Friday, 22 June 2012

பூம்புகார்

பிறப்பு: ராஜபாட்டை





பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
( இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. 

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.


கடலுக்கடியில் பூம்புகார்..




கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.





இது போல பல தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகின்றது .

No comments:

Post a Comment