட்ட காட்சியில் சாய்டோ லெவல் 1ல் பட்ட குண்டினால் இறக்கிறார். இதனால் அவர் லிம்போவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். காப் சைட்டோவைக் காப்பாற்ற கொஞ்ச நேரத்திலேயே (நிஜ உலகின் படி) வந்துடுவார். ஆனால் வந்து பார்க்கும் போது சாய்டோவுக்கும் காப்புக்கும் வயது கூடியிருக்கும். (சாய்டோ சாகப்போற கிழவனைப்போல் இருப்பார்). இதற்கு காரணம் காப்புக்கு அவரைக் கண்டுபிடிக்க எடுத்தது உண்மையாகவே சில நிமிடங்கள், ஆனாலும் லிம்போவில் அது பல வருடங்களாக கணிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக நாம் தூங்கும் போது கனவு கண்டு, எழும்பும் போது கனவு சில வேளைகளில் ஞாபகமிருக்கும். ஆனால் கனவு நடந்த இடத்திற்கு நாம் எங்கிருந்து வந்தோம் என்பது கடைசி வரை ஞாபகத்திற்கு வராது. இதற்கு காரணம் கனவு எப்போதுமே பாதியிலிருந்து தொடங்கும்.

படத்தில் தான் வாழ்வது நிஜ உலகத்திலா அல்லது கனவுலகத்திலா என கண்டுபிடிக்க ஹீரோ காப் ஒரு பம்பரம்(tottem) வைத்திருப்பார். அது சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டே இருந்தால் அது கனவு. சுற்றுவதை நிறுத்திவிட்டால் அது நிஜம். பொதுவாக இதை வைத்துக் கொண்டு தான் அவர் தீர்மானம் எடுப்பார்.

கடைசி காட்சிகளில் லிம்போவில் காப் - மனைவி காட்சிக்கு பின் காப் மீண்டும் லிம்போவில் கடற்கரையில் ஒதுங்குகிறார். அவரை சாய்டோவின் லிம்போ உலக ஆட்கள் சாய்டோவிடம் பொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். அப்போது சாய்டோ காப்பின் பம்பரத்தை பார்க்கும் போதும், அவருடன் கதைக்கும் போதும் தான் பழைய ஞாபகங்கள் வருகின்றன. இதனால் அவருக்கு லிம்போவின் நிகர்த்தன்மை மீது சந்தேகம் எழுகிறது.(questioning the reality) லிம்போ லிம்போதான் என்று தெரிந்து கொண்ட பின்புதான் அவர்கள் நிஜ உலகத்திற்கு வருகிறார்கள் என்றால் லிம்போவின் நிகர்த் தன்மையை நீங்களே அளவிட்டுக் கொள்ளலாம்.

கிக்
கனவுல இருக்க ஒருத்தரோட கனவைக் கலைக்கும் முறைதான் கிக். இப்போ நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது யாராவது நம் மேல தண்ணி தெளிச்சா, அது கனவுல பெரிய சுனாமி ரேஞ்சுல கூட தெரியலாம். சாதாரணமா கனவு கான்றவங்களை அடிச்சோ, தண்ணில தள்ளியோ எழுப்பலாம். ஆனால் க்ளைமேக்ஸில் போடும் கிக்குகளே வேற... க்ளைமேக்ஸில் நிஜ உலகத்துல நின்னுகிட்டு தூங்குறவங்களை எழுப்ப யாரும் இல்லை. கனவுக்குள்ளேயே தான் கிக்கெல்லாம். அதனால கிக்கு வாங்குறவங்களுக்கு நிஜத்தில் வலிக்காது. கிக்கை உணரனுமேங்கறதுக்காக பாம் வைச்செல்லாம் தகர்ப்பாங்க...

ஆனா கிக்கு வைக்க முதல்ல அலாரம் மாதிரி ஒரு french பாட்டு போட்டுவிட்டுடுவாங்க. கிக் வாங்கப்போறவங்க பாட்டு கேட்டவுடனேயே டக்குனு அவங்களோட மீதிமிருக்க வேலையெல்லாம் முடிச்சுகிட்டு நிஜ உலகத்துக்கு வர தயாராகிடனும்.

இன்செப்ஷனில் ஏகப்பட்ட புதுமையான பொருட்கள் வருகின்றன. இருந்தாலும் அவற்றில் கதைக்கு மிக முக்கியமானவைடாட்டம்கள்(tottem). டாட்டம் எனப்படுவது நாம் இருப்பது கனவுலகத்திலா, நிஜ உலகத்திலா என அறிந்து கொள்ள எமக்கு உதவும் சிறு பொருளாகும். படத்தில் மொத்தம் 4 பேர் டாட்டம்கள் வைத்திருக்கினறனர்(மால் நீங்கலாக). ஒவ்வொருத்தரின் டாட்டமும் வித்தியாசமானது. அவரவர் டாட்டமை அவர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவர்.



1. பம்பரம்
ஹீரோ காப் உபயோகப்படுத்தும் டாட்டம் இதுதான். அவரது மனைவியான மாலினால் தான் இது டிசைன் பண்ணப்பட்டது. பம்பரத்தை சுற்றி விடும் போது அது சுற்றிக் கொண்டே இருந்தால் அது கனவுலகம். சிறிது நேரத்தில் அது கீழே விழுந்தால் அது நிஜ உலகம் என தெரிந்து கொள்வார்கள்.

2. தாயக்கட்டை
ஆர்த்தரால் உபயோகப்படுத்தப்படும் டாட்டம் தான் இந்த தாயக்கட்டை(loaded dice). இதை உருட்டிவிடும் போது ஆர்த்தர் மனதில் ஒரு எண்ணை நினைத்துக் கொள்வார். கனவுலகமாயிருந்தால் இவர் நினக்கும் எண்ணைத் தவிர எல்லாம் தாயக்கட்டையில் வரும். நிஜ உலகமாக இருந்தால் நினைத்த எண் வர வாய்ப்புண்டு.

3. பிஷப்
சதுரங்கத்தில் உபயேகப்படுத்தும் பிஷப் எனும் காயைத்தான் அட்ரியானியும் தனக்கென உருவாக்கிக் கொள்வாள். அதன் நிறையில் ஏற்படும் வித்தியாசத்தைக் கொண்டு அது கனவுலகமா? இல்லை நிஜ உலகமா? என்பதை அவளே யூகித்துக் கொள்வாள்.

4. போக்கர் சிப்ஸ்
இது ஏமஸின் டாட்டம். கனவுலமாக இருந்தால் இரண்டு சிப்ஸையும் உரசிக் கொண்டால் போலி சிப்ஸ்கள் உருவாகும். இதன் பயன் நேரடியாக எமக்குத் தெரியாது. ஆனால் ஆர்த்தருக்கும் காப்புக்குமான உரையாடலைக் கொண்டு இதன் பயனை யூகிக்க வேண்டியுள்ளது.



இன்செப்ஷனில் வரும் முக்கியமான சாமான்களில் இன்னொன்றுஎல்லையில்லா படிக்கட்டு(never-ending staircases). இது ஒரு paradoxical object. இதை ஏற்கெனவே நீங்கள் ஏதாவதொரு optical illutionகளில் பார்த்திருக்கக் கூடும். அதாவது நான்கு தட்டையான (படிகளுக்கிடையான உயரம் குறைந்த) படிக்கட்டுக்கள் சதுர வடிவில் இணைக்கபட்டு இது உருவாக்கப்படும். இதில் நீங்கள் நடந்தால் கடைசி வரை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான். இந்த மாதிரியான மாடலை உருவாக்கச் சொல்லி ஆர்த்தர் அட்ரியானிக்கு அறிவுறுத்துவான். அது க்ளைமேக்ஸில் லெவல் 2ல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இவை தவிர கனவுகளுக்குள் ஊடுருவ உதவும் கனவு மெஷின் மிக முக்கியமானது. இது இல்லாவிடின் ரென்டு பேர் ஒரே கனவில் சேர முடியாது. இது சின்னதா ஒரு சூட்கேஸ்ல செட் பண்ணப்பட்டு இருக்கும். இதோட கேபிள்களை திருடுறவர்களுக்கும், திருட்டுப் போக போறவர்களுக்கும் இணைத்து விட்டால் வேலை ரெடி. இதால கனவுக்கு வடிவம் கொடுக்கத்தான் முடியுமே தவிர கனவைக் கலைக்க முடியாது.






ஒரு கனவு வேட்டையை தனியா ஒரு ஆள் செய்ய முடியாது. அதுக்காகத் தான் படத்தில் இன்செப்ஷனுக்காக ஒரு டீமே திரட்டப்பட்டு ஒவ்வொருத்தருக்கும் சில பிரத்தியேகமான வேலைகள் கொடுக்கப்பட்டன. அந்த வேலைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
(திருடப்படப்போறவரை தற்காலிகமாக சப்ஜெக்ட் என எடுத்துக்கொள்வோம்)

1. பிரித்தெடுப்பவர் (Extractor)
கனவுகளிலிருந்து ஒரு சீக்ரெட்டை எப்படிப் பிரித்தெடுப்பது அல்லது ஒரு ஐடியாவை எப்படி விதைப்பது என்பது பற்றின அறிவு இருக்கவர்தான் இந்த வேலையை செய்யனும். 
இவருதான் கிட்டத்தட்ட க்ரூப்பில மிக முக்கியமானவர் (கேப்டன் மாதிரி... விஜயகாந்தை குறிப்பிடவில்லை). இந்த கதையில் ஹீரோ காப் தான் இந்த பிரித்தெடுக்கும் வேலையை செய்கிறார். காப்புக்கு மட்டும்தான் சப்-கான்ஸியஸ் நிலையில வார்த்தைகளால தன்னோட இலக்கை சாதிக்க முடியும். இந்த படத்துல சப்ஜெக்டோட பேசி அவர்களோட வாயில இருந்து உண்மைய வரவழைக்க முடியும்.

2. வடிவமைப்பாளர் (Architect)
கனவை டிசைன் பண்ண வேண்டிய முக்கியமான பொறுப்பு இவர்கிட்டத்தான் இருக்கு. இவர்தான் கனவுல லெவல்களை உருவாக்கி அதை நேர்த்தியான தரவுகளோடு (detailed) வடிவமைப்பார். பிறகு சப்ஜெக்டை கனவுக்கு அழைத்து வருகையில் அவரது சப்-கான்ஸியஸ் மற்றும் நினைவுகள்ல இருந்து இன்னும் சில தரவுகள்(உ.ம்- சப்ஜெக்ட் வாழும் தெரு, கூட வேலை பார்ப்பவர்கள்) எடுக்கப்பட்டு அவை ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கனவுடன் இணக்கப்படும். இதனால் சப்ஜெக்டுக்கு கனவு மேல் டவுட் வராது (நிகர்த்தன்மை கூட்டப்படுகிறது)

வடிவமைக்கப்படுவது கனவுதான் என்பதால் நிஜ உலகத்தில் சாத்தியமே இல்லாத மாதிரியான புதிர்களையும் வடிவமைப்பாளரால் உருவாக்க முடியும். இந்த படத்தில் ஆர்க்கிடெக்டாக வருபவர் அட்ரியானி.

3. கனவு காண்பவர் (Dreamer)
ஆர்க்கிடெக்டும், கனவு காண்பவரும் எப்போதும் ஒருத்தராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்க்கிடெக்ட் கனவை பிளான் பண்ணிட்டு, கனவு காண்பவருக்கு அதைப்பற்றி சொல்லிக் கொடுப்பார். கனவு காண்பவர்தான் அந்த பிளானுக்கு செயல் வடிவம் கொடுப்பார். இவரோட மனதுக்குள்ள தான் சப்ஜெக்டோட சப்-கான்ஸியஸ் உள்வாங்கப்பட்டு விம்பங்கள் உருவாக்கப்படும். இவர் ஒழுங்கா தரவுகளை கனவுக்குள் கொண்டு வராவிட்டால், சப்ஜெக்டுக்கு கனவு மேல சந்தேகம் வந்துடும்

இப்ப கனவு ஒரு கிரிக்கட் மேட்ச்சுன்னு எடுத்தா கனவு காண்பவர் தான் ஸ்டேடியம்.
வடிவமைப்பாளர்தான் போட்டியை ஒழுங்குபடுத்தும் கிரிக்கெட் சபை
பிரித்தெடுப்பவர்தான் விளையாடப்போற அணி, சப்ஜெக்ட் அவருக்கு எதிரணி
பிரித்தெடுப்பவரோட அணி வெற்றி பெற்றா, சப்ஜெக்டுக்கு கேம் ஓவர் !!

இவர்கள் தான் மிக முக்கியம். மற்றவர்கள் கீழே வருவார்கள். சரி இப்ப அந்த மெயின் கனவு வேட்டை. இது மொத்தம் 3 கனவு நிலைகளாக பிரிக்கப்பட்டது. இந்த வேட்டைக்கு சென்றவர்கள்- காப், ஆர்த்தர், அட்ரியேன், ஏமஸ், யூசுப், சாய்டோ, பிஷர்(சப்ஜெக்ட்). ஒவ்வொரு கனவு லெவல்லயும் வேலை முடிஞ்சவுடன் கனவு காண்பவர் மட்டும் பின்னிற்க மற்றவர்கள் எல்லோரும் அடுத்த லெவலுக்கு போயிடுவார்கள்.

ஒவ்வொரு லெவலையும் கனவு காண்பவர்கள் கீழே...

லெவல் 1- மழை நகரம்
இந்த லெவலை யூசுப் கனவு காண்கிறான். அட்ரியேன் டிசைன் பண்ண நகரத்தில் மழை எதுவும் இல்லை. யூசுப் கனவு காண முதல் பிளேனில் வரும் போது நிறைய ஷம்பெய்ன் குடித்திருந்தான். தூங்கும் போது அவனுக்கு அவசரமாக பாத்ரூம் போக வேண்டிய தேவை போலும். அதன் விளைவுதான் கனவில் மழையாய் கொட்டுகிறது. இவனது கனவு என்பதால் எல்லாரும் தூங்கி 2வது லெவலுக்கு போன பின்னும் கூட இவன் அதே லெவலில் வானை ஓட்டிக் கொண்டிருப்பான்.

லெவல் 2- ஹோட்டல்
இந்த லெவலை ஆர்த்தர் கனவு காண்பான். மற்றவர்கள் லெவல் 3 போன பின்பும், இவன் அங்கேயே வெயிட் பண்ணுவான். லெவல் 1ல் வான் பாலத்திலிருந்து விழுவதால், லெவல் 2ல் ஆர்த்தர் புவியீர்ப்பு குறைந்தது போல் உணர்ந்து அந்தரத்தில் பறக்கிறான்.



லெவல் 3- பனிக் கோட்டை
இந்த லெவலை ஏமஸ் கனவு காண்பான். 1வது லெவல் கிக்கான வான் பாலத்தை உடைத்து விழும் போது இந்த லெவலில் பனிச்சரிவு ஏற்படுகிறது.

 
லெவல் 4- லிம்போ
இது உண்மையாக அட்ரியானியால் வடிவமைக்கப்படவில்லை. அவர்கள் இங்கு வருவதற்கு பிளான் கூடப் பண்ணவில்லை. 3வது லெவலில் பிஷரும், சாய்டோவும் இறந்ததால் அவர்களைத்தேடியே காப்பும், அட்ரியானியும் லிம்போவுக்கு வருகிறார்கள்.

மெயின் கனவு வேட்டை பற்றி இப்படத்தில் சிறிதாக விளக்கப்பட்டுள்ளது.




மேல இருக்க 3 பேரும் தான் முக்கியம். ஆனா இவங்களும் கிளைமேக்ஸுக்கு தேவைப்படறாங்க.

4. விம்பங்கள் (projections)
ஒரு கனவில் மேற்குறிப்பிட்டவர்கள் மட்டும் இருப்பதில்லை. சப்ஜெக்டின் சப்கான்ஸியஸ் மனது மூலம் உருவாக்கப்படுபவர்கள் விம்பங்கள் எனப்படுவர். சப்ஜெக்டுக்கு பிரித்தெடுப்பாளர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள பயிற்சியளிக்கப் பட்டிருந்தால், விம்பங்களாக பாதுகாவலர்களோ அல்லது இராணுவ வீரர்களோ கூட வரலாம்!!


5. போர்ஜர் (forger)
நிஜ உலகில் கள்ளக் கையெழுத்து போட்டு ஆவணங்களை திருடுபவனைத்தான் போர்ஜர் என்பார்கள். இப் படத்தில் போர்ஜராக ஏமஸ் வருகிறான். இவனுக்கு குறிப்பிட்ட நபரின் நடை, உடை, பாவனை, கையெழுத்தை பிரதி பண்ணி நடிக்கத்தெரியும். கனவில் இவனால் குறிப்பிட்ட நபரின் உருவத்தைக்கூட எடுக்க முடியும். இவன் 1வது லெவலில் பிஷரின் தந்தையின் நெருங்கிய ஆலோசகரான ப்ரெளனிங்கின் உருவத்தை எடுத்து அவர் போலவே பேசி, அவனை ஏமாற்றி 2வது லெவலில் பிஷரின் மனதிலிருந்து புதிய சப்-கான்ஸியஸ் விம்பமான கெட்ட ப்ரெளனை உருவாக்குகிறான். அவனது விம்பத்தைக்கொண்டே அவனை இன்னும் ஆழமாக(லெவல் 3) காப்பின் புதிருக்குள் ஓடவிடுகிறான்.

6. மால்
ஹீரோ காப்பின் மனைவிதான் மால். ஒருநாள் ரென்டு பேரும் ஆழமாக தூங்கி லிம்போ லெவலுக்கு போயிடறாங்க. லிம்போவுல அவங்களுக்குன்னே சின்னதா ஒரு உலகத்தை உருவாக்கிக்கிட்டு பல தசாப்தங்கள் வாழுறாங்க. மாலுக்கு லிம்போ ஒரு கனவுதான்னு ஒத்துக்க முடியலை. அதால காப் அந்த ஐடியாவை மாலோட மனதுல விதைக்கிறான் (inception). அதால ரென்டு பேரும் ஓடுற ரயிலுக்கு முன்னால குதிச்சு தற்கொலை பண்ணிக்கறாங்க. பிறகு நிஜ உலகத்துல தூக்கத்திலிருந்து எழும்புறாங்க. ஆனா மாலுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இவள் தான் இன்னும் இன்னொரு கனவில் இருப்பதாகவே உணர்கிறாள்.

காப் அவர்களுடைய பிள்ளைகளைக் காட்டி தான் இருப்பது நிஜ உலகத்தில் தான் என ஆணித்தரமாக கூறுகிறான். ஆனால் மால் அவர்கள் வி்ம்பங்கள் தான் என பதிலளிக்கிறாள். பிறகு ஒருநாள் மால் அபார்ட்மென்டிலிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிறாள். சாக முதல்ல (காப்பும் தற்கொலை பண்ணி தன்னுடன் வர வேண்டும் என்பதற்காக) தன்னோட சாவுக்கு காரணம் காப் தான் என்று எழுதி வைத்துவிட்டு செத்துப் போகிறாள். இதனால் மனைவியைக் கொன்ற பழி காப் மீது விழுகிறது. மாலோட சாவுக்கு காரணம் தான் அவளது மனதில் விதைத்த ஐடியா தான் என்ற குற்ற உணர்ச்சி காப்புக்கு ஏற்படுகிறது. இந்த உணர்ச்சியால் அவனது சப்-கான்ஸியஸிருந்தும், நினைவுகளிலிருந்தும் மாலின் விம்பம் கனவுகளில் அவனைத் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இன்செப்ஷனோட இறுதிக் காட்சி பற்றி உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் பலவிதமான தியரிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலபேர் காப் நிஜமான உலகத்துக்கு திரும்பி அவனது பிள்ளைகளை சந்தித்தாக சொல்கிறார்கள். சிலபேர் அதுவும் ஒரு கனவுதான் என்கிறார்கள். இன்னும் சிலபேர் படம் முழுதும் காப்போட கனவுதான் என்கிறார்கள்.

படத்தை உற்று நோக்கும் போது சாய்டோவும், காப்பும் லிம்போவிலிருந்து எழும்பிவரும் சீனைத் தொடர்ந்து வரும் எல்லாக் காட்சிகளுமே ரசிகர்களின் யூகத்துக்கும், சுய சிந்தனைக்கும் விடப்பட்டுள்ளன. குறிப்பாக அதற்குப் பின்னால் வரும் எல்லாக் காட்சிகளிலும் உரையாடல்களே இடம்பெறவில்லை. காப் தொடர்ந்தும் கனவு காண்கிறானா? க்ரூப் மெம்பர்களும், குடும்பமும் விம்பங்கள் தானா? அல்லது அவன் நிஜமாகவே வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளானா? இந்தக் கேள்விகளெல்லாம் நோலனுக்குத் தான் வெளிச்சம். இருந்தாலும் ஒருசில ஆதாரங்களின் அடிப்படையில் அலசுவோம்.



* சாய்டோவால் ஒரேயொரு போன் காலைப் போட்டு காப்பின் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்க முடியுமா?

பணம் இருக்கும் கையில் தானே அதிகாரமும் இருக்கும். நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பணத்தைக் கொடுத்து சட்டங்களை வளைக்கலாம்.


* காப்பின் தந்தைக்கு காப் வருவது பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படவில்லையே.. ஆகையால் அவர் காப்பின் விம்பமாக இருக்கலாமே?

இருக்கலாம் தான். ஆனாலும் இது பிளான் பண்ணப்பட்ட ஒரு திட்டம். எனவே கண்டிப்பாக விமான நிலையத்தில் வந்திறங்கும் போது கூட்டிச் செல்வதற்காக தந்தை அழைத்திருக்கப் பட்டிருப்பார். அப்படி முன்கூட்டியே அழைத்திருக்காவிட்டாலும் விமானத்தில் போன் இருக்கிறது. அதனால் சுலபமாக கால் செய்து அழைத்திருக்கலாமே..

* படம் முழுக்க காப்பின் கனவாக இருக்கலாமே, நிஜ உலகம் இருந்தது என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லையே?

ஏன் இல்லை! படத்தில் சில தடவைகள் காப்பின் பம்பரம் சுற்றிவிட்ட பின் விழுந்ததே... அது மட்டுமல்லாது பழைய கனவு சீன்களில் காப் கையில் wedding band அணிந்திருப்பார். சில சீன்களில் band இருக்காது. அப்போ band இல்லாத சீன்களெல்லாம் கனவாக இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு.

* காப் மாலின் டாட்டமை உபயோகப்படுத்துவதால் ஒருவேளை அவரது கணிப்புகள் பொய்யாக இருக்கலாம் அல்லவா?

அந்த டாட்டமை (பம்பரம்) உபயோகப்டுத்த தெரிந்தவர்கள் மாலும், காப்பும் தான். மால் இறந்து விட்டதால், டாட்டம் பற்றிய உண்மையான விபரங்கள் தெரிந்த காப்பும் அதைப் பயன்படுத்துகிறான். அவன் பயன்படுத்துவதால் டாட்டமின் செயல்திறன் ஒன்றும் கெட்டுப் போக போவதில்லை.

* காப் திரும்பி வரும் பொழுது அவனது குழந்தைகள், அவனது நினைவுகளில் இருந்த குழந்தைகள் அணிந்திருந்த அதே ஆடைகளைத் தானே அணிந்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் காப்பின் விம்பங்கள் தானே?

அவர்கள் ஒரே ஆடைகளைத் தான் அணிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களது செருப்புக்கள் வேறுபட்டுள்ளன. IMDB ஐ பார்த்தீர்களானால் அதில் 2 விதமாக குழந்தைகளுக்கான நடிகர்களைப் பிரித்து கூறியிருக்கிறார்கள். பிலிபியாவுக்கு 3 மற்றும் 5 வயது பிள்ளையாகவும், ஜேம்சுக்கு 20 மாத மற்றும் 3 வயது பிள்ளையாகவும் நடித்திருப்தாக குறிப்பிட்டுள்ளார்கள்.


* கடைசி சீனில் காப் சுற்றி விட்ட பம்பரம் சுற்றிக் கொண்டே இருந்ததா, அல்லது சீன் கட்டாகும் போது விழும் நிலையில் இருந்ததா?

அதை நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். தெளிவான பதில் யாரிடமும் இல்லை.வேண்டுமானால் படத்தை இன்னுமொருமுறை பாருங்கள்....

படத்தின் ஆரம்ப சீன்களில் காப் தனியாக ஹோட்டல் அறையொன்றில் உட்கார்ந்து பம்பரத்தை சுற்றிவிட்டு கையில் துப்பாக்கியோடு நிற்கிறான். பம்பரம் சுற்றிக் கொண்டே இருந்தால் துப்பாக்கியால் தன்னை சுட்டுவிட்டு கனவைக் கலைத்துவிடுவான். அந்த அளவு நிஜத்தையே நாடிக் கொண்டிருப்பது அவனது இயல்புகளில் ஒன்று.

படம் முழுக்கவும் பம்பரத்தை சுற்றிவிட்டே தீர்மானத்தை எடுத்துக் கொள்வதாக காட்டப்பட்டிருக்கிறான். எனினும் இறுதிக் காட்சியில் பம்பரத்தை சுற்றிவிட்டு தீர்வைக் கவனிக்காமல் குழந்தைகளைப் பார்க்க போய்விடுகிறான். அவன் அந்த மனநிலையில் அவன் எது ரியாலிட்டி என்றோ, இன்செப்ஷன், பிரித்தெடுப்பு பற்றியோ கணக்கெடுக்வேயில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம தனது குழந்தைகளுடன் நிம்மதியான ஒரு வாழ்க்கை.
அது கனவுலகமாயிருந்தாலும் சரி, நிஜ உலகமாயிருந்தாலும் சரி...

No comments:

Post a Comment